குறுங்கோளில் முதல்முறை வளையம் கண்டுபிடிப்பு

எமது சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய குறுங்கோள் ஒன்றை சுற்றி வளையம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, சனி போன்ற இராட்சத கிரகங்களிலேயே இவ்வாறான வளையங்கள் தோன்றும் என்ற கோட்பாட்டை பொய்யாக்கியுள்ளது.

நெப்டியுனுக்கு அப்பால் உள்ள சூரியனை வலம்வரும் ஹயுமி என்ற குறுங்கோளிலேயே வளையம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு புளுட்டோவின் கிரக அந்தஸ்த்து குறைக்கப்பட்டதன் பின்னர் எமது சூரிய குடும்பத்தில் எட்டாவது மற்றும் தொலைதூரத்தில் உள்ள கிரகம் நெப்டியுனாகும்.

சூரியனில் இருந்து சுமார் 8 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்கும் ஹியுமி தட்டையான மற்றும் வேகமாக சூழலும் குறுங்கோளாகும். இது சூரியனை சுற்றிவர 285 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. “இந்த கண்டுபிடிப்பு எமது சூரிய குடும்பம் நாம் நினைத்ததை விடவும் பன்முகத்தன்மை கொண்டது என்பதை காட்டுகிறது” என்று இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ப்ரூனோ ஸ்கார்டி குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் வாள் நட்சத்திரங்களில் வளையங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் குறுங்கோளில் வளையம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.