அமைச்சர் றிசாட்டின் “நீ அக்கரை நான் இக்கரை” விளையாட்டு!

129

​அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமாகிய றிசாட் பதியூதீனும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய உனேஸ் பாரூக்கும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவா? மைத்திரியா? யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்கும் அவர்களின் கட்சிக்கூட்டத்தில் முடிவு எடுக்க முடியாமல் திணறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆளும்கட்சியும் பொது எதிரணியும் பலமாக இருப்பதால் யார் வீழ்ந்து யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை அநுமானிக்க முடியாமல் இருப்பதால், அவசரப்பட்டு யாராவது ஒரு தரப்புக்கு சாதகமாக முடிவு செய்து பதவிகளை இழக்க முடியாது என்று கட்சிக்கூட்டத்தில் கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
எனவே இப்போதைக்கு தமது கட்சி இரண்டாக பிரிந்து நின்று இரு தரப்பையும் ஆதரிப்பது புத்திசாலித்தனமான அரசியல் என்றும், பின்னர் யாருடைய கை ஓங்குகிறதோ அப்பக்கம் ஏற்கனவே ஆதரவு தெரிவித்த தமது கட்சி உறுப்பினர்கள் சார்பாக பேசி பதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தால் தான் கட்சியையும் கட்சியை நம்பியிருப்பவர்களையும் பாதுகாக்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லோருடைய விருப்பத்துக்கும் அமைவாக தலைவர் றிசாட் சக உறுப்பினர் உனேஸ் பாரூக் அவர்களுக்கு கை கொடுத்து பொது எதிரணியில் போய்ச்சேருமாறு இன்முகத்துடன் வழியனுப்பி வைத்துள்ளார்.
தமது இந்த அரசியல் நடவடிக்கை தமக்கு போட்டிக்கட்சியான ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சுக்கு தெரிய வந்தால் அவர்கள் தமக்கு கிடைக்கவிருக்கும் பதவிகளுக்கு பெரும் இடையூறாக இருப்பார்கள் என்பதால் றிசாட்டும் – உனேஸ்சும் கருத்து முரண்பாடுகள் காரணமாக தாம் பிரிந்ததாக மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
உருவாக்கப்பட்ட இந்த மாயையை நம்ப வைப்பதற்காக பிரிந்து நின்று கொண்டு “உனைஸ் பாரூக்கை பாராளுமன்ற உறுப்பினராக்கியதற்காக வெட்கப்பட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக” றிசாட்டும், பதிலுக்கு “அல்லாவின் மேல் சத்தியம் செய்வதாக பொறுப்புக்கொடுப்பதாக” உனேஸ்சும் ஒருவர் மாறி ஒருவர் ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையில் எவ்வித கருத்து முரண்பாடுகளும் மனஸ்தாபங்களும் கிடையாது என்பதே உண்மை நிலையாகும். அது கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகோபித்த முடிவாகும். ஏனெனில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உனேஸ்சை தமது கட்சியில் வந்து சேருமாறு அணுகியமைக்கு அவர் பொருத்தமற்ற காரணங்களை கூறி மழுப்பியுள்ளார்.
தேர்தல் முடிவில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அவர்களுடன் இணைந்திருந்து தாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் பெயராலும் அல்லாவின் பெயராலும் பதவிகளை பெற்று தம்மையும் கட்சியையும் வளர்ப்பதற்கு இவர்கள் நன்கு திட்டமிட்டு நாடகமாடியுள்ளமை தெரிய வந்துள்ளது.
முஸ்லிம் மக்களின் தலைவன் அஸ்ரப் இருந்திருந்தால், இன்று முஸ்லிம்களும் தமது பேரம் பேசும் சக்தியை நிரூபித்திருப்பார்கள். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டி, தப்பிப்பிழைத்து பதவிகளுக்காக மதில் மேல் பூனையாக காத்துக்கிடக்கும் சோரம் போன பிரதிநிதிகளை இன்று அவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்.
அஸ்ரப்பின் பாசறையிலிருந்து…
-ஜாஹீர்- 
SHARE