உலக மசாலா: பன்றியின் ஓவியம்

 

தெ

ன் ஆப்பிரிக்கா வில் வசிக்கும் ‘Pigcasso’ என்ற பன்றியின் ஓவியம் ஒவ்வொன்றும் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. விலங்குகள் உரிமை போராட்டாக்காரர் ஜோன் லெஃப்சன் வளர்க்கும் பன்றிதான் இது. பிறந்து 4 வாரங்களே ஆன ஒரு பன்றிக் குட்டியை, இறைச்சிக் கூடத்திலிருந்து காப்பாற்றி வளர்த்து வருகிறார். தற்போது 2 வயதில் 204 கிலோ எடையுள்ள பெரிய பன்றியாக மாறிவிட்டது. “எங்கள் மையத்துக்கு வந்தபோது மிகவும் சிறியவளாக இருந்தாள். இவள் விளையாடுவதற்காக ஏராளமான பொம்மைகளை வாங்கிக் கொடுத்தேன். அதில் வண்ணங்களும் தூரிகைகளும் இருந்தன. சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அத்தனை விளையாட்டுப் பொருட்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, தூரிகையையும் வண்ணங்களையும் எடுத்துக்கொண்டாள். நான் ஒரு கேன்வாஸ் அட்டையை அவள்முன் வைத்தேன். வண்ணங்களில் தூரிகையை நனைத்து, கேன்வாஸில் வரைய ஆரம்பித்துவிட்டாள். ஒரு பன்றியால் ஓவியம் தீட்ட முடியும் என்பது எனக்கு வியப்பைத் தந்தது. அதிலிருந்து அவளுக்கு ஆர்வம் வரும் நேரத்தில் எல்லாம் வரைய ஆரம்பித்துவிடுவாள். விலங்குகள் மீட்பு மையத்தில் அவளுக்காக ஓவியக்கூடம் ஆரம்பித்தேன். ஓவிய ஆர்வலர்கள் இந்தப் படங்களைப் பார்த்து பிரமித்துவிட்டனர். இன்று ஒரு ஓவியத்துக்கு 2.3 லட்சம் ரூபாய் வரை கொடுத்து, வாங்கிச் செல்கிறார்கள்.

இதுவரை அவள் வரைந்த பெரும்பாலான ஓவியங்கள் விற்பனையாகிவிட்டன. இவள் வரையைப் போகும் ஓவியங்களை வாங்குவதற்கு காத்திருக்கிறார்கள். அவளாக விரும்பி வரைவதைத்தான் நான் விரும்புகிறேன். நான் அவளை ஒருநாளும் கட்டாயப்படுத்த மாட்டேன். இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, இனிப்பு தடவிய பாப்கார்ன் போன்றவற்றை சுவைத்துக்கொண்டே இடையிடையே தூரிகையைப் பிடித்துக்கொண்டு வரையும் பிகாசோவின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. உலகிலேயே ஓவியம் தீட்டக்கூடிய ஒரே பன்றி பிகாசோதான். இவள் மூலம் பன்றிகள் புத்திசாலியானவை என்ற விஷயம் உறுதியாகியிருக்கிறது. எதிர்காலத்தில் நியூயார்க்கிலும் பாரிஸிலும் பிகாசோவின் ஓவியக் கண்காட்சியை நடத்த இருக்கிறோம்” என்கிறார் ஜோன் லெஃப்சன்.

பிகாசோ அளவுக்கு சம்பாதிக்கிறதே இந்த ‘Pig’casso!

ங்கிலாந்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி லீஃபி லியுவுக்கு பிறந்த 6-வது மாதத்தில் மூளை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எப்பொழுதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கும். நாள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்தக் குறைபாட்டுக்கு மருத்துவம் இல்லை என்பதால், மருத்துவர்கள் லியுவின் உணவுப் பழக்கத்தை மாற்றியிருக்கிறார்கள். மாவுச் சத்து உணவுப் பொருட்களைத் தவிர்த்து, முட்டை, இறைச்சி, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய் பழம் போன்றவற்றை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். அத்தனையையும் ஒதுக்கிவிட்டு, வெண்ணெய் பழத்தை மட்டுமே சாப்பிட்டு வருகிறாள் லியு. “ஒரு நாளைக்கு 60 தடவை சலிப்பின்றி இந்தப் பழத்தைச் சாப்பிடுகிறாள். இதுவரை பிரச்சினை ஒன்றும் இல்லை. மருத்துவர்களால் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்ன எங்கள் மகள், 5 வயதைக் கடந்துவிட்டாள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் லியுவின் அம்மா.

ஐயோ… பாவம்!

About Thinappuyal News