நோ-பாலால் சர்ச்சை: இந்திய வீரர்களுடன் வார்னர், வாட்சன் கடும் மோதல்

122
சீண்டி விட்டு வம்பில் மாட்டி விடுவதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கில்லாடிகள். சொல்லப்போனால் இதை அவர்கள் ஒரு யுக்தியாகவே பின்பற்றுகிறார்கள்.

பிலிப் யூக்ஸ் மரணத்தின் தாக்கமோ என்னவோ அடிலெய்டில் நடந்து வரும் முதலாவது டெஸ்டில் முதல் மூன்று நாட்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக நகர்ந்தது.

இந்த நிலையில் போட்டியின் 4-வது நாளான நேற்று மோதல் போக்கு வெடித்தது. ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்சில் டேவிட் வார்னர் 66 ரன்களில் ஆடிக் கொண்டிருந்த போது (33.3 ஓவர்) இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோனின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். அவர் பெவிலியன் நோக்கி நடையை கட்ட ‘கமான்…கமான்…’ (வா..வா..) என்று வருண் ஆரோன் உற்சாகத்தில் கத்தியபடி இந்திய வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆனால் அடுத்த சில வினாடிகளில், வருண் ஆரோன் தனது காலை கிரீசுக்கு வெளியே எடுத்து வைத்து நோ-பாலாக வீசியிருப்பது தெரியவந்ததால் அந்த பூரிப்பு தவிடுபொடியானது. வார்னர் திரும்ப அழைக்கப்பட்டார். கோபமுடன் திரும்பி வந்த வார்னர் ஆரோனிடம் ‘இப்போது வா பார்க்கலாம்’ என்று காட்டமாக சில வார்த்தைகளை உதிர்த்து விட்டு மறுபடியும் பேட் செய்ய சென்றார்.

பவுன்சராக வந்த 4-வது பந்தில் வார்னரால் ரன் எடுக்க முடியவில்லை. அப்போதும் அவர் ‘கமான்..கமான்’ என்று நக்கலடித்தார். இதனால் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர் ஷிகர் தவான் டென்ஷனாகி, ஏன் அப்படி சொல்கிறாய் என்று தட்டிக்கேட்டதுடன், ‘பேட் செய்ய போ’ என்பதை சைகை மூலம் காண்பித்தார். இதையடுத்து இருவருக்குள் கடுமையான வாக்குவாதம் உருவாக, மறுமுனையில் நின்ற ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சனும் வார்னருக்கு ஆதரவாக கோதாவில் குதித்தார். இதனால் களம் பரபரப்புக்குள்ளானது.

பிறகு இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலி, நடுவர்கள் இயான் கவுல்டு, எராஸ்மஸ் தலையிட்டு இரு தரப்பு வீரர்களையும் சமாதானப்படுத்தினர். நடந்தது குறித்து கோலி நடுவர்களிடமும் விளக்கினார்.

இன்னொரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும், இந்திய வீரர் ரோகித் ஷர்மாவும் உரசிக் கொண்டனர். ஸ்டீவன் சுமித்துக்கு ரோகித் ஷர்மா எல்.பி.டபிள்யூ. கேட்டு இரண்டு முறை நடுவரிடம் அப்பீல் செய்தார். நடுவர் மறுத்தும் ஏன் திரும்ப திரும்ப கேட்கிறாய் என்பது போல் எதிர்முனையில் நின்ற சுமித் கேட்டார்.

உடனே ரோகித் ஷர்மா, ‘என்ன?…வேறு என்ன செய்யணும்’ என்று ஆவேசமாக பதிலடி கொடுத்தார்.

சம்பவம் குறித்து வார்னரிடம் கேட்ட போது, ‘கிரிக்கெட்டில் நாம் நினைத்த மாதிரி எப்போதும் நடப்பதில்லை. உணர்ச்சியின் வேகத்தில் சில நேரம் இது போன்று நடந்து விடுகிறது. அதுதான் கிரிக்கெட். அது நோ-பால் என்று அறிவிக்கப்பட்டதும் திரும்பி வந்த நான், வருண் ஆரோனிடம் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டேன். நான் அப்படி நடந்து இருக்க கூடாது. ஒழுக்கமுடன், நல்லபடியாக விளையாட வேண்டும் என்று தான் நான் எப்போதும் விரும்புகிறேன். ஆனால் இது போன்று வாக்குவாதம் நிகழும் போது சில நேரம் எல்லை மீறி விடுகிறேன். மீண்டும் அது போன்று நடக்காமல் இருக்க முயற்சிப்பேன்’ என்றார்.

4-வது நாள் ஆட்டத்தில் சீண்டல் தலைதூக்கியதால் கடைசி நாளிலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர வாய்ப்புள்ளது

SHARE