காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ் மக்கள் தத்தமது காணிகளில் மீளக்குடியேறவும்! – ஆனந்தன் எம்.பி வேண்டுகோள்.

98

 

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிக்குடியிருப்பு மற்றும் மருதோடை அ.த.க.பாடசாலைகளினதும், அக்கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்களினதும் வேண்டுகோளுக்கமைய அக்கிராமங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் வறியநிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கி வைத்தார்.
கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு, வவுனியா இரு மாவட்டங்களினதும் எல்லைப்பகுதிகளை உள்ளடக்கி வெலிஓயா எனும் அங்கீகரிக்கப்படாத தனிச்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவை இந்த அரசு உருவாக்கியுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் எல்லைக்கிராமங்களில் பட்டிக்குடியிருப்பு உட்பட பல தமிழ் கிராமங்களும் உள்ளமையால், தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் சிங்கள மக்களால் அடாத்தாக கைப்பற்றப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் அதிதீவிரமாக நடைபெற்று வரும் ஆபத்து சூழலுக்குள் தமிழ் கிராமங்கள் பலவும் சிக்கியுள்ளன.
கடந்த கால போர்ச்சூழல்கள் காரணமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும், நாட்டுக்கு வெளியேயும் வசிக்கும் தமிழ் மக்கள் மீளவும் தத்தமது பூர்வீக காணிகளில் குடியேறாமல் அவற்றை பராமரிப்பின்றி கைவிட்டுள்ளமையே இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை சிங்கள மக்களுக்கு வசதியாக அமைகின்றது.
எனவே காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக எமது மக்கள் தமது காணிகளில் மீளவும் குடியேற வேண்டும். இப்போது குடியேறியுள்ளவர்கள் ஏனையவர்களையும் குடியேறுமாறு ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமக்கு உரித்துடைய காணிகளில் தமது உறவினர்களையாவது குடியமர்த்தி அவற்றை பராமரிக்க வேண்டும். கடந்த கால போர்ச்சூழல்கள் காரணமாக காணிகளுக்கு காணி உரித்து பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது. காணிகளில் மீளவும் குடியேறி அவற்றை பராமரிக்கும்போது காணி உரித்து பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இன்றுள்ளதைப்போன்று அன்று கனரக வாகன வசதிகள் இருக்கவில்லை. உங்கள் பெற்றோர்கள் கைவேலை செய்து வியர்வை சிந்தி காடு வெட்டியே இந்த கிராமங்களை தோற்றுவித்தார்கள். கஸ்டப்பட்டு உண்டாக்கிய காணிகளை சிங்கள குடியேற்றங்கள் உருவாக்குவதற்கு நாம் அனுமதிக்க முடியாது. எனவே வவுனியா வடக்கு என்று மட்டுமல்ல, வடக்கின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் தமக்கு உரித்துடைய காணிகளில் மீளவும் குடியேறி அக்காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த உதவ வேண்டும் எனவும் ஆனந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கிராமங்களின் பாடசாலை சமுகமும் மக்களும், போக்குவரத்து, மின்சாரம், நீர், வாழ்வாதார வசதிகள் இன்றி தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், இடர்நிலைகள் தொடர்பில் ஆனந்தன் எம்.பியிடம் எடுத்துக்கூறியதுடன் அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து தமது இயல்புநிலைக்கு வழியேற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக, முப்பது வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு இன்றி பழுதடைந்து காணப்படும் தனிக்கல்லுகுளத்தை புனரமைத்து வீண் விரயமாகிக்கொண்டிருக்கும் நீர் வளத்தை சேமித்து தமது விவசாய செய்கைக்கு உதவுமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.
மாகாண விவசாயத்துறை அமைச்சின் கவனத்துக்கு குறித்த விடையத்தை தெரியப்படுத்தி பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆனந்தன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பட்டிக்குடியிருப்பு அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் 135 மாணவர்களுக்கும், மருதோடை அ.த.க.பாடசாலையில் கல்வி பயிலும் 50 மாணவர்களுக்கும் பிரான்ஸ்ஸை தளமாகக்கொண்டு செயல்படும் ரி.ஆர்.ரி வானொலியின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, நெடுங்கேணி பிரதேசசபை உறுப்பினர்கள் பூபாலசிங்கம் மற்றும் மகாலிங்கம், பரமேஸ்வரன், மருதோடை கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஜெயந்தன், கிராம அபிவிருத்திச்சங்கங்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினருக்கும் அதன் நேயர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
unnamed (1) unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10)
SHARE