பட அதிபருடன் பூஜா காந்தி சமரச முயற்சி 

90


பட அதிபருடன் சமரசம் செய்ய முடிவு செய்துள்ளார் பூஜா காந்தி.கொக்கி, திருவண்ணாமலை படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவருக்கும் பட அதிபரும், குடும்ப நண்பருமான கிரணுக்கும் 2 வருடத்துக்கு முன் மோதல் ஏற்பட்டது. தன்னை மிரட்டுவதாக கிரண் மீது பூஜா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பூஜா மீது கிரண் அதேபோல் குற்றச்சாட்டு கூறி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இரு தரப்பிலும் சர்ச்சை தொடர்ந்த வண்ணம் இருந்தது. வருடக்கணக்கில் மோத லில் ஈடுபட்டிருந்த பூஜா-கிரண் இருவரும் தற்போது தங்களுக்குள் பிரச்னைகளை பேசி முடித்துக்கொண்டு சமரசம் செய்துகொள்ள எண்ணி உள்ளனர்.

விரைவில் இதுதொடர்பாக பூஜா, கோர்ட்டை அணுகி இருவருக்கும் இடையே சமசரம் செய்துகொள்வது தொடர்பான மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பூஜா காந்தி ‘அபிநேத்ரி‘ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இக்கதை பழம்பெரும் கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாகவும் அதில் கல்பனாவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் பூஜா காந்திக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. வரும் டிசம்பர் மாதம் படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் பூஜா உள்ளதால் ஏற்கனவே கிடப்பில் இருக்கும் பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

 

SHARE