தேர்தல் அரசியலுக்காய் தமிழரசுக் கட்சியின் எச்சிலை விழுங்கும் ஆயுதக்கட்சிகள்

 

தேர்தல் அரசியலுக்காய் தமிழரசுக் கட்சியின் எச்சிலை விழுங்கும் ஆயுதக்கட்சிகள்

ஈழப்போராட்ட வரலாற்றில் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டுடன் தமிழினத்தின் விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய தற்போது தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற கட்சிகள் தமது அரசியல் வயிற்றுப்பிழைப்புக்காக, கூட்டமைப்பு என்ற ஒற்றுமையை குலைத்துவிடக்கூடாது என்பதற்காக தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தமது அரசியல் நடவடிக்கைகளை இன்றுவரை நடத்திவருகின்றனர்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்கிற பழமொழிக்கமைய தற்போது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் தனியாகக் களமிறங்கத் தீர்மானித்துள்ளது. தமிழரசுக்கட்சியுடன் இணைந்து செயற்பட தயாராக இல்லை என அக்கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதேநேரம் தமிழரசுக்கட்சியில் யாரும் இணைந்துகொள்ளலாம், யாரும் வெளியேறலாம் அதனை நாம் தடைசெய்யப்போவதில்லை என்ற கருத்தை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இக்கருத்தானது புதிய கட்சிகளை உள்வாங்கும் ஒரு திட்டமாகவே தமிழரசுக்கட்சி தனது திட்டத்தை வகுத்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை யாரும் உரிமைகோர முடியாது. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் கூட கூட்டமைப்பை உரிமைகோர முடியாது என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். தேர்தல் விஞ்ஞாபனம் பற்றிக்கூறும் சுரேஸ் அவர்கள் கடந்த பல வருடங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து சாதித்தது என்ன? தனக்கு தேசியப் பட்டியல் கொடுக்கப்படவில்லை என்பதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தமிழ் மக்கள் பேரவையின் ஊடாக தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் என முன்னெடுத்தபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் மேற்கொள்ளப்பட்ட செக்மேட் தான் தற்போது நடந்துகொண்டிருக்கும் அரசியல்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பொறுத்தவரையில் தமிழரசுக் கடசியில் இருக்கக்கூடிய ஆயுதக்கட்சிகளை பிரித்தெடுத்து சம்பந்தன் போன்ற ஒரு தலைவராக செயற்படுவதையே அவர் விரும்புகின்றார்.

தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்றின் ஊடாக மூன்று ஆயுதக்கட்சிகளையும் தம்மோடு இணைக்க கஜேந்திரகுமார் எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தான் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் தான் அரசியலில் தனியான பயணம் ஒன்றை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தை புறந்தள்ளி செயற்படுகின்றது. நாம் எவ்வாறு மக்கள் மத்தியில் சென்று வாக்குக்கேட்பது என தமிழரசுக்கட்சியை குறைகூறும் சுரேஸ் அவர்கள் கடந்த காலங்களில் அரச கைக்கூலியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு மாகாணசபையைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மை. ஆனால் கடந்த கால அரசியல் செயற்பாடுகளை எடுத்துப்பார்த்தால் தலைவர் பிரபாகரனின் வாக்கை மீறி ஈ.பி.ஆர்.எல்.எவ் முதலமைச்சர் பதவியை வரதராஜப்பெருமாள் தலைமையில் கைப்பற்றியது. இந்திய இராணுவத்துடன் இணைந்து சுரேஸ் அவர்கள் செய்த கொலைகள் ஏராளம் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே இவருக்கு பிரத்தியேகமாக மண்டையன் குழுத் தலைவர் என்கிற பெயரும் சூட்டப்பட்டது.
தேசியம், சுயநிர்ணய உரிமை என்று பேசுவதற்கும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கும் சுரேஸ் பிரேமச்சந்திரனது ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தகுதியற்றவர்கள் எனக்கூறவேண்டும். தற்போது இக்கட்சியின் வரதர் அணியை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உள்வாங்க உத்தேசித்துள்ளது.

அவ்வாறான நிலை தோற்றுவிக்கப்படுமாகவிருந்தால் நிச்சயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் அணியினர் தோல்வியைத் தழுவிக்கொள்வது நிச்சயம். இக்கட்சியினர் தற்போது மூன்று பிரிவுகளாக இருக்கின்றனர். ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், வரதர் அணியே இவை. இவர்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லை. இதற்கிடையில் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு எவ்வாறு செயற்படமுடியும் என்பது அரசியல் அவதானிகளின் பிரதான கேள்வியாகும்.

தற்போதைய அரசியல் நிலைமையை எடுத்துக்கொண்டால் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு சுரேஸ் அணி விலகுமாகவிருந்தால் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்ட நிலை உருவாகும். அதேநேரம் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை விட்டு விலக சம்மதமில்லாதவர்கள். தொடர்ந்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் எச்சிலை விழுங்குபவர்களாகவே செயற்பட்டுவருகின்றனர். 30 வருடகாலப் போராட்டம், அதன் பின்னரான அரசியல் நகர்வுகள் தொடர்ந்தும் பேச்சுக்களில் நிறைவுபெற்று தோல்வியில் முடிந்ததே வரலாறு.

