அரசியலில் நெளிவு சுழிவு தெரியாத வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தினால் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம்

பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இதற்குக் காரணம் தமிழரசுக்கட்சியினுடைய சரியான தலைமைத்துவம் சரியாக செயற்படாதமையினாலேயே. குறிப்பாக முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமாகிய ப.சத்தியலிங்கம் அவர்களே வவுனியா மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் இணைப்பாளர் ஆக செயற்பட்டுவருகின்றார். இவருக்கு அரசியலில் நெளிவு சுழிவுகள் தெரியாததன் விளைவும் இடம் பொருள் ஏவல் பார்த்து செயற்படாததன் தன்மையுமே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வவுனியாவில் நகரசபையினைக் கைப்பற்ற முடியாமல் போனமைக்கான காரணமாக அமைகின்றது.

அதன்படி பார்க்கும்பொழுது, வவுனியா நகரசபைக்கான தலைவர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக தமிழர் விடுதலைக் கூட்டணி 3 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3 வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி 3 வாக்குகளும், ஈ.பி.டி.பி ஒருவாக்கும் பொது ஜன பெரமுனவின் ஒருவாக்குமாக மொத்தம் 11 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இ.கௌதமன், நகரசபையின் முன்னாள் தலைவரான வேலுச் சேமன் எனப்படும் ச.சுப்பிரமணியத்தின் பெறா மகனாவார்.
இத் தெரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜ.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா நகரசபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, ஈ.பி.டீ.பி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணி வவுனியா நகரசபையை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌதமன் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவராவார். மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர் விகிதாசார முறையில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னரே கட்சியில் இருக்கக்கூடியவர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடாத்தியிருக்க வேண்டும். அப்பேச்சுக்கள் இரண்டு விதமாக நடத்தப்பட்டிருக்கவேண்டும். உள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் வைத்து அரசியலில் சதி செய்வது வழமை. அது இடம், பொருள், ஏவல் என்பவற்றுக்கு அமைய மாற்றப்படவேண்டும். அரசியல் செய்யத்தெரியாதவர் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்படாவிடின், வவுனியாவைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சி மீண்டெழுவது என்பது கடினமானதொன்றாக அமையும். அடி தடி, வெட்டுக்குத்து என்பன கட்சிகளுக்கு இடையில் வருவது வழமை. அதற்குப் பயந்து புறமுதுகு காட்டி ஓடுபவர்கள் கட்சிக்கு விசுவாசமற்றவர்களாகவே செயற்படுவார்கள் என்பது பொருள். தமிழரசுக்கட்சியின் கரங்களை பலப்படுத்தத் தவறியமையின் காரணத்தினாலேயே இவ்வாறான தோல்வி ஏற்பட்டுள்ளது.
ஒரு புள்ளி அதிகமாக பெற்றாலும் அது வெற்றிதான். அதனை சாதாரண தோல்வி எனக்கருதிவிட முடியாது. என்ன விலை கொடுத்தாவது நகரசபையை தமிழரசுக்கட்சி கைப்பற்றியிருக்கவேண்டும். தற்போது இவ்விடயத்தில் கோட்டைவிட்டிருப்பது என்பது வன்னியில் எதிர்வரும் பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்கள் கேள்விக்குறியாகும் நிலைப்பாடாகவே இவ் சம்பவம் அமைந்துள்ளது. இதிலிருந்து முன்னாள் வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இத்தலைகுனிவு என்பது தமிழரசுக்கட்சிக்கும் தான். இதனால் எதிரிகள் இலகுவில் ஜெயிக்கக்கூடிய தன்மை உருவாக்கப்படும். இனியாவது தமிழரசுக்கட்சி விழிப்புடன் செயற்படவேண்டிய தேவை உருவாகியுள்ளது.

About Thinappuyal News