தமிழ்த் தேசியவாதவாத அரசியலினை முன்னெடுப்போரிலே பலர் ‘தமிழர்’ என்ற இந்தக் கூட்டு அடையாளம் எவ்வாறு உருவாகியது என்பதனை மறந்துவிடுகிறார்கள்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரினதும் தேர்தல் பிரசாரங்கள் இலங்கைத் தீவில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த உரையாடல்கள் மீது தீவிரமாகக் கவனம் செலுத்துகின்றன. தென்னிலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் பிரதானமான அரசியற் கட்சிகள் யாவும் சமஷ்டியினையும், சுயநிர்ணய உரிமையினையும் நிராகரித்துள்ள அதேவேளை இந்த இரண்டு தமிழ்த் தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகள் திம்புக் கோட்பாட்டினை மையமாகக் கொண்டவையாக இருக்கின்றன. தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தமிழர்களை சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான ஒரு தேசமாக அல்லது மக்கள் கூட்டமாக அல்லது தேசிய இனமாக (சர்வதேச சட்டத்தின் முன்னிலையில் தேசம், மக்கள் கூட்டம், தேசிய இனம் போன்ற பதங்கள் ஒரே மாதிரியாகவே பெரும்பாலும் நோக்கப்படுகின்றன) அங்கீகரிக்க வேண்டும் எனவும், தமிழர்கள் தமது தாயகமாக அல்லது வரலாற்று ரீதியான வாழ்விடங்களாகக் கருதும் இலங்கைத் தீவின் வட கிழக்குப் பகுதியில் தமது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிக்க வழிசெய்யக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் இந்த இரு கட்சிகளும் தமது தீர்வுகளினை முன்வைத்துள்ளன.

சுயநிர்ணயம், சுய ஆட்சி போன்ற கருத்துக்களின் அடிப்படையில் இயங்கும் அரசியலில் ஒரு விதமான‌ புரட்சித்தன்மை இருந்தாலும் மறுபுறத்தில் இந்தக் கருத்துக்கள் பல்லின, பல்மத, பல்மொழி பேசும் சமூகங்கள் வாழும் நிலங்களிலே சமூகங்கள் ஒன்றில் இருந்து ஒன்று ஒதுங்கி வாழ்வதனையும், குறுகிய சமூக வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன என்பதனை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதனாலே இந்த நிலைப்பாடுகளினைக் கேள்விக்குட்படுத்துவது அவசியம். பெரும்பான்மைவாதத்தினையும் ஒரு குறித்த சமூகத்தினை முன்னிலைப்படுத்தும் (சிங்கள – பௌத்த) தேசியவாதத்தினையும் முன்னெடுக்கும் (இலங்கை போன்ற) அரசுகளின் கீழ் ஒடுக்குமுறையினை எதிர்நோக்கும் (தமிழ்ர்கள் போன்ற) சனக் கூட்டங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்கு வேண்டிய கூட்டு எதிர்ப்புணர்வினைத் தோற்றுவிக்கக் கூடிய வலு சுயநிர்ணய உரிமைக்கு இருக்கிறது. ஆனால், வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு ஒன்றிலே மொழியாலும், மதத்தாலும் வேறுபட்ட சமூகங்கள் சமாதானத்துடன் கூடி வாழ்வதற்கு சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மட்டும் இயங்கும் அரசியல் உதவமாட்டாது. இதனால், தமிழ்த் தேசியவாதத்தினால் முன்வைக்கப்படும் அடையாளம், நிலம் பற்றிய கருத்துக்களிலும், தமிழ்த் தேசியவாதம் காட்டும் சேர்ந்து வாழ்வதற்கான அரசியற் பாதையிலும் காணப்படும் குறைகள் பற்றி இந்தக் கட்டுரை சில அவதானங்களினை முன்வைக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலின் புறமொதுக்கும் தன்மைகளினையும், போதாமைகளினையும் விமர்சிப்பதன் அர்த்தம் தென்னிலங்கையிலே சக்தி வாய்ந்த நிலையில் இருக்கும் அரசியற் கட்சிகளும், சமூக இயக்கங்களும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகச் சரியான நிலைப்பாட்டினை எடுத்துள்ளார்கள் என்பது இந்தக் கட்டுரையாளரின் வாதம் அல்ல. தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளினால் குறுகிய முறையில் முன்வைக்கப்படும் சுயநிர்ணயம் தொடர்பான கருத்துக்கள் எந்த அளவுக்கு விமர்சிக்கப்பட வேண்டியவையோ, இனத்துவ அடையாள உருவாக்கத்தினையும், அதனுடன் தொடர்புபட்ட‌ வேற்றுமைப்படுத்தலினையும் கருத்தில் எடுக்காது, சமஷ்டியினை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்கும், முற்போக்கு முகமூடி போட்டுச் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) போன்ற கட்சிகளின் அரசியலும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையாளரின் நிலைப்பாடாக அமைகிறது.

