மகிந்த அரசு தான் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை: அரியநேந்திரன் எம்.பி

148

வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

jaffna_train_02

பாராளுமன்றத்தில் போக்குவரத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

யாழ்தேவி புகையிரதம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் அறியக்கிடைக்கின்றது.

இதனை நிறுத்தி தகுதியானவர்களுக்கு உரிய தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பினை வழங்க உரியவர்கள் முன்வர வேண்டும் எனக்கூறினார்.

இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாங்கள் இதுவரைக்கும் எவருக்கும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வேலை வாய்ப்பினை வழங்கவில்லை, தகுதியானவர்களுக்கே வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

அதனைத்தான் எமது கட்சியும் எதிர்பார்க்கின்றது என்பதனை கூறிய பாராளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் பாடசாலைகளுக்கான சிற்றூழியர் நியமனங்களில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதற்கு அண்மைய நியமனங்கள் சான்று பகிர்கின்றன.

அதனடிப்படையிலேதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஏறக்குறைய பத்து பாடசாலைகளுக்கு அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிற்றூழியார்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இங்குள்ள பாடசாலைகளுக்கு ஏற்கனவே அந்தப்பிரதேசத்தில் இருக்கும் இளைஞர்களின் பெயர்கள் அந்தந்த பாடசாலை அதிபரினால் சிபாரிசு செய்யப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இந்த அரசாங்கம் இருந்து வருகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 வீதம் தமிழர்கள் வாழ்கின்ற போதும் இந்த இடத்தில் இஸ்லாமியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதற்கு டக்ளஸ் தேவானந்த அமைச்சரால் பதில் கூற முடியுமா? என்ற கேள்வியினை கேட்டார்.

இங்குள்ள பல அமைச்சர்கள் இதுபோன்றுதான் எந்தவிதமான புள்ளிவிபரங்களும் தெரியாமல் பேசுகின்றார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் மட்டக்களப்பிற்கு சென்றிருந்த 110 வது பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மட்டக்களப்பில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை சரியாக பயன்படுத்தாமையால் திறைசேரிக்கு பணம் திரும்பி போவதாக கூறியிருந்தார்.

இவருக்கு இங்கு நடப்பது எதுவும் தெரியாவிட்டால் இங்கு இருப்பவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டு கதைக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வகுப்பு எடுத்து நடத்த வேண்டும்.

அண்மையில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக பல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்த வகையில் கிறவல் றோட், தென்னங்கன்று அமைப்பாளர், கொங்கிறீட் வீதிக்கென்று ஒரு அமைப்பாளர், காபட் வீதிக்கொன்று ஒரு பிரதி அமைப்பாளர், வேலைவாய்ப்பு படிவம் நிரப்ப இன்னுமொரு அமைப்பாளர், காரியாலயம் திறக்க, கட்சிக்கூட்டம் நடாத்த என்று பல அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறுதான் இவர்களது செயற்பாடு நடந்து கொண்டிருக்கின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்  கூறினார்.

 

SHARE