குறட்டையைக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தை அறிமுகம்


மனிதர்கள் உறங்கும் போது குறட்டை விடுவதைத் தானாகக் கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் மெத்தையை அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் மெத்தையில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சினை தானாக சரியாகிவிடும் எனவும் சௌகரியமான உறக்கம் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஸ்லீப் நம்பர் எனும் குறித்த நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் மெத்தை ஸ்லீப் நம்பர் 360 i10 என அழைக்கப்படுகிறது.

லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் இந்த மெத்தை அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்துக்கொள்ளும் வகையில் இந்த மெத்தை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும், இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிப்பாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். CES வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்பிற்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட் மெத்தையின் விற்பனை இவ்வாண்டில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் விலை 4000 டொலர்கள்.