அரசியல் சூறாவளியின் மையத்தைக் கண்டு கொள்வதில் தடுமாற்றம் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார்.

129
 rishart_speech_002
ameer_ali_speech_001தலைமைகள் அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றது: அமீர் அலி- மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்: றிஷாட்
பழுத்த அரசியல்வாதிகளுக்கே இன்றைய அரசியல் குழப்பத்தின் மையத்தை கண்டுகொள்ள தடுமாற்றமாக இருக்கின்ற போது, பிரதேச அரசியல்வாதிகளுக்கும் அரசியல் சூறாவளியின் மையத்தைக் கண்டு கொள்வதில் தடுமாற்றம் இருக்கின்றது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  அமீர் அலி தெரிவித்தார்.

ஏறாவூர் நல்லிணக்கம் மற்றும் சமூக வலுவூட்டலுக்கான நிலையத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஸீர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் அல்-அஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற கல்வியில் புலமை காட்டிய மாணவர்களை கௌரவித்து பரிசளிக்கும் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் சமூகத்தின் தலைமையும் தற்போதைய அரசியல் சூறாவளியில் தமது நிலைப்பாடு பற்றி அடக்கி வாசிப்பதால், தேசிய அரசியல் புயலின் மையம் வேறெங்கோ மையம் கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லிம் மக்களின் தீர்மானமே எனது அரசியல் தீர்மானமாக இருக்கும்.

இதனை மீறி நான் தனிப்பட்ட முறையில் எந்த தீர்மானத்தையும் எடுக்கப் போவதில்லை.

கடந்த காலத்திலே அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு பதிலாக இப்பொழுது பிராந்தியத்திலே வாழ்கின்ற மக்கள் முடிவெடுக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.

அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனியாக இருக்க வேண்டிய ஓர் இக்கட்டான அரசியல் சூழ்நிலை தற்போது நிலவுகின்றது என்பதை எந்த அரசியல்வாதியும் ஒத்து கொண்டுதான் ஆகவேண்டும்.

அரசியல் தலைவர்கள் தற்போது அமைதியாக இருக்க சமூகம் பெருத்த எதிர்பார்ப்போடு இருக்கின்றது.

இந்த விடயத்திலே சமூக மக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் முடிவெடுக்க வேண்டும்.

தற்போதைய கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதில் நன்மைகள் இருக்கின்றது.

காத்தான்குடியிலோ, ஏறாவூரிலோ, ஓட்டமாவடியிலோ பேசப்படுகின்ற எடுக்கப்படுகின்ற தீர்மானம் தேசியத் தீர்மானமாக இருக்கப்போவதில்லை என்பதை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த விடயத்திலே முஸ்லிம் அரசியல் என்பது அதிகமான சவால்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.

அதனாலேயே எங்களைப் போன்ற அரசியல் தலைமைகளால் சமகால அரசியல் சூழ்நிலையில் வெளிப்படையாக மனந்திறந்து பேசுவதில் தயக்கம் இருக்கின்றது.

ஆகையினால் இருக்கின்ற குறுகிய கால அவகாசத்துக்குள் முஸ்லிம் சமூகம் முன்னோக்கியும் பின்னோக்கியும் பார்த்து முடிவெடுக்க முடியுமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது என்றார் .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ். சுபைர் உட்பட அதிகாரிகள், கல்விமான்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் அதனை மட்டக்களப்பு மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறப்பினர் எம்.எஸ்.எஸ். அமீர் அலிக்கு வழங்கவிருப்தாக செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்: றிஷாட்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலை சின்னத்திலே போட்டியிட்ட கட்சிகளுள் சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு அடுத்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று திகழ்கின்றது என்றால் அக்கட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்திற்கிடமில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அது முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு வழங்கப்படவுள்ளது தொடர்பாக கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்ற போதே அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாங்கள் தூர சிந்தனையோடுதான் முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரசை ஸ்தாபித்தோம்.

அல்லாஹ்வின் உதவியோடு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என்று பெற்று கட்சி வளர்ச்சி கண்டுள்ளது.

நாடு முக்கியமான ஒரு தேர்தலை இன்னும் நாட்பது நாட்களுக்குள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலே, இலங்கையில் வாழ்கின்ற இருபது லட்சம் முஸ்லீம்கள் இத்தேர்தலில் யாரை  ஆதரிக்கப்போகின்றார்கள் என்றும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாரை ஆதரிக்கப்போகின்றார்கள் என்றும் ஊடகங்களும் வினா எழுப்பிக் கொண்டிருக்கின்ற இந்த வேலையில், அஸ்வர் ஹாஜியார் இராஜினாமா செய்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

அவரின் இடத்திற்கு அமீர் அலியை நியமிப்பது தொடர்பாக கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேச மக்களின் கருத்துக்களை கேட்பதற்காக நான் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள மக்களது கருத்துக்களை கட்சியின் உயர்பீடத்தில் தெரிவிப்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேவை என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தால் அப்பதவியை எடுப்போம் இல்லை என்றால் விட்டுவிடுவோம்.

அமீர் அலி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால், அவர் வகித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் கல்குடாத் தொகுதியில் இருந்தே தெரிவு செய்யப்படுவார். அது அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்குறியது. யாரை நியமிப்பது என்று கட்சி தீர்மானிக்கும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலே கல்குடாவை மட்டும் வைத்து முடிவு எடுப்பதா, வன்னி மக்களின் பிரச்சினையை மையமாக வைத்து முடிவு எடுப்பதா, அல்லது வட கிழக்கு மக்களை மாத்திரம் மையமாக வைத்து முடிவு எடுப்பதா, அல்லது நாட்டில் உள்ள இருபது லட்சம் முஸ்லிம்கள் பற்றி அவர்களின் பொருளாதாரத்தைப் பற்றி பள்ளி வாயல்கள், மதரசாக்கள் பற்றி சிந்தித்து முடிவு எடுப்பதா என்று கட்சி ஆலோசித்து வருகின்றது.

இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டு தரப்பும் எங்களை அழைக்கிறது. இரண்டு தரப்பும் அழைத்து என்ன வேண்டும் என்று கேட்கின்றனர்.

ஏன் இன்னும் யாரை ஆதரிப்பது என்று முடிவை அறிவிக்கவில்லை என்றும் கேட்கின்றார்கள்.

ஆனால் சமூகத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் பொருளாதாரத்தின் பாதுகாப்பு, சமூகத்தின் எதிர்காலம் பற்றியெல்லாம் சிந்தித்து யாரை ஆதரிப்பது என்பது பற்றி கட்சியின் உயர்பீடம் அறிவிக்கும்.

இங்கு கருத்து தெரிவித்த பொது மக்கள், எங்கள் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத குறை கடந்த நான்கு வருடங்களாக இருந்து வந்துள்ளது என்றும் தற்போது தேசியப்பட்டியல் மூலம் வழங்கப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன், பிரதி அமைச்சர் பதவி ஒன்றையும் சேர்த்து பெற்றுத்தர கட்சியின் தலைமை முயற்சிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் தலைமையில் மீறாவோடை அமீர் அலி மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், உறுப்பினர்களான ஐ.ரீ.அஸ்மி, ஏ.மீராசாஹிப், ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், பள்ளிவாயல்களின் தலைவர்கள், பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

SHARE