இலங்கையரசிற்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா?

145

இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செய்யக்கூடாத குற்றம் எல்லாம் செய்து விட்டு இராஜதந்திர ரீதி யில் செயற்படாமல், உலகநாடுக ளுடன் ஒத்துழைக்காமல் எதேட்சதிகாரப் போக்கில் செயற்பட்டுவருகின்றது. இலங்கைக்கு எதிரான போர்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் அது தொடர்பாக கண்டு கொள்ளாது எந்த நடவடிக்கையும் எடுக்காது சர்வதேச நாடுகளின் மேல் பழிகளை சுமத்திக்கொண்டு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகின்றது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுத்துவதற்கு பதி லாக ஒருதலைப்பட்சமான சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது வருத்தத்திற்குரியது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைமீது பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோச னையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பிறகு இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. எந்த அரச ஆட்சியாளர்கள் குழுவாயி னும் இவ்வாறு முரண்டு பிடிக்கும் விதத்தில் நடந்து கொள்ளுமாயின் சர்வதேச சமூகம் அதனை அமைதியாக வேடிக்கை பார்க்காது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர மற்ற விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளை புறக்கணித்து விட்டு, தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடை களை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

அண்மைய காலத்தில் உலகில் இடம்பெற்ற போர்களில் போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறிய வேண்டும் என்ற பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது இராஜதந்திரமான செயல் அல்ல எனவும் முரண்டுபிடிக்கும் தன்மை என்பதே அமெரிக்க காங்கிர ஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவின் நிலைப்பாடாகும்.

உண்மையா அல்லது பொய்யா என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில், இலங்கையின் போர் பற்றி கிடைத்துள்ள சாட்சியங்கள் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கொண்ட சாட்சியங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிபொருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம்.

இலங்கையின் ஆட்சியாளர்கள் இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கசார்பற்ற வெளிப்படையான விசார ணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும்; என தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈழத்தமிழர்களை ஈவிரக்கமின்றி படு கொலை செய்த இலங்கை அரசாங்கம் மீது பொருளாதாரத்தடை விதிக்க வேண்டும், தமிழகத்தில் இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ‘தமிழர் பண்பாட்டு நடுவம்’ அமைப்பினர் சென்னை மெரீனாக் கடற்கரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், இறைச்சி, பழங்கள், ஆடைகள் என்பவற்றை புறக்கணிக்க வேண்டும் எனவும் தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் ஐக்கிய நாடுகள் மனித உரி மைப் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார். இவ்வாறு மஹிந்தவின் அரசாங்கம் செயற்படுமாயின் பாதகமான விளைவு களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அது அரச அதிகாரிகளுக்கான பயணத்தடை, வெளிநாட்டு முதலீட்டு தடை, சொத்து முடக்கம் போன்ற பல்வேறு வழிகளில் தடைகள் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும்; ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சுயாதீன விசாரணைகளை இலங்கை ஜனாதிபதி நிராகரித்தமை அதிர்ச்சியளிக்கும் வகை யில் அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மன்றத்திற்கு இலங்கை விவ காரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக தருஸ்மன் தலை மையில் நிறுவப்பட்ட நிபுணர் குழு வில் சூகாவும் அங்கம் வகித்துள்ளார். இதேவேளை ஐ.நாவின் தீர்மானத்தினை இலங்கையின் ஜனாதிபதி வெளிப்படை யாகவே நிராகரித்துள்ள நிலையில் இக் கருத்து வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் மனித உரிமைகள் விடயத்தை முன்வைத்து எந்த ஒரு நாடும் இலங்கை மீது பொருளாதார தடை களை ஏற்படுத்தினால் அதனை கண்டு இலங்கை அஞ்சாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். போர் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் பொருளாதாரத்தை உரிய வகையில் கட்டியெழுப்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு நாடும் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் அழுத்தம் கொடுத்தாலும் அதற்கு ஈடுகொடுக்க இலங்கை தயாரா கவே உள்ளது. இலங்கையில் சமாதா னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது.

மேற்கத்தேய நாடுகளுக்கு இலங்கை தலைவர் அடி பணிய மறுப்பதால் இலங்கை எதிர்காலத்தில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என் றும் அவர் எச்சரித்தார். தமக்கு அடிபணிய மறுக்கும் தலைவரை மேற்கத்தேய நாடுகள் பதவியில் இருந்து அகற்ற முயற்சிக்கும். அதன் ஒரு கட்டமே ஜெனீவாவில் இடம்பெறுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். எனினும் இலங்கை மக்கள் சவால்களுக்கு தயா ராக உள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.

இலங்கையுடனான வர்த்தகத் தொடர்புகளை பிரித்தானியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோரும் புதியதொரு போராட்டத்துக்கு அங்குள்ள புலிகள் ஆதரவு தமிழ் அமைப்புகள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை வாங்கக்கூடாது என்பது தொடர்பாக, ஏற்கனவே பிரித்தானியாவின் உயர்மட்ட அரசியல்வாதிகளுடன் இந்த அமைப்புகள் பேச்சுக்களையும் நடத்தியுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்ததாக, பிரித்தானியாவே இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாக விளங்குகிறது.

தேயிலை, ஆடைகள், மீன், மிதிவண்டி, இறப்பர், மாணிக்கம் மற்றும் நகைகள், தும்பு உற்பத்திகள், மட்பாண்டப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், விளையாட்டுப் பொருட்கள் என்பன இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அடுத்த ஆண்டு பிரித்தானியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்குள்ள தமிழ் வாக்காளர்கள், பல இடங்களில் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.

இந்தநிலையில் இலங்கை மீது வர்த்தகத் தடை விதிக்கப்பட்டால் ஆச்சரியப்படமாட்டேன் என்று அங்குள்ள சிங்கள அமைப்பின் தலைவர் டக்ளஸ் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அங்குள்ள இலங்கையர்களுடன் பேசி ஒருங்கிணைக்கத் தவறியதால், விடுத லைப் புலிகள் ஆதரவு தமிழர்களின் கை ஓங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் எல்லாவற்றையும் இழந்து விட்டோம். இலங்கை அரசாங்கம் ஒரு ஆதரவுதேடும் பொறிமுறையை உருவாக்காது போனால், நிலைமைகள் இன்னும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இலங்கை மீது வர்த்தகத் தடைவிதிக்கப்பட்டால், தேயிலை மற்றும் ஆடை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்திக்கும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் முனைப்புக்களில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையுடனான பொருளாதார உறவு களை துண்டிக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பிரித்தானிய அரசாங்கத்தை கோரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப் பிடப்படுகிறது. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களை கொள்வனவு செய்வதனை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களைப் போன்ற உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து செயற்படுவதில்லை எனவும், இதனால் புலி ஆதரவாளர்கள் புலம்பெயர் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் முதல் தடவையாக பிரித்தானியா இலங்கை மீது கூடுதல் அழுத்தங்களை செலுத்தி வருவதா கத் தெரிவிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

27.04.2014     – சுழியோடி –

 

SHARE