புவிசார் அச்சுறுத்தல்; கடற்படை – விமானப்படை கூட்டு கண்காணிப்பு பொறிமுறை உருவாக்கம்

இந்து சமுத்திரத்தில் இலங்கையின் புவிசார் மூலோபாயம் காரணமாக தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலால் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளைக் கொண்ட கண்காணிப்பு பொறிமுறையொன்று அமைக்கப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வித்யாரட்ண தெரிவித்தார்.

வான்வழி மற்றும் கடல்மார்க்கமாக கொண்டிருக்கும் திறன்களைக் கொண்டு கூட்டு தொடர்பாடல் வலையமைப்புடன் விமானப்படையை உள்ளடக்கிய இணைந்த கடற்படை கட்டளையொன்று உருவாக்கப்படவிருப்பதாகவும் கூறினார். அப்படியான வலையமைப்பானது விமானப்படை புலனாய்வுத்துறை மற்றும் கடல்வழி விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கு நவீனமயமாக்குவதற்கான செயற்பாடுகளை முன்னேற்ற உதவியாக இருக்கும் என்றார்.

சூழ்நிலைகளை மேம்படுத்துவதற்கான மத்திய மயப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டைக் கொண்ட புலனாய்வு கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு இது பயனுள்ளதாக அமையும் என்று சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் பூகோல அமைவிடமானது முக்கியமாக இருப்பது இதற்கு முக்கிய காரணமென்றும் கூறினார்.

அத்திடியவிலுள்ள விமானப்படையின் ஈகிள் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ‘சமச்சீரற்ற அச்சுறுத்தல்களை தீர்ப்பதற்கான வான் சக்தி’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மூன்றாவது கொழும்பு எயார் சிம்போசியத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்தார். யுத்தகாலத்தில் விமானப்படையினர் சீரற்ற யுத்த களத்தில் கடற்படையினரை வழிநடத்துவதில் விமானப்படையினர் கணிசமான பங்காற்றியிருந்தனர். கடற்படையினருக்கு நேரடியாகக் கிடைக்காத புலனாய்வுத் தகவல்களை விரைவாகப் பெற்று அவற்றை வழங்குவதில் விமானப்படை பங்காற்றியிருந்தது.

“இந்த திறமைகளை அடிப்படையாகக் கொண்டே வான்வழியான திறமை மற்றும் கடற் வழியான திறமைகளை ஒன்றிணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. பிராந்தியத்தில் இலங்கை முக்கியமானதொரு இடத்தில் உள்ளது. குறிப்பாக ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் இராணுவ முன்னேற்றத்தில் முன்னோடியாக உள்ளது. இவ்வாறான நிலையில் பிராந்தியத்தில் அனுபவம் மிக்க முன்னோடியாக எமது விமானப்படை மாற்றமடையும் என நம்புகின்றேன்” என்றார்.