ஐஸ்கிறீமில் மலத்தொற்று என பத்திரிகையில் வெளிவந்த செய்திகளுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது-அமைச்சர் சத்தியலிங்கம்

123

timthumbயாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 59 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தடையும் விதிக்கப்பட்டது.   இது தொடர்பில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்களுக்கு மாத்திரம் தடைவிதிக்கப்பட்டமை அரசியல் உள்நோக்கம் உள்ளது எனவும் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கவனயீர்ப்புப் பிரேரணையினை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்தார்.

அன்றைய அமர்விற்கு சுகாதார அமைச்சர் சமுகமளிக்காமையினால் அதற்கான முழு விளக்கத்தையும் ஆதார பூர்வமாக நேற்றைய அமர்வில் வழங்கியிருந்தார்..   மேலும் தெரிவித்ததாவது,   சபையில் நான் இல்லாதவேளையில் தனிநபர் கவனயீர்ப்புப் பிரேரணையினை எனது அமைச்சு சார்ந்த ஒரு விடயத்தை சபையில் எடுத்துக் கொண்டது பொருத்தமற்றது.

ஐஸ்கிறீமில் மலத்தொற்று என பத்திரிகையில் வெளிவந்த செய்திகளுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது.    மேலும் கடந்த அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரால் பல்வேறு தரவுகள்  முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த தரவுகள்  உண்மையானவையா? மேலும் குறித்த தரவுகள் எவ்வாறு அவர்களிடம் சென்றது எனவும் அறியவிரும்புகின்றேன்.    உணவுகளைக் கையாளும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் உரிமை அந்தந்த பிரதேச சபைகளுக்கே உரியது. அவர்கள் பணம் செலுத்தியே அனுமதியைப் பெற வேண்டும்.    எனினும் அவற்றில் சுகாதார துறையினருடைய பங்கு என்ன என்பது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.    அனுமதிப்பத்திரம் கிடைத்து விட்டது என்பதற்காக எப்போதும் ஒரே மாதிரியான பரிசோதனையினையோ அல்லது அனுமதியினையோ வழங்க முடியாது.

சுகாதார பிரிவினர் தங்களுடைய கடமையினைச் செய்யவேண்டும். அவற்றையே ஐஸ்கிறீம் விடயத்திலும் செய்தனர்.    அதிகாரிகள் கடமையைச் செய்தார்கள்   9 பேர் கொண்ட விசேட அதிரடிப்படையே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.    எனினும் எம்மிடம் எந்தவித விசேட அதிரடிப்படையும் இல்லை . அதிகாரிகள்  தங்களது கடமைகளையே சரிவரச் செய்தனர். இந்த விசேட அதிரடிப்படை எல்லாம் உங்களிடம் தான் உள்ளது. எங்களிடம் விசேட அதிரடிப்படையுமில்லை, பொலிஸ்படையும் இல்லை.   அத்துடன் ஐஸ்கிறீமுக்குள்  ஒயில் ஊற்றப்பட்டதாகவும் மண்போடப்பட்டதாகவும்  குற்றஞ்சாட்டப்பட்டது.  எனினும் கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதி வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து உற்பத்தியாளர்களிடம் கேட்டேன்.   ஆனால் அவர்கள் அவ்வாறு நடைபெறவில்லை என தெரிவித்திருந்தனர்.

எனினும் அவ்வாறு ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக அறியத்தருமிடத்து யாராக இருந்தாலும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்.   சுகாதாரமில்லாத உணவுகளை விற்க அனுமதியோம்   வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது உண்மைதான். எனினும் சுகாதராமற்ற உணவுகளை தயாரிப்பதற்கோ விற்பனை செய்வதற்கோ ஒரு போதும்  இடமளியோம்.   ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்பதற்காக ஒட்டுமொத்த மக்களுடைய சுகாதார பாதிப்புக்கும் இடமளிக்க முடியாது.    ஐஸ்கிறீம் தடை திடீரென் செய்யப்பட்டதல்ல. பல ஆண்டுகளாக நோய்தாக்கம் மற்றும் உற்பத்தி மாதிரிகளின் பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.    இவ்வாறான உற்பத்தி நிலையங்களுக்கு முன் அறிவித்தல் கொடுத்து செல்ல வேண்டியதில்லை. திடீர் சோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.    இவ்வாறு மேற்கொண்டமையினால் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும் பல உற்பத்தி நிலையங்கள், விற்பனை நிலையங்களில் இனங்காணப்பட்டன.

எலிகள் , பல்லிகள், நாய் , பூணை என்பன உற்பத்தி நிலையங்களில் இருந்தமை, கைகழுவுவதற்கு வசதிகள் அமைக்கப்படவில்லை, சரியான முறையில் களஞ்சியப்படுத்தப்படவில்லை போன்ற பல செயற்பாடுகளைக் காணமுடிந்தது.   எனவே தடை விதிக்கப்பட்ட நிலையங்களில் 46 நிலையங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 10 நிலையங்கள் திருத்த வேலைகளை மேற்கொண்டு வருகின்றன. 3 நிறுவனங்கள் தொழிலை கைவிட்டுள்ளன.

அதேபோல யூஸ் உற்பத்தியில் 6 நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 9 நிறுவனங்கள் தற்போது அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு நிறுவனத்தில் ஒன்று நீதிமன்ற நடவடிக்கைக்கும் மற்றையது தொழிலையும் நிறுத்தியுள்ளன.   குறித்த உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான பயிற்சிகளையும் வழங்கியுள்ளோம். அத்துடன் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டவர்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம்.   போராட்டம் நடத்தப்பட்டதால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது என்ற கருத்தை முடிந்தால் நிரூபியுங்கள். இதில் எவ்வித அரசியலோ உள்நோக்கமோ இல்லை.    மேலும் பணம் பெற்றுக் கொண்டும் இவ்வாறான செயற்பாட்டை நாம் மேற்கொள்ளவில்லை. மக்களின் நலனுக்காகவே செயற்பட்டோம் எதிர்வரும் காலங்களிலும் செயற்படுவோம் என்றார்.

SHARE