மட்டக்களப்பு – காத்தான்குடியைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று  அதிகாலை 3.50 மணியளவில் புதிய காத்தான்குடி 6இல் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்துள்ள நிலையில் மேலும் வெடிக்காத 8 நேரக் கணிப்புக் குண்டுகள் மீட்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது காத்தான்குடி நகரசைபைக்காகப் போட்டியிட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் அங்கு 5,815 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தனர்.

இந்நிலையில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் அவர்களது தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. காரியாலயத்திற்கு சிறிதளவான சேதமும் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து காத்தான்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.