வவுனியாவில் வியாபார நடவடிக்கைகள் மோசமாக பாதிப்பு! வடக்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.!

வவுனியா மத்திய பேரூந்து நிலையம் மூடப்பட்ட நிலையில் அப்பேரூந்து நிலையத்தை சுழ அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 01-01-2018 வவுனியா மத்திய பேரூந்து நிலையமானது வடக்கு மாகாண முதலமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக முற்று முழுதாக மூடப்பட்டு அனைத்து பேரூந்துகளின் சேவைகளும் புதிய பேரூந்து நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை சூழ அமைந்துள்ள வர்த்தகர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் அமைந்துள்ள 138 கடைத்தொகுதியுடன் அதனைச் சூழவுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களிலும் வியாபார நடவடிக்கைகள் முற்றுமுழுதாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அற்று காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் எமது வியாபார நிலையங்களை நம்பி வாழ்வாதாரத்தை கொண்டு செல்லும் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. திடீரென முற்றுமுழுதாக பேரூந்து சேவைகளை புதிய பேரூந்து நிலையத்திற்கு மாற்றியதன் காரணமாக எமது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே மக்களின் நலன் கருதி வடக்கு மாகாண முதலமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வவுனியா வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

About Thinappuyal News