விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது: விமானியின் இறுதிப் பதில்- உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை

109

 

விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் அத்துருகிரிய, ஹோகந்தர பிரதேசத்தில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான அன்டனோவ் – 32 ரக விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த 4 விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததுடன் ஒரு விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காயமடைந்த நிலையிலுள்ள விமானப்படை வீரரின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு இதுவரை அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீதவான் விசாரணைகளும் நேற்று இடம்பெற்றதாகவும், பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர், உயிரிழந்த விமானப்படை வீரர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விமான விபத்தில் காயமடைந்த விமானப்படை வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், தொடர்ந்தும் அவருக்கு தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க கூறினார்.

சுமார் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகமாக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் காயமடைந்த விமானப்படை வீரரின் முழங்காலுக்கு கீழ் இரண்டு கால்களும், கையொன்றும் அகற்றப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அதிக பனிமூட்டம்! விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது: விமானியின் இறுதிப் பதில்

அதிக பனிமூட்டமே இந்த விமான விபத்துக்கு காரணம் என கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால குறிப்பிட்டுள்ளார்.

விபத்து இடம்பெற முன்னரே பனி மூட்டம் நிலவுவதாகவும், சீராக விமானத்தைச் செலுத்த முடியாதிருப்பதாகவும் இரத்மலானை விமானப் படைத் தளத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு விமானிகள் தகவல் வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானம் விபத்துக்கு உள்ளாக முன்னர் குறித்த பிரதேசத்திலுள்ள மரமொன்றின் மீது மோதுண்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானியான குருநாகல் – கொக்கரல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமந்த அபேவர்தன உயிரிழந்திருப்பதாகவும், ஸ்ரீலங்கா விமானப் படையைச் சேர்ந்த தரங்க மற்றும் பீ.ஜீ. சாந்த ஆகியோரும் உயிரிழந்திருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

SHARE