இலங்கையிலே இன்றைய காலத்திலே தனது விடுதலையினைக் கோரிநிற்கும் ‘தமிழ்’ என்ற கூட்டு அடையாளம் இலங்கை அரசு தனது மக்களில் ஒரு பகுதியினைத் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமையால் உருவாகிய ஓர் அடையாளம். இந்தக் கூட்டு மனவுணர்வு ஒரு அரசியற் தன்மை மிக்கது. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் மத்தியில் நிலவும் சாதி, பிரதேசவாதம் போன்ற பிளவுகளுக்கு மத்தியிலும் இந்தக் கூட்டு மனநிலையும், அடையாளமும் உருவாகியுள்ளதெனில், அதற்குக் காரணம் இந்த மனநிலையில் வாழும் மக்கள் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமையே. ஆனால், தமிழ்த் தேசியவாதவாத அரசியலினை முன்னெடுப்போரிலே பலர் ‘தமிழர்’ என்ற இந்தக் கூட்டு அடையாளம் எவ்வாறு உருவாகியது என்பதனை மறந்துவிடுகிறார்கள். தமிழ் என்ற கூட்டு அடையாளத்தினை அரசுக்கும், அரசியலுக்கும் முந்திய, ஒரு அடையாளமாக அவர்கள் கட்டமைக்க முற்படுகிறார்கள். அரசினை மீள் உருவாக்குதல் என்பது ஒரு தொடர் செயன் முறை. அந்தச் செயன்முறையானது ஏற்கனவே இருக்கின்ற அரசினால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளுக்குத் தீர்வு காண்பதனை உள்ளடக்குகிறது. ஆனால், தமிழ்த் தேசியவாதம் இதனைக் கருத்திலே கொள்ளாது அரசினைப் புத்தம் புதிதாக அரசுக்கு முற்பட்ட காலத்துக்குச் சென்று உருவாக்க‌ முடியும் என்ற மாயையினை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது. அதனாலேயே அரச உருவாக்கத்தின் விளைவாக உருவாகிய ‘தமிழ்’ என்ற அடையாளத்தினைத் தேசியவாதம் அரசுக்கு முந்தைய தேசிய/ கலாசார‌ அடையாளமாகக் காட்ட முற்படுகின்றது.[i]

தமது அரசியலுக்கு வலுச் சேர்க்கும் வரலாற்று நூல்களினைத் தெரிவு செய்து, தமிழ்த் தேசியவாதிகளின் ஒரு பிரிவினர் ஒரு குறித்த நிலப்பரப்பு ஒரு குறித்த சமூகத்தினது பாரம்பரிய பூமி என்று சொல்லி அதனை முத்திரை குத்துகிறார்கள். சிங்களத் தேசியவாதிகள் தீவு முழுவதும் சிங்கள -பௌத்தரின் பாரம்பரிய பூமி என்று சொல்வது போல தமிழ்த் தேசியவாதிகள் தீவின் வட கிழக்கு தமிழரின் பாரம்பரிய தாயகம் எனவும், ஏனைய பகுதிகள் சிங்களவரின் தாயகம் என்றும் சொல்கிறார்கள். பறங்கிக்காரர் மன்னாரிலே வியாபாரம் செய்த காலப்பகுதியிலே தீவின் வடபகுதியிலே நிலைகொண்டிருந்த சங்கிலி இராசன் யாழ்ப்பாணத்திலே இருந்த புத்த கோயில்களை எல்லாம் இடித்து அங்கிருந்த சிங்களக் குடிகளை, ஒரு குடி கூட மிஞ்சியிருக்காதவாறு, முழுமையாகத் துரத்தியதாகவும், அவ்வாறு துரத்தப்பட்டவர்கள் கண்டி நாட்டிலும், வன்னிக்காட்டிலும் போய் ஒதுங்கியதாகவும் ஏறக்குறைய 270ஆண்டுகளுக்கு முன் மாதகல் மயில்வாகனப் புலவரினால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலிலே கூறப்பட்டிருக்கிறது.[ii] இது தொடர்பாக யாழ்ப்பாணம் தமிழர்களிற்கு மட்டுமே பாரம்பரியமான பூமி என்பவர்கள் என்ன சொல்லுவார்களோ தெரியவில்லை. வரலாற்றாசிரியர்கள் யார்? எந்த மக்கள் ஆதிகாலத்திலே ஒரு குறித்த நிலப்பகுதியில் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்கள், அல்லது அவர்கள் யார் ஒரு நிலத்திலே முதல் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்கள் போன்ற விடயங்களின் அடிப்படையில் மாத்திரம், தற்கால மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய‌ அரசியலினை நாம் முன்னெடுக்க முடியாது. தற்காலத்தில் நிலம் தொடர்பாக ஒன்றுக்கொன்று போட்டியாக மேற்கொள்ளப்படும் உரிமை கோரல்கள், ஒரு நிலத்துக்கும் வேறுபட்ட பல அடையாளங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்புகள் என்பன பற்றிக் கருத்திலே கொள்ளாமல் தேசியவாதம் அரசியலுக்கு முந்தைய அடையாளங்களினையும், நிலப்பரப்புக்களினையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து நோக்கும் போது, தற்கால அரசின் ஒடுக்குமுறையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒரு சமூகம் கையில் எடுத்துக்கொண்ட சுயநிர்ணயம் என்ற நிலைப்பாடு தனது புரட்சித்தன்மையினை இழந்து விடுகிறது. ஒடுக்குமுறையின் மூலமாக அடையாளங்களினை உருவாக்கும் அரசின் இன மத ரீதியிலான‌ வேற்றுமை காட்டும் நடத்தையின் மீது கவனம் செலுத்தாது, அரசினால் உருவாக்கப்பட்ட‌ அடையாளங்களினை அரசியலுக்கு முந்தைய அடையாளங்களாகக் காண்பித்து அவற்றினைப் பிளவுகளினை உருவாக்கும் வகையில் நிலப்பரப்புக்களுடன் தொடர்புபடுத்தி மீளவும் ஒரு பிரச்சினைக்குரிய அரச கட்டமைப்பினுள் நிறுவிவிடத் தேசியவாத அரசியல் எத்தனிக்கிறது.

காலனித்துவத்தின் முடிவில் இருந்து இலங்கையில் இடம்பெற்று வரும் அரசுருவாக்கம் சிங்கள் பௌத்தத் தேசியவாதத்திற்கு வலுச் சேர்க்கும் ஒரு செயன்முறையாகவே இருக்கிறது. சுதந்திரத்தின் பின் மலையகத் தமிழர்களின் பிரசாவுரிமை பறிக்கப்பட்டமை, சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்டமை, பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பிலே கொடுக்கப்பட்ட முன்னுரிமை, காலங்காலமாக நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், மதத்தவருக்கும் எதிராக அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் வன்முறைகள், நாட்டில் தமிழர்கள் செறிந்து வாழும் வட கிழக்குப் பகுதிகளிலே அரசு சிங்களக் குடியேற்றங்களினை ஏற்படுத்தி அந்தப் பிரதேசங்களினைத் திட்டமிட்ட வகையிலே சிங்கள் பௌத்த மயமாக்க எடுக்கும் நடவடிக்கைகள் போன்றன இலங்கை அரசு சிங்கள பௌத்த தேசியவாதத்தினை முன்னிறுத்தும் ஓர் அரசாக இருப்பதனை எமக்கு எடுத்துக்காட்டுகின்றன. யாழ்ப்பாணத்தினை மையமாகக் கொண்ட படித்த நடுத்தர வர்க்கத்தினரின் தேசிய ரீதியிலான அரசியல் இலக்குகளும், அரசினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வரலாற்று ரீதியிலான அநீதிகளும் வன்முறைகளும் ஒரு புள்ளியில் சந்தித்த போது தமிழ்த் தேசியவாதம் ஒரு எதிர்ப்பு அரசியலாக தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற்றது. தமிழ் மத்தியர வர்க்கத்தினர் தமது கலாசாரம் தொடர்பாகவும், தமது சமூகத்தின் வரலாறு தொடர்பாகவும், நாட்டில் வாழ்ந்த ஏனைய சமூகங்களினைப் புறமொதுக்கும் வகையிலே வளர்த்துக்கொண்ட குறுகிய சிந்தனைகளும், நாட்டின் பல்லின‌ மக்கள் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் ஆதிக்கத்தினை ஒரு பொது வேலைத்திட்டத்தின் மூலமாகக் கூட்டாக‌ எதிர்க்கத் தவறியமையும், வட கிழக்கிலே தமது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிப்பதன் மூலம் ஓர் ஆட்சிக்கட்டமைப்பினை உருவாக்குவதே தமது விடுதலைக்கான ஒரே வழி எனப் பெரும்பாலான தமிழர்கள் யோசிப்பதற்குக் காரணங்களாக அமைந்தன.

இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டுப் போயுள்ள சமூகங்கள் ஒன்றை ஒன்று நெருங்கி வருவதனைத் தூண்டக் கூடிய அரசியலுக்குப் பதிலாக, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட கிழக்குப் பகுதியிலே இன ரீதியிலான சுயாட்சியினை உருவாக்குவதனை மையமாகக் கொண்டு, தமிழ் மக்களின் எதிர்ப்பு அரசியல் தேசியவாதக் கண்ணோட்டத்துடன் வளர்ச்சி பெற்றது. இந்தச் சுயாட்சிக்கான நிறுவனமாக ஒரு தனித் தமிழ் அரசினையோ அல்லது சமஷ்டி முறையின் கீழ் ஒரு மாகாணத்தினையோ இணைந்த வடக்குக் கிழக்கில் உருவாக்குவதே இந்த எதிர்ப்பு அரசியலின் நோக்கமாக இருந்தது. இன்றும் கூட பெரும்பான்மைவாத அரசினை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியம் காட்டும் பாதை இன அடையாளங்களினை ஒன்றில் இருந்து ஒன்று பிரித்து எடுத்து, அவற்றினை வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புக்களிலே வைத்து, அரச நிறுவனங்களினை உருவாக்கி அவற்றில் அந்த அடையாளங்களினை நிலைநிறுத்துவதாக இருக்கிறது. இரண்டு தமிழ்த் தேசியவாதக் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களில் நாங்கள் இந்த நிலைப்பாட்டினையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு தேசங்கள் (தமிழ்த் தேசம், சிங்களத் தேசம்) இணைந்து ஓர் இரட்டைத் தேசிய சமஷ்டி அரசினை (binational federal state) உருவாக்குவதனை தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக‌ முன்வைக்கிறது. இந்த இரண்டு தேசங்களினதும் தனித்தனியான இறைமைகளும், அவற்றின் சுயநிர்ணய உரிமைகளும், வரையறுக்கப்பட்ட இரண்டு நிலப்பரப்புக்களினுள் சமமான முறையில் அங்கீகரிக்கப்பட்டாலேயே இரண்டு தேசங்களுக்கும் பொதுவான இரட்டைத் தேசிய அரசினை உருவாக்க‌ முடியும் என்பது முன்னணியின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு இன ரீதியிலான புறமொதுக்கும் தன்மையினையும், இனப் பிரிவினையினைப் பிராந்திய ரீதியாக ஊக்குவிக்கும் தன்மையினையும் கொண்டிருக்கிறது. அத்துடன், இந்த நிலைப்பாடு இலங்கையிலே, வட கிழக்குக்கு வெளியிலே வாழும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் அரசியல் அந்தஸ்து என்பன பற்றி எதனையும் சிந்திப்பது போல தெரியவில்லை. இரு வேறான இறைமைகளினை அங்கீகரிக்கும் இரட்டைத் தேசிய அரசின் குறைபாடுகள் பற்றி ஹன்னா அரென்ட் என்ற அறிஞர் முன்வைத்துள்ள கருத்துக்களினை இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.[iii] பாலஸ்தீனத்திலே அரபு மற்றும் யூத மக்களுக்கிடையில் நிலவிய முரண்பாடுகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஜூடா மக்னெஸ் மற்றும் மார்ட்டின் பூபர் ஆகியோரினால் முன்மொழியப்பட்ட இரட்டைத் தேசிய சமஷ்டியினை ஹன்னா அரென்ட் 1943இல் எதிர்த்தார். அதனை எதிர்த்தமைக்கு அரென்ட் சொன்ன காரணம், அந்த இரட்டைத் தேசிய ரீதியிலான சமஷ்டித் தீர்வு தேச-அரசு (ஒரு தேசம் ஒரு அரசு) (nation-state) என்ற பொறிமுறையினை இன்னொரு வகையில் மீளுருவாக்கும் என்பதே. சமஷ்டியின் கீழ் வருகின்ற இரண்டு தேசங்களும் தங்களின் தேசங்களுக்குள்ளே, தேச-அரசு போன்று வேற்றுமைப்படுத்தல்களினை ஏற்படுத்துவதனை நாம் தவிர்க்க வேண்டுமாயின், சமஷ்டியின் கீழ் உள்ள எந்த உறுப்புத் தேசமும் தனக்கென இறைமையினைக் கொண்டிருக்கக் கூடாது என்பது அரென்டின் வாதமாக இருந்தது. சமஷ்டி அடிப்படையில் இறைமை இரண்டு தேசங்களுக்கு இடையில் (பிராந்திய) ரீதியாகப் பகிரப்படுவதற்குப் பதிலாக, இரண்டு தேசங்களுக்கு எனத் தனித்தனியாக பிரிக்கப்படாத வகையில் இறைமை பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அரென்ட் வாதிட்டார். தேசிய ரீதியிலான இறைமையினை எதிர்ப்பதற்கு அரென்ட் கூறும் காரணம், தேசிய நலன்கள் எனப்படுபவை குறித்த ஒரு சமூகத்தினை முதன்மைப்படுத்துபவை எனவும், அவை எல்லோருக்கும் பொதுவான நலன்கள் அல்ல என்பதாகும். எனவே, சமஷ்டி அடிப்படையில் உருவாக்கப்படும் அரசக் கட்டமைப்பு, தேசிய இறைமைதான் அதிகூடியதும், ஒருமைப்படுத்தப்பட்டதுமான அதிகாரம் என்ற கருத்தினை இல்லாது செய்ய வேண்டும் என அரென்ட் குறிப்பிடுகிறார். அத்துடன், இந்த வகையிலான சமஷ்டியில் ஒரு தேசத்தின் இருப்பும் அதன் செயற்பாடுகளும் அந்தத் தேசத்தினை உள்ளடக்கும் பன்மைத்துவத்துக்குள்ளே வைத்துப் பார்க்கப்படல் வேண்டும் எனவும், அந்தப் பன்மைத்துவத்துக்கு வெளியே தேசத்துக்கு என ஒரு தனியான அரசியற் பயணம் இருக்க முடியாது என்பதுவும் அரென்டின் வாதங்களாகும். இவ்வாறான ஒரு சமஷ்டி முறையிலே தேசங்கள் தான்தோன்றித்தனமாகச் செயற்பட முடியாது; அவை ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வேண்டும். இது சமஷ்டி என்ற பொறிமுறையின் கீழ் தேசங்களுக்கு இடையில் வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தாமல், சமூகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வாழ்வதனையும், சேர்ந்து இயங்குவதனையும் ஊக்குவிக்க வாய்ப்பினை ஏற்படுத்தும். அரென்ட் இரட்டைத் தேசியத்தினை முற்றுமுழுவதுமாக எதிர்க்கவில்லை. மக்னெஸ் மற்றும் பூபர் ஆகியோரின் இரட்டைத்தேசியவாதத்தின் மீதான அரென்டின் விமர்சனம் நாம் இன சமத்துவத்தினை அடையும் நோக்கிலும், இனங்களுக்கு இடையில் பிராந்திய மட்டங்களிலே கூடி வாழ்வதனை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரே நேரத்திலே செயற்பட வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்வைக்கப்படும் இரட்டைத் தேசியவாதம் ஹன்னா அரென்டினால் விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்ட இரட்டைத் தேசியவாதத்தினை ஒத்தது. இந்த வகையில், இலங்கையின் சிங்கள தமிழ் தேசங்களுக்கெனத் தமிழ்த் தேசியவாதத்தினால் வரையறுக்கப்படும் நிலப்பரப்புக்களினுள் வாழும் பிராந்திய சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு சமஷ்டியினை உருவாக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் இரட்டைத் தேசியவாத உரையாடலினை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். அரென்டின் விமர்சனத்தினைத் தழுவியதாக இலங்கையில் அவதானிக்கப்படும் தேசியவாத உரையாடல்களை நோக்கி நாம் ஒரு கேள்வியினை முன்வைக்க முடியும். இலங்கையின் பிரதானமான இனக் குழுக்களான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் தாம் வாழும் வெவ்வேறு பட்ட நிலப்பரப்புக்களினை ஏனைய சமூகத்தவருடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நிலையிலே அரசினை மீளுருவாக்கும் செயன்முறைகளிலே நாம் இந்தச் சமூகங்களினை முழுவதும் சுயாதீனத் தன்மை கொண்ட, இறைமை மிக்க சமூகங்களாக முன்னிறுத்தலாமா? பிராந்திய சுயாட்சி மற்றும் இறைமை என்பன பற்றிய எமது உரையாடல்கள் தேசியத் தாயகங்களுக்குள் வாழும் சிறுபான்மையினர் பற்றியும், தேசிய எல்லைகளைக் கடந்த‌ தமது அசைவின் மூலமாக நாட்டில் வாழும் சமூகங்கள் தமக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளினையும் கருத்திலே கொள்ளவேண்டும்.

அரச மீளுருவாக்கச் செயன்முறைகளிலே கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கியமான கேள்வியினை ஷாரிகா திராணகம முன்வைக்கிறார். இந்தக் கேள்வி நாம் வாழும் வீடுகளுக்கும் எமது தேசிய ரீதியிலான தாயகங்களுக்கும் இடையிலான இடைவெளிகள் பற்றியது: “எங்களுக்கு வீடுகள் இருந்தாலும், அந்த வீடுகள் எங்களுக்கு உரியது என்று சொல்லப்படும் தாயகங்களுக்கு வெளியே இருந்தால் நாம் என்ன செய்வது?”[iv]காலனித்துவ காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தமது தாயகங்களில் இருந்து வெளியேறி ஏனைய இனத்தவரின் தாயகப் பகுதிகளுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். இவ்வாறு தொழில்வாய்ப்பினைத் தேடுவதன் நிமித்தம் உருவாகிய பொருளாதார ரீதியிலான் சமூகங்கள் இலங்கையில் பேசப்படும் தேசியவாத ரீதியான நிலப்பரப்புக்களுடன் தொடர்புபட்ட உரையாடல்களுடன் முரண்படுகின்றன‌. அதேபோன்று அரச அனுசரணையுடன் இடம்பெறும் குடியேற்றங்கள் நாட்டின் நிலப்பரப்பினது இன அடையாளங்களைக் காலனித்துவத்தின் முடிவின் பின் தொடர்ச்சியாக மாற்றி வருகின்றன. சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலினை முன்னெடுக்கும் வகையில், சிங்கள பௌத்தர்களை தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அரசுகள் குடியேற்றுகின்றமையினை வன்மையாகக் கண்டித்து, நிலங்களில் இருந்து அரசினால் அகற்றப்பட்ட தமிழ் மக்கள் மீளவும் தமது நிலங்களிலே குடியேற்றப்பட வேண்டும் என நாம் கோரும் அதேவேளை, பல ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் (இவர்களிற் பலர் மிகவும் வறியவர்களாகவும் இருக்கின்றனர்) இன்று வட கிழக்கின் ஒரு பகுதியாக மாறிவிட்டார்கள் என்பதனையும், அவர்களுக்கும் இந்தப் பிராந்தியத்தின் வரலாற்றிலே ஓர் இடம் இருக்கிறது என்பதனையும் மறுக்க முடியாது. அதேபோன்று போர்க்காலத்திலே வட கிழக்கிலே இருந்து வெளியேறிய மக்களிற் பலர் தற்போது வெள்ளவத்தை உள்ளடங்கலாகக் கொழும்பின் பல பகுதிகளிலும் வாழ்கிறார்கள். அதேபோல வடக்கிலிருந்து புலிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களிற் பலர் தற்போது புத்தளத்தினைத் தமது வாழ்விடமாகக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரு தேசம் ஒரு நாடு என்ற உரையாடல் இவ்வாறு இடம்பெயர்ந்து தமிழ்த் தாயகத்துக்கு வெளியே வாழும் மக்களினைப் பற்றியும், பாரம்பரியமாகத் தமிழ்த் தாயகத்துக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள் பற்றியும் பெரிதாகக் கரிசனை கொள்ளவில்லை. முஸ்லிம் மக்களும், மலையகத் தமிழரும் தமக்குச் சுயநிர்ணய உரிமை இருப்பதாக அறிவிப்பின் அதனை முன்னணி ஏற்றுக்கொள்ளும் என்று முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிக்கிறது. ஆனாலும் முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தம்மைத் தனித் தேசங்களாக அறிவித்தாலென்ன அறிவிக்காவிட்டாலென்ன, அவர்களும் இந்தத் தீவின் பன்மைத்துவத்தின் கூறுகளாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. எனவே, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் செயன்முறைகளிலே சிங்களவரையோ, தமிழரையோ காட்டிலும் அவர்கள் அரசியல் அந்தஸ்துக் குறைந்தவர்கள் அல்லர் என்பதனை நாம் நினைவிலே கொள்ள வேண்டும்.

இனப் பெரும்பான்மைவாதத்தினை சிறுபான்மையின மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையிலே அனுபவிக்கும் ஒரு நாடான இலங்கையிலே அரசினை மீளுருவாக்கம் செய்யும் செயன்முறைகள் இனத்துவ அடையாளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், அந்தச் செயன்முறைகள் நாட்டின் நில ரீதியிலான இனப் பரம்பலினைப் பற்றிய‌ எளிமைப்படுத்தப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் இருக்காமல், அவற்றின் சிக்கற் தன்மை குறித்து கரிசனை கொண்டவையாக இருக்க வேண்டும். உதாரணமாக நாட்டின் சர்ச்சைக்குரிய நிலப்பரப்புகளிலே ஒன்றாகக் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கிறது என்பதனை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அந்த மாகாணம் வட மாகாணத்துடன் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா எனத் தீர்மானிப்பதிலே கிழக்கு முஸ்லிம்களின் நிலைப்பாடு முக்கியமான பங்கினை வகிக்கப் போகிறது.

ஹோமி பாபா, ஸ்ருவற் மோதா போன்ற அறிஞர்களால் முன்வைக்கப்படும் விளிம்புத்தன்மை (liminality) என்ற எண்ணக்கரு இலங்கையின் நிலப்பரப்புக்களுக்கும், இனத்துவ அடையாளங்களுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்குவதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.[v]விளிம்புத்தன்மை என்பது ஒரு பொருளின் அடையாளம் உறுதியானதாகவோ, நிலைத்ததாகவோ இருக்காது, ஐயப்பாட்டினை ஏற்படுத்தும் வகையில், அசைந்து கொண்டும், மாறிக் கொண்டும், பாயி நிலையில் இருப்பதனைக் குறிக்கும் ஓர் எண்ணக்கரு. வட கிழக்கின் சில பகுதிகள் உள்ளடங்கலாக இலங்கையில் இருக்கும் பல நிலப்பரப்புக்களின் இன அடையாளம் விளிம்புத் தன்மை மிக்கதாக இருக்கிறது. பொருளாதாரத் தேவைகளின் நிமித்தமான இடப்பெயர்வுகள், பாரம்பரிய ரீதியிலான இனப் பல்வகைமை, அரச குடியேற்றத் திட்டங்கள் மற்றும் உலகமயமாக்கற் செயன்முறைகள் இந்த நிலப்பரப்புக்களின் இன ரீதியிலான அடையாளத்தினை உறுதியற்றதாக்கி, விளிம்புத் தன்மை மிக்கனவாக மாற்றுகின்றன. இலங்கையும், இலங்கையின் வட கிழக்கும் பல்லின சமூகங்கள் அமைதியாகக் கூடி வாழக்கூடிய புரட்சிகரமான பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் நிலையங்களாக இருக்க வேண்டுமாயின் அரச மீளுருவாக்கத்தின் போது இலங்கையின் நிலப்பரப்புக்களிலே அவதானிக்கப்படும் விளிம்புத் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் அவசியம். நிலத்தினது விளிம்புத் தன்மையானது அந்த நிலத்தினது இறைமையினை ஒரு குறித்த சமூகத்திடம் மாத்திரம் ஒப்படைப்பதனை அனுமதிக்க மாட்டாது. அதேவேளை அந்த நிலத்தில் வாழும் எந்த ஒரு சமூகத்தினையும் ஒதுக்கி வைத்து விட்டு அந்த நிலத்தின் இறைமையினை நாம் தீர்மானிக்க முடியாது என்பதனையும் விளிம்புத் தன்மை வலியுறுத்துகிறது. இந்த வகையிலே ஒரு விளிம்புத் தன்மையான நிலத்திலே சுயாட்சியினைக் கோரும் போது, சுயாட்சியில் குறிப்பிடப்படும் சுயம்/ சுயங்கள் ஒரே நேரத்தில் ஒருமையான சுயமாகவும், பன்மையான சுயங்களாகவும் உள்ளது/ உள்ளன‌. எற்றியென் பலிபார் என்ற அறிஞரின் கருத்தின்படி அரசினது உருவாக்கத்தின் போது, அரசு ஒரே நேரத்தில் பல அடையாளங்களினைக் கொண்ட மக்களினை (தமிழ், சிங்களம், முஸ்லிம்) ஒரு அடையாளம் (ஸ்ரீலங்கன்) கொண்ட பிரஜைகளாகவும், ஒரு அடையாளம் கொண்ட பிரஜைகளினை பல அடையாளங்கள் கொண்ட மக்களாகவும் மாற்றுகிறது.[vi]இதனால், அரசுருவாக்கம் என்பது ஒரு முடிவிலியான தொடர் செயற்பாடாக மாறுகிறது. அரசு எம்மை இன, மத, சாதி, வர்க்க, பால் அடிப்படையில் தொடர்ந்தும் (மீள்) உருவாக்குவதன் மூலம் அது தொடர்ந்தும் உயிர்வாழ்கிறது. இதனால், நாம் எல்லோரும் சமமானவர்கள் வருவதற்கான சந்தர்ப்பம் ஒரு முடிவிலியான முறையிலே தொடந்தும் எதிர்காலத்துக்கு பின்போடப்படுகிறது.

நாம் அநீதியினையும் அடக்குமுறையினையும் எதிர்கொள்ளும் தருணங்களிலே குழுவாகப் போராடுவதற்கு, எமது இன அல்லது தேசிய ரீதியிலான சுய நிர்ணயம் எமக்கு உதவும். ஆனால், அரசின் மத்தியிலும் சரி அரசின் பிராந்தியங்களிலும் சரி அரச உருவாக்கத்தில் ஈடுபடும் சுயம்/ சுயங்கள் தற்போது உள்ள அரசிடம் இருந்து விடுதலையினைக் கோரி நிற்கும் சுயத்திலிருந்து வேறுப்பட்டதாக/ வேறுபட்டவையாகவே இருக்க வேண்டும். ஏனெனில், இலங்கையிலே நாங்கள் அவதானிக்கும் இனப் பல்வகைமையினைப் புரிந்துகொள்ளுவதற்கு தமிழ்த் தேசிய அரசியல் முன்வைக்கும் நில இருமைச் சட்டகம் (சிங்களம் – தமிழ்) பொருத்தமற்றது. இடம்பெயர்ந்த மக்கள், பிராந்திய சிறுபான்மையினர், குடியமர்த்தப்பட்ட மக்கள் போன்றவர்கள், இலங்கையிலே சமஷ்டியினைப் பற்றி நாம் சிந்திக்கையிலே, எமக்குச் சவாலாக அமையும் மக்கள் குழுக்களாக இருக்கின்றனர். ஆனால், எமது சிந்தனைப் போக்கினைத் தேசியவாதத்தின் நில அடையாளச் சட்டகங்களில் இருந்து விடுவித்து சமஷ்டியினைப் பற்றி நாம் சிந்திபோமானால் இந்தச் சவாலினை நாம் வெல்லமுடியும். அவ்வாறு செயற்படும் போது நாம் ஒரு கூடிய நீதியினை வழங்கக் கூடிய அரசினையும், பல்லின மக்கள் நாட்டின் பிராந்தியங்களிலே கூடி வாழக்கூடிய ஓர் அரசினையும் ஒரே நேரத்திலே தோற்றுவிப்பதற்கான வழிகளைக் கண்டறிய முடியும். வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்கள் சுயாட்சியினைக் கோர முடியும்; ஆனால், அவர்கள் அங்குள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களினை விலத்திவிட்டு சுயநிர்ணயம் செய்ய முடியாது. ஏனெனில், வட கிழக்கில் உள்ள‌ தமிழர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ, அவர்கள் தற்போது தாம் வாழும் நிலப்பரப்புக்களினைச் சிங்களவருடனும் முஸ்லிம்களுடனும் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதனை அவர்கள் மறுக்க முடியாது. இதனாலேயே திங்கட்கிழமை நடக்கும் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தாலும், வட கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கான பயணத்திலே, அந்தப் பிராந்தியத்திலும், நாட்டின் ஏனைய பிராந்தியங்களிலும் வாழும் ஏனைய இன மக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாத்திரமே, தமக்காகவும் ஏனையோருக்காகவும், நீதியும் ஐக்கியமும் மிக்க பன்மைத்துவத்தினை மதிக்கும் ஓர் எதிர்காலத்தினை உருவாக்க முடியும்.

About Thinappuyal News