சுதந்திர முயற்சியை கைவிட கட்டலானுக்கு 8 நாள் கெடு

 

பிடியை இறுக்கும் ஸ்பெயின்

கட்டலோனிய பிராந்திய அரசு தனது சுதந்திர முயற்சியை கைவிட ஸ்பெயின் மத்திய அரசு எட்டு நாட்கள் காலக்கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால் கட்டலோனிய தன்னாட்சி அதிகாரத்தை இடைநிறுத்தி மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்படும் என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜொய் எச்சரித்துள்ளார்.

பிரதமரின் இந்த எச்சரிக்கை ஸ்பெயின் மத்திய அரசு மற்றும் அதன் வட கிழக்கு பிராந்தியத்திற்கு இடையிலான மோதலை மேலும் தீவிரமடையச் செய்யும் அபாயம் இருப்பதோடு 1981 ஆம் அண்டு தோல்வி அடைந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் ஸ்பெயினின் மிகப்பெரிய அரசியல் பிரச்சினையாக மாறி வருகிறது.

பிரதமர் ரஜொய் அரசியலமைப்பின் 155 ஆவது சரத்தை அமுல்படுத்தும் பட்சத்தில் அவருக்கு கட்டலோனிய பிராந்திய அரசை கலைக்க அதிகாரம் இருப்பதோடு அங்கு விரைவான தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளது.

ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம் பெறும் அடையான பிரகடனம் ஒன்றை கட்டலோனிய தலைவர் கார்ல்ஸ் புயிக்டெமொன்ட் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். எனினும் அந்த பிரகடனத்தை உடன் ஒத்திவைத்த அவர் ஸ்பெயின் மத்திய அரசை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

இது தொடர்பில் ஸ்பெயின் அமைச்சரவை புதனன்று அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ரஜொய் தொலைக்காட்சி ஒன்றில் கூறியதாவது, “சுதந்திர பிரகடனத்தை அமுல்படுத்துவது குறித்த குழப்பம் நிலவுவதால் கட்டலோனியா உத்தியோகபூர்வமாக சுதந்திர பிரகடனம் ஒன்றை வெளியிட்டதா என்பது பற்றி அந்த அரசிடம் விளக்கம் கேட்க அமைச்சரவை இணங்கியது” என்று குறிப்பிட்டார்.

கட்டலான் அரசு பதில் அளிக்க வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை காலம் இருப்பதாக ரஜொய் ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பின்னர் குறிப்பிட்டார். தான் சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டதாக புயிக்டெமொன்ட் உறுதி செய்தால், அதனை சரிசெய்துகொள்ள ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதிலும் தோல்வி அடைந்தால் 155 சரத்து அமுல்படுத்தப்படும்.

மத்திய அரசின் கேள்விக்கு கட்டலோனிய அரசு பதில் அளிக்குமா என்று தெளிவில்லாமல் இருக்கும் நிலையில் இது பெரும் புதிரை ஏற்படுத்தி இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

சுதந்திர பிரகடனத்தை செய்ததாக புயிக்டெமொன்ட் ஒப்புக்கொண்டால் மத்திய அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கும் என்பதோடு சுதந்திர பிரகடனம் செய்ததை மறுத்தால் தீவிர இடதுசாரி சி.யு.பீ கட்சி அவரது சிறுபான்மை அரச கூட்டணியில் இருந்து விலகிவிடும் நிலை உள்ளது.

கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி கட்டலோனியாவில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெற 92 வீத ஆதரவு வாக்கு கிடைத்திருந்தது. எனினும் இந்த வாக்கெடுப்பை கூட்டாட்சிக்கு ஆதரவானவர்கள் புறக்கணித்த நிலையில் 43 வீதமான வாக்குப் பதிவே இடம்பெற்றது.

About Thinappuyal News