இஸ்லாம் வாழ்வியல்: ரமலான் விருந்தினர்

 

 

இது எல்லோருக்கும் தெரியும் என்றால், ரஜப் அடுத்தது ஷஅபான், அடுத்தது ரமளான். இதுவும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியதுதானே. இங்கே மட்டும் தெரியாதது போல ஏன் நடந்து கொள்கிறீர்கள். புரியவில்லையே?


நம்மில் பலர் ஏதோ ரமளான் திடீர் என முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் வந்து விட்டது போல, ரமளானில் நோன்பிருந்து, இபாதத் செய்து, குர்ஆன் ஓத வேண்டிய நேரத்தில் கடை வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்களே, அது ஏன்? ஈகைப் பெருநாளைக்கு ரமளான் மாதத்தில்தான் கடைக்குச் சென்று துணிமணிகள் வாங்க வேண்டுமா? பெருநாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு மாதம் முன்பாகவே துணிமணிகள் வாங்கி விடலாமே. கடைசி நேரத்தில் தான் மக்களைக் கவர பெருநாள் ஸ்பெஷல்னு புதுவகைகள் வரும் என்று சொல்லுகிறார்கள். புதுவகை துணிகள் போடுவதால் அதிக நன்மைகள் கிடைக்குமா?
புனித ரமளானில் தொழுது, ஓதி, துஆ கேட்பதால் அதிக நன்மைகள் கிடைக்குமா? யோசியுங்கள்!

காலை 10 – 12க்கு மின்தடை. 9.50க்குள் மிக்ஸியில் அரைக்க வேண்டிய எல்லாவற்றையும் அரைத்து ரெடி பண்ணிக் கொள்ள தவறுகிறோமா? இல்லையே! இங்கே மட்டும் நம் தேவையை முன்கூட்டியே செய்துகொள்ளும் நாம் ரமளானின் சிறப்புகள் தெரிந்தும், ரமளானுக்குரிய தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்வதில்லையே, அது ஏன்?
ரமளான் கண்ணியத்துக்குரிய மகத்தான மாதம். அருள்வளங்கள் பொழியும் மாதம். ரமளானில் செய்யப்படும் ஒரு நற்செயல், ரமளான் அல்லாத பிற மாதங்களில் நிறைவேற்றப்படும் ஒரு பர்ளுக்கு (கட்டாய வழிபாட்டிற்கு) சமமாகிறது. ரமளானில் செய்யப்படும் ஒரு பர்ளு, ஏனைய மாதங்களில் செய்யப்படும் எழுபது பர்ளுக்கு சமமாகிறது.
இது பொறுமையின் மாதம். பொறுமையின் கூலி சொர்க்கம் ஆகும். இந்த மாதத்தில் இறை நம்பிக்கையாளனின் வாழ்வாதாரம் அதிகரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாம் செய்ய வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் :

1. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்ற திருக்கலிமாவை அதிகமதிகம் ஓதுவது.
2. குர்ஆனுடன் அதிக தொடர்பு.
3. அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பது.
4. அல்லாஹ்விடம் சொர்க்கம் தரும்படி கேட்பது.
5. நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு வேண்டுவது.

“நற்செயல்கள் அனைத்திற்கும் வானவர்களின் மூலம் பிரதிபலனை வழங்குகிறேன். ஆனால் நோன்பு எனக்காகவே நோற்கப்படுவதால் அதன் கூலியை நானே வழங்குகிறேன்” என்கிறான் அல்லாஹ்.
அல்லாஹ்வே நேரிடையாகத் தரும் கூலியைப் பெற நாம் ஆயத்தமாக வேண்டாமா? சொர்க்கம் அலங்கரிக்கப்படுவதும் இந்த மாதத்தில்தான். ஷைத்தான்கள் விலங்கிடப்படுவதும் இந்த மாதத்தில்தான்.

ரமளானில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு அதிகமான நன்மைகளும் அருள்வளங்களும் பொருந்திய இரவு – அதுதான் லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது. ரமளானில் சில முஸ்லிம்கள் பின்பற்றும் மிகவும் அசிங்கமான, அருவருக்கத்தக்க ஒரு விஷயம் என்னவென்றால் –

நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்திற்கு முன்பாக அல்லாஹ்விடம் கையேந்தி விசேஷமாக துஆ கேட்பதிலும், பாவமன்னிப்பு கேட்பதிலும் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தில் கேட்கப்படும் இறைஞ்சுதல்கள் அனைத்தையும் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான். அத்தகைய அருமையான நேரத்தில் இஸ்லாமியப் பெண்மணிகள் ஜவுளிக் கடைகளுக்குச் செல்லுகிறார்கள்; கடைக்காரர்கள் தருவதைக் கொண்டு இஃப்தார் முடித்துக் கொண்டு ஜவுளியும் வாங்கி வந்து விடலாம் என்ற திருப்தியுடன். இஃப்தாருக்காக வாடிக்கையாளர்களைக் கவருவதற்குக் கடைக்குக் கடை போட்டி போட்டுக் கொண்டு அதிகமான தின்பண்டங்களும் குளிர் பானங்களும் தரப்படுவதால், இதனால் கவரப்பட்டு பெண்கள் நோன்பு துறக்கும் அந்த மக்ரிப் நேரத்தில் கடைக்குப் போவதை வாடிக்கையாகக் கொள்கிறார்கள். கடைக்காரர்கள் தொழவும் இடவசதி செய்து தருகிறார்கள்.

