பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சு லெஜண்ட் வாசிம் அக்ரம் ஓய்வு பெற்று 14 ஆண்டுகள் ஆகியிருக்கும். ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ என்று புகழப்பட்ட அவர் தன் வயதையும் முறியடித்து 51 வயதில் தன் பழைய ஸ்வின் பவுலிங்கை வெளிப்படுத்தி தற்போது ஆடிவரும் ஷோயப் மாலிக்கை எட்ஜ் செய்ய வைத்தது, ரசிகர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக் அணியான முல்டான் சுல்தான் அணிக்காக காட்சிப் போட்டி ஒன்றில் ஆடினார். அப்போது பந்து வீசிய வாசிம் அக்ரம் தன் 51 வயதையும் பொருட்படுத்தாமல் அபாரமான ஸ்விங் பவுலிங்கை வீசியுள்ளார்.

அதுவும் இக்கால வீரர் ஷோயப் மாலிக், அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கும் தொடக்க வீரர் இம்ரான் நஸீர் ஆகியோரையும் தன் ஸ்விங்கினால் அசத்தினார் வாசிம் அக்ரம். வீசிய ஸ்பெல்லில் ஓரளவுக்கு இம்ரான் நஸீர் சமாளிக்க ஷோயப் மாலிக் 2 ஓட்டங்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

நட்புரீதியான இந்த 10 ஓவர் போட்டியில் சுல்தான் லெவன் அணிக்கு கப்டனாகச் செயல்பட்ட வாசிம் அக்ரம், மாலில் டூபான் அணிக்கு எதிராக ஆடினார். இந்த ஸ்பெல்லில் ஷோயப் மாலிக் முதல் பந்து சற்றே ஸ்விங் ஆக பீட்டன் ஆனார். ஆனால் இரண்டாவது பந்து இன்னும் வைடாகச் செல்ல அதனை ஆட முயன்று எட்ஜ் செய்து விக்கெட் காப்பாளரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷோயப் மாலிக். விக்கெட்டை வீழ்த்தியவுடன் அதே பழைய பாணியில் அதனைக் கொண்டாடினார் வாசிம்.