மைத்திரிபால சிறிசேன இல்லை-வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று

145

mahindha_maithiri-300x187வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று நடத்தப்படவுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அடுத்து ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்திருந்தார்.

மறுநாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்று வந்ததுடன் நவம்பர் மாதம் முதலாம் திகதி இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது நூறு மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டிருந்தது.

குழுநிலை விவாதத்தின் இறுதி நாளான இன்று நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துடன் இருந்த சில உறுப்பினர்கள் தற்போது எதிரணியில் இணைந்துள்ளனர்.

அத்தோடு ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட முடிவெடுத்துள்ளதால் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குழுநிலை விவாதம் நிறைவுபெற்றதும் இன்று மாலை ஐந்து மணியளவில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இதேவேளை இந்த இறுதி நிலை வாக்கெடுப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி பங்கெடுக்க மாட்டாது என  கட்சியின் ஊடக பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் மைத்திரிபால இல்லை?

இன்று நடைபெறும் வரவு செலவுத்திட்ட வாக்களிப்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ள மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

இன்று காலை கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளை மேற்கொண்ட மைத்திரிபால சிறிசேன, பின்னர் அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த அவர்,  மல்வத்து பீட பிரதி மகாநாயக்கரிடம் ஆசிபெற்றுக் கொண்டார். மகாநாயக்கர் திப்படுவாவே சுமங்கல தேரர் தற்போது வெளிநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மைத்திரிபால சிரிசேன, ஆளுங்கட்சியிலிருந்து இன்னும் பல முக்கியஸ்தர்கள் கட்சி தாவத் தயாராக இருப்பதாகவும், உரிய நேரம் வரும்வரை காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் கரு ஜயசூரிய, அர்ஜுன ரணதுங்க, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, லக்ஷ்மண் கிரியெல்ல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லகி ஜயவர்த்தன ஆகியோரும் இந்த வைபவங்களில் பங்கேற்றுள்ளனர்.

கண்டி வழிபாடுகளின் பின்னர் இன்று மாலை மைத்திரிபால சிறிசேன குழுவினர் அநுராதபுர புனித நகரத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE