யாழ். அதிவேகப் பாதைக்கு அடிக்கல் நாட்டும் விழா

146
இலங்கையின் மிகப் பெரும் அபிவிருத்தி செயற்திட்டமான யாழ். அதிவேகப் பாதைக்கு இன்று அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ரம்புக்கனை மற்றும் கலேவெல பிரதேசங்களில் இன்றும், பொத்துஹரயில் நாளையும் மூன்று தடவைகளில் அடிக்கல் நாட்டி வைத்து, நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதை கம்பஹா , வத்தளை , எண்டேரமுல்லயில் இருந்து ஆரம்பிக்கின்றது. இங்கிருந்து கம்பஹா நகரைத் தாண்டும் வரையிலும் அதிவேகப் பாதை பறக்கும் பாதையாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

பின்னர் முதலாவது கட்டமாக தம்புள்ளை வரை இந்தப் பாதை நிர்மாணிக்கப்படும்.

தற்போதைக்கு நான்கு வழிப் பாதையாக நிர்மாணிக்கப்படும் அதிவேகப் பாதை எதிர்காலத்தில் தேவையேற்படின் ஆறுவழிப்பாதையாக நிர்மாணிக்கப்படுவதற்கான முறையில் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் நுழைவாயில்களாக கம்பஹா, வேயன்கொடை, மீரிகம தெற்கு, மீரிகம வடக்கு, நாகலகமுவ,பொதுஹர உள்வட்டப் பாதை, தம்பொக்க, குருநாகல், ரிதீகம, மெல்சிரிபுர, கலேவெல, நாரங்வெல உள்வட்டப் பாதை, கலகெதர, ரம்புக்கன, அலதெனிய, கன்னொருவை, தம்புள்ள ஆகிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதையின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையும், தம்புள்ளையிலிருந்து திருகோணமலை வரையும், குருநாகலையிலிருந்து கண்டி வரையும் இந்தப் பாதை விஸ்தரிக்கப்படவுள்ளது.

– See more at: http://www.tamilwin.net/show-RUmszBSYKYlo5.html#sthash.Fz2OhLPr.dpuf

SHARE