ஆளும் கட்சியின் மேலும் பலர் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர் நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம்!

140
ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இன்று நாடாளுமன்ற அமர்வின் போது கட்சி தாவி, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்து, இன்று முக்கியமான கட்சி தாவல் நடவடிக்கைக்கு ஆளுங்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இதனை அறிந்து கொண்ட அரசாங்கத் தரப்பு உயர்மட்டத்தினர் , கட்சி தாவும் முடிவில் உள்ள ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்றிரவு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். முக்கியமான பதவிகள் தருவதாகவும் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் மீதான அதிருப்தி காரணமாக இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள தமது கட்சி தாவல் தீர்மானத்தில் குறித்த முக்கியஸ்தர்கள் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான நாடாளுமன்ற அமர்வில் குழப்பங்களை ஏற்படுத்தி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் தற்போது பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் மேலும் பலர் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் வகையிலான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் வீட்டில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர் .

இந்தநிலையில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்த பின்னர் குறித்த உறுப்பினர்கள் கட்சிமாறலை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைதவிர ஆளும்கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய உள்ளுர் உறுப்பினர்களும் கட்சி மாறலுக்கு தயாராவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

 

SHARE