யாழ். மீனவர்களின் விடுதலைக்கு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்–அமைச்சர்டக்ளஸ்

129

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றைய தினம் வருகை தந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ். கடற்தொழிலாளர்களது உறவினர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, கைதிகளது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வரும் நிலையில், இன்று காலையும் கலந்துரையாடியுள்ளேன். அதுமட்டுமன்றி, நாளைய தினம் ஜனாதிபதி அவர்களை மீண்டும் நான் சந்திக்கவுள்ள நிலையில், இதுவிடயம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடவுள்ளேன்.

குறித்த இவ்விடயமானது சட்டம், ஒழுங்குடன் சம்பந்தப்பட்டது. ஆகையால், நாளைய கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சாதகமான பதிலைப் பெற்றுத் தருவேன்.

இதுவொரு நீதிமன்றத் தீர்ப்பு என்பதால், இரு நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்ற நிலையில் இந்தியாவுக்குள்ள சட்டம் வேறாகவும், எமது நாட்டிற்குரிய சட்டம் வேறாகவும் உள்ளது. எனது மக்கள் என்ற வகையில் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமான முடிவைப் பெற்றுத் தருவேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, அமைச்சரின் அலுவலகப் பிரதான வாயிலுக்கு வருகை தந்திருந்த கடற்தொழிலாளர்களது உறவினர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக் கண்டதும் கதறி அழுது, தமது உறவினர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கையினை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

SHARE