ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது சாத்தியமா? பிள்ளையான் மகிந்தவிற்கு வக்காளத்து வாங்கியே தீரவேண்டும் வேறு வழி இல்லை

119

கிழக்கு மாகாணசபை தேர்தல் காலத்தில் தன்னை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் 10கோடி ரூபா பணத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

pillayan pillaiyaan mahi-pillayan

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மண்டபத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நடக்க முடியாத சம்பவங்களை மைத்திரிபால அணியினர் வெளியிட்டு வருகின்றனர்.அது அவர்களின் பிரச்சினை. ரணில் வந்தால் என்ன யார் வந்தால் என்ன அது அவர்களின் பிரச்சினை. நாங்கள் ஜனாதிபதியாக முடியாது. தற்போதைய சூழ்நிலையில் ராஜபக்ச குடும்பத்திற்கும் பண்டாரநாயக்கா குடும்பத்திற்கும் இடையே ஒரு போட்டி காணப்படுகின்றது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளராக இத்தனை காலமும் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி எப்போதாவது பாராளுமன்றத்தில் கதைத்திருக்கின்றாரா? அல்லது விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் பங்குபற்றியிருக்கின்றாரா?

நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருக்கின்றார். அவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி விளங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறுகின்றார்.

இனத்துவேசிகளான ஹெல உறுமய, ஜே.வி.பி போன்ற கட்சிகள் அங்கிருக்கின்றன. 2002ம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில் சந்திரிக்கா அரசுடன் இணைந்திருந்து அவர்கள் பேசியதையெல்லாம் யாரும் மறக்க முடியாது.

அப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து கூட்டாட்சி நடத்தி ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது சாத்தியமா? இருக்கின்ற நிலைமைகளை குழப்பி நாட்டின் வளர்ச்சியையும் அபிவிருத்திகளையும் குழப்பப் போகின்றார்கள்.

தமிழ் மக்கள் இவ்விடயத்தில் ராஜபக்ச குடும்பத்தையோ பண்டாரநாயக்கா குடும்பத்தையோ பார்க்க வேண்டாம். நீண்ட கால வேண்டுதல்களின் பின்னர் நிம்மதி ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இருக்கின்ற நிலைமைகளை சாதகமாக பயன்படுத்த வேண்டும்.

அதை விடுத்து இம்முறையும் புதியதொரு தலைமுறை வந்திருக்கின்றது, அவரை நாங்கள் ஆதரிப்போம் என பலர் கூற வாய்ப்பிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். இவ்விடயத்தின் பின்னணியில் மறைமுகமாக பல சக்திகள் இருக்கின்றன.

கடந்த தேர்தலின் போது எங்களை தோற்கடிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்திய அரசாங்கம் பத்துக்கோடி ரூபாவை வழங்கியிருந்தது. அவர்கள் கட்சி நிதியையா செலவழித்தார்கள்? அல்லது அவர்களிடம் பணம் பெற்றா நீங்கள் வாக்களித்தீர்கள். அவர்கள் வந்து பாட்டை போட்டுக்கொண்டு மேடையில் நின்று பேசினார்கள் நீங்கள் அவர்களுக்கு வாக்களித்தீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கிழக்கு மாகாண மக்களைப் பற்றி அறிவியலாக சிந்திக்க முடியாது. நாங்கள் செய்வதை பிழையாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதும் அவர்கள் செய்வது மட்டும் சரியென்பார்கள். கிழக்கு மாகாணசபையினை நாங்கள் பொறுப்பேற்ற போது எங்களை பல்வேறு வகையில் விமர்சித்தார்கள்.

ஆனால் வடமாகாணசபையினை அவர்கள் பொறுப்பேற்றபோது இராஜதந்திரம் என்றார்கள்.இதுதான் அவர்களின் செயற்பாடு.அவர்கள் கிழக்கு மாகாணத்தில் ஒரு தலைமைத்துவத்தினை உருவாக்குவதை என்றும் விரும்பமாட்டார்கள்.

தற்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துக் கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்றால் கையிலிருப்பது மாகாணசபை முறையாகும். அதை நாங்கள் ஏற்றுக்கொண்டது பிழையா? நீங்கள் பிந்தி ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். இதன் காரணமாகவே இன்னமும் உங்களுடைய பிரச்சனை நீண்டுகொண்டே செல்கின்றது.

1987ம் ஆண்டு தான் மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டது. அதை கொண்டு வந்தது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தானே. ஜூலை கலவரம், நடந்த சமயத்தில் ராஜீவ் காந்தியால் கொண்டு வரப்பட்டதே மாகாணசபை முறைமையாகும். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அதை மனமுவந்து கொடுக்கவில்லை. பல பிரச்சினைகளின் மத்தியில் படைகளை அனுப்பி அதன் பின்னரே கொடுத்தார்கள். அதையும் குழப்பியவர் பிரேமதாச தானே.

மகிந்த ராஜபக்ச வந்த பின்னர் தான் ஆகக் குறைந்த தீர்வாக மாகாணசபை முறைமையை பிள்ளையானுக்கு வழங்கினார். பல இழுபறிகளின் மத்தியில் விக்கினேஸ்வரனுக்கும் மாகாணசபை முறைமையை வழங்கியிருக்கின்றார். நாட்டில் அதிகாரப்பகிர்வு முறை இயங்கி வருகின்றது. மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியையும் அதிகாரத்தையும் ஓரளவாவது வழங்கியிருக்கின்றார். இருக்கின்ற பிரச்சினைகளை சிறிது சிறிதாக பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும்.Eastern Province Chief Minister Pillayan is escorted by army commandos as he walks to the scene of a shooting in Athurugiriya

படிப்படியாக மக்களை கட்டியெழுப்பி அவர்களை அணிதிரட்டி தென்பகுதியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அங்கிருக்கின்ற முதலமைச்சருக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தேவை என்ற நிலையை உருவாக்கி எல்லோரும் அதை பெற்றுக் கொள்ளலாம்.

அதைவிடுத்து மகிந்த ராஜபக்சவை நீதிமன்றத்தில் ஏற்றி அவரை பழிவாங்கிய பின்னர் தான் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் அது நடக்காது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விட்டுச் சென்றவுடன் மகிந்தவின் ஆட்சி முடியப் போகின்றது எனப் பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் மைத்திரிபால சிறிசேன, ஹெல உறுமய, ஜே.வி.பி போன்றவை அரசாங்கத்தை விட்டுச் சென்ற பின்னரும் வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றிருக்கின்றது. இதன் மூலம் தற்போதைய அரசிற்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கின்றது என்பது புலனாகின்றது. ஆகவே யாரும் மடைத்தனமாக பேசக்கூடாது.

TPN NEWS

SHARE