முல்லை மாவட்ட அபிவிருத்திக்காக 318 மில்லியன் ரூபா நிதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 318 மில்லியன் ரூபா நிதியில் முதற்கட்டமாக 68 மில்லியன் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் வீடமைப்பு, உட்கட்டுமான வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பின்னர் தொடர்ச்சியாக வருடாந்தம் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 318 மில்லியன் ரூபா நிதி இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட அரச அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இவ்வாண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 156 அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் 65 வீதமான திட்டங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டும் 18 வீதமானவை கடற்தொழிலை மையமாக வைத்தும் முன்னெடுக்கப்படவுள்ளன. கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 55 செயற்திட்டங்களும், மாந்தை கிழக்கில் 21 செயற்திட்டங்களும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 29 செயற்திட்டங்களும், துணுக்காய் பிரதேசத்தில் 16 செயற்திட்டங்களும், முல்லைத்தீவு நகரத்தை மையமாகக்கொண்டு 35 செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக பல்வேறு அமைச்சுக்கள் ஊடாக 318 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அபிவிருத்தி செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்த நான்கு கட்டங்களாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 68 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், மொத்த ஒதுக்கீடான 318 மில்லியன் ரூபா நிதியில் 162 மில்லியன் ரூபா நிதியை மீள்குடியேற்ற அமைச்சு ஒதுக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

About Thinappuyal News