ஆகவே இவ்வாறான நிலைமையை மாற்றியமைக்கவேண்டும் என்பதற்காக கூட்டமைப்பின் கூட்டை கலைத்துவிட்டு வெளியேறி செயற்படவிருப்பது என்பது தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்திலிருந்து வேறுபட்டதாகவே அமைகிறது. த.தே.கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களுக்குள்ளேயே பல்வேறு பிரச்சினைகள். கூட்டமைப்பில் இருக்கக்கூடியவர்களுள் தூரநோக்கு அரசியல் அல்லது இராஜதந்திர நகர்வுகள், பூகோள அரசியல், தேர்தல் விஞ்ஞாபனம், அரசியல் யாப்பு விதிமுறைகள் பற்றி தெரிந்தவர்கள் சொற்பமானவர்களே. ஏனைய அனைவரும் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேர்ச்சி பெறாதவர்கள். அவர்களின் பெயர் விபரங்களைக் குறிப்பிட்டு அவமானப்படுத்துவது எமது நோக்கமல்ல.
தமிழ் மக்களை எவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏமாற்றியது என்கிற வரலாற்றை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து முதல் 5 வருடங்கள் சம்பந்தனின் வலது கையாக கஜேந்திரகுமார் செயற்பட்டிருந்தார். அப்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தவறாக செயற்படுகிறது என அவரது சிந்தனைக்கு எட்டவில்லை. அதன் பின் 10வருடங்களாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளராக செயற்பட்டுவந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் அவர்களுக்கும் அப்போது தெரியவில்லை. சம்பந்தனின் பக்கபலமாகச் செயற்படுகின்ற சுமந்திரன் அவர்களுக்கும் இந்த அரசியல் நெழிவுசுழிவுகள் புரியவில்லை. இந்த 3 அரசியல் தலைவர்களும் தீர்வு பற்றி வாய்திறந்து பேசுவதும் அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வுகளுக்காக பிரிந்துசெயற்படுவதும் ஒரு வேடிக்கையான விடயம்தான். இருக்கும் இடத்தில் இருந்தபோது இவர்கள் மக்களை ஏமாற்றியது என்பதுதான் இதிலிருந்து எடுத்துக்காட்டாக அமைகிறது. ஒற்றுமையாக இருந்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்று பின்னர் உங்களது கட்சி மோதல்களை ஆரம்பித்திருந்தால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். கூட்டமைப்பில் இருக்கும் வரையே ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்குப் பலம். கூட்டு உடையுமாகவிருந்தால் அது பலவீனமாக அமையும்.

தற்போது கூட்டமைப்பில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களுள் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மாத்திரமே மக்கள் செல்வாக்குடன் இருக்கின்றார். அவருடைய அரசியல் நகர்வு என்பது மக்களைக் கவர்ந்ததாகவே அன்றும் இன்றும் இருக்கிறது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது சுயநல அரசியலுக்காக மக்களை அரவணைத்துச் செல்வதில் தவறிழைத்திருக்கிறார்கள். பணத்தைக் கொடுத்துதான் ஏனைய அரசியல்வாதிகள் மக்களை விலைக்கு வாங்கினார்கள். ஆனால் இவர் அவ்வாறானவர் இல்லை. இவ்வாறான நிலையில் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடைய வெற்றி மாத்திரமே தேர்தலில் உறுதிப்படுத்தப்படும். தற்போது சுரேஸ் அவர்களால் எடுக்கப்பட்ட திடீர் முடிவை கட்சியின் அங்கத்தவர்கள் கூட விரும்பாத விடயமாகவே தெரிகிறது

. ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பது தேசத்துரோகிகளும், தமிழீழம் என்கிற கனவை சிதைத்தவர்கள் என்றுதான் மக்களுக்குத் தெரியும். இவர்களை தமிழீழ விடுதலைப்புலிகளும், தமிழர்களும் உள்வாங்கிக்கொண்டது இவர்களுக்கு கொடுக்கப்பட்ட இறுதி சந்தர்ப்பம். இவர்களும் சந்தர்ப்பத்தைச் சரிவர செயற்படுத்த அல்லது நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டார்கள். தமிழரசுக்கட்சி அஹிம்சை வழியில் செல்கின்றபோது எமக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் எதற்காக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலட்சியத்திற்காக உறுதியுடன் செயற்படவேண்டும். 


விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் தான் இதற்குத் தடைக்கல்லாக இருந்தார்கள் எனக்கூறிய ஆயுதக்கட்சிகள் இப்போது ஏன் அரசுக்கெதிராக போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஆகவே கூட்டாக இணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை வென்ற பின்னர் கட்சிகள் தத்தமது கட்சிகளை வளர்த்துக்கொண்டு உங்களுக்கான இடத்தை மக்கள் மத்தியில் பிடித்துக்கொள்ளலாம்.

தமிழரசுக்கட்சியை தவறு சொல்வதில் நியாயம் இல்லை. மூன்று கட்சிகளும் இணைந்து ஒரு குடையின் கீழ் நின்று தமிழரசுக்கட்சியைத் தோற்கடிக்கும் நடவடிக்கையில் ஏன் இறங்கக்கூடாது. இம் மூவரும் தமிழரசுக்கட்சியின் எச்சிலை விரும்பவே ஆசைப்படுபவர்கள். அதனை உணர்ந்த சுரேஸ் அவர்கள் தான் விழுங்கிய எச்சிலைத் துப்ப முனைந்தபோதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அரசுடன் தனியாகப் போராடியதைப்போன்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் போராட ஆரம்பித்திருக்கவேண்டும். இதைவிடுத்து கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஒற்றுமையை சீர்குலைக்க முனைவது தவறான விடயம். சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழரசுக்கட்சியுடன் இனிமேலும் இணைந்து செயற்படுவதில் அதிருப்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இவ்விரு கட்சிகளும் இதையே கூறியிருக்கவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஒற்றுமையாக செயற்படுவதே சிறந்தது என்பது தற்போதைய யதார்த்தபூர்வமான உண்மையாகும்.

இரணியன்

About Thinappuyal News