முன்னாள் போராளி கொலை! நடவடிக்கை எடுக்குமாறு கோத்தபாயவிடம்- அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

155

முன்னாள் போராளி கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் முன்னாள் போராளியும் இரு பிள்ளைகளின் தந்தையுமான கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடன் அமைச்சர் ரிஷாத் நேற்று தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மன்னார் – வெள்ளாங்குளம் – கணேசபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் என்பவரின் இழப்பு மன்னார் மாவட்டத்துக்கே ஏற்பட்ட பேரிழப்பாகவே நான் பார்க்கின்றேன்.

முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரான நகுலேஸ்வரன் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வும் பெற்று வழமையான தனது பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதுதான் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மாந்தை பிரதேச அபிவிருத்தி குழு உறுப்பினராக இருந்து – அவரது பிரதேச நலனுக்காக பல்வேறு உதவிகளை என் மூலமாக பெற்றுச் சென்றிருக்கிறார்.

என்னைச் சந்திக்கும் போதெல்லாம் அதிகமாக அவரது பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவே உரையாடுவார்.

இவ்வாறு சகஜ வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இவர் படுகொலை செய்யப்பட்டதானது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தை அகற்றி இக்கொலையின் பின்னணியிலுள்ள சதிகாரர்களைக் கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டிய கடமை பொலிஸாருக்கு உண்டு.

இது தொடர்பில் உண்மைநிலையைக் கண்டறிந்து பின்புலத்தையும் அறிந்து உரிய விசாரணையை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

மேலும், நகுலேஸ்வரன் கொலையால் துயருற்றிருக்கும் ஆசிரியையான அவரது மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE