தேர்தலில் இறங்கும் உலகின் முதல் ரோபோ…!

ஜப்பானில் மேயர் தேர்தலில் முதன் முறையாக ரோபோ ஒன்று போட்டியிடுகின்றது.ஜப்பானில் சாமுராய், விடுதி வரவேற்பாளர், தொழிற்சாலை ஊழியர் போன்ற பணிகளில் ரோபோக்களை ஜப்பானியர்கள் ஏற்கனவே கொண்டுவந்துவிட்டனர்.

ஆனால், சட்டப்பூர்வமான அரசாங்கப் பணிகளில் இதுவரை எந்த ரோபோவும் வேலை செய்யவில்லை. இந்நிலையில், டாமா நகரில் நடைபெறும் மேயர் தேர்தலில், மனிதர்களுடன் சேர்ந்து முதல் முறையாக ரோபோவும் களத்தில் குதித்திருக்கிறது.

மேயர் தேர்தலில் போட்டியிட இருந்த மிச்சிஹிடோ மட்சுடா(44) என்பவர், தனக்கு பதிலாக இந்த ரோபோவை தேர்தலில் போட்டியிட வைக்கிறார். இது குறித்து அவர் பிரச்சாரத்தில் கூறுகையில், ‘உலகிலேயே மேயர் தேர்தலில் நிற்கக்கூடிய முதல் ரோபோ இதுதான். இந்த நகரத்தைப் பற்றிய அத்தனை விடயங்களும் ரோபோவுக்குத் தெரியும்.

நியாயமான, பாரபட்சம் இல்லாத, துரிதமாக வேலை செய்ய, வேகமாக முடிவெடுக்க இந்த ரோபோவால் முடியும். மனிதர்களை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒருமுறை இந்த ரோபோவுக்கு வாக்களித்துப் பாருங்கள். உண்மையை அறிந்து கொள்வீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நகரில் பல இடங்களில் வேட்பாளர்கள் படங்களுடன் ரோபோவின் படங்களும் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், பிரச்சாரத்திலும் இந்த ரோபோ ஈடுபட்டு வருகிறது.மக்களில் பலர் ரோபோ தேர்தலில் வெற்றி பெற்றால் ஊழல் குறையும் என்றும், ஒரு சாரார் இது ஏமாற்று வேலை என்றும் கூறுகின்றனர்.

About Thinappuyal News