அதிலும் சிலர் நேற்று அந்தக் கடையில் இஃப்தாருக்கு இதெல்லாம் தந்தான், நீ போன கடையில் என்ன தந்தான் என்று கேட்டு அதிகமாக தரும் கடைகளுக்குச் சென்று ஜாலியாக நோன்பைத் திறந்துவிட்டு வருவதும் உண்டு. இதில் இன்னுமொரு கொடுமையும் நடக்கிறது. நோன்பு இல்லாத முஸ்லிம்களும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் இஃப்தார் நேரத்தில் சும்மாவேனும் சாப்பிட்டு விட்டு வருவதும் உண்டு. இவர்கள் செய்யும் இந்த அற்ப காரியங்களால் எவ்வளவு பெரிய பாவமூட்டையை மறுமையில் சுமக்கத் தயார் ஆகிறார்கள் என்பதை அவர்களே உணர்வதில்லை. இது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நம் நன்மைகளைக் குறைத்துக் கொள்ளாமல், வரவிருக்கும் ரமளானை எதிர்நோக்கி, உள்ளச்சத்தோடு உண்மையானவர்களாக, நோன்பை நோற்று, ஏனைய வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு இறைவனின் அருளை, அவன் வாரி வழங்க உள்ள நன்மைகளை முழுமையாகப் பெறுவோம்

மகத்தான விருந்தாளியை எதிர் நோக்கி முஸ்லிம் உலகம் காத்திருக்கிறது. எண்ணற்ற அருட்கொடைகளை பரிசுகளாய் சுமந்துவரும் ரமளான் என்னும் அந்த விருந்தாளியைக் குறித்து நபிகளார் அதற்கு முந்தைய மாதமான

ஷபானின் இறுதித் தேதியில் ஆற்றிய உரையில் இப்படி சொல்கிறார்:

“மக்களே! மகத்தான, பாக்கியங்கள் நிறைந்த மாதம் ஒன்று எதிர்பட இருக்கிறது. அந்த மாதத்தில் ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும் இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். மேலும், இரவுவேளைகளில் தராவீஹ் எனப்படும் தொழுகையைத் தொழுவது உபரி செயலாக ஆக்கியுள்ளான். எவர் அந்த மாதத்தில் ஒரு நன்மையை செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் கட்டாய கடமையாக்கிய ஒரு செயலைச் செய்ததற்கான நற்கூலியைப் பெற்றுத் தரும். எவர் இந்த மாதத்தில் கடமையாக்கப்பட்ட ஒரு செயலை செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்பான நற்கூலியைப் பெற்றுத்தரும்.

மகத்துவம் மிக்க மாதமான ரமலான் இறைவனின் பிரத்யேகமான கருணையை உள்ளடக்கிய மாதமாகும். அதனால், ரமலானை வரவேற்கும் விதமாக நபிகளார் ஷாபானின் இரண்டு வாரங்களுக்கு முன்பே அதை வரவேற்க தயாராகிவிடுவார்.  “அண்ணல் நபி மற்ற மாதங்களைவிட ஷாபான் மாதத்தில் அதிக நோன்பை கடைப்பிடிப்பார்கள்!” – என்கிறார் அவரது துணைவியார் ஆயிஷா நாச்சியார்.

ரமலானின் பிறைப் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டும் நபிகளார் பிறைத் தெரிந்ததும் நெஞ்சுருக, “இந்தப் பிறையை அமைதி, சாந்தியைத் தரும் பிறையாக ஆக்கியருள்வாயாக! உனக்கு பிடித்தமான நற்செயல்களை புரியும் பேற்றினை இதன் மூலம் எங்களுக்குத் தந்தருள்வாயாக!” – என்று பிராத்தனைப் புரிவார்.

ஆர்வத்துடனும், உத்வேகத்துடனும் தானும் தனது குடும்பத்தாரும், அண்டை, அயலாரும் நோன்பு நோற்பதற்கான சூழல்களை ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது. நோன்பு நோற்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர்கள் ரமலானின் மதிப்பை முன்னிட்டு வெளிப்படையாக உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வது சிறப்பானது.

புனித ரமலான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகையால், அதிகதிகம், திருக்குர்ஆன் ஓதுவதையும் குர்ஆன் ஓதுவதை செவிமடுப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளவதும் சிறப்பானது.

ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் வானவர் தலைவர் ஜிப்ரீயல் (காப்ரியல்) நபிகளாருக்கு திருக்குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டுவார். அதேபோல, நபிகளார் திருக்குர்ஆன் ஓதுவதையும் கேட்பார்.

ரமலான், ஒரு நற்செயல் பல மடங்காய் பல்கி பெருகும் மாதமாகையால், ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள், விதவைகள் ஆகியோரின் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற கிடைக்கும் சந்தர்பத்தை நழுவவிடக்கூடாது. தேவையுள்ளோர் மீது கரிசனம் காட்டுவது, பொருளுதவி செய்வது. பொருள் உதவி செய்ய இயலாதோர் அவர்களுடன் மென்மையுடன் நடந்து கொள்வது. இனிய முறையில் பழகுவது. பணியாட்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது. அவர்களுக்கு இயன்றவரையிலான சலுகைகள் அளிப்பது என்று நற்செயல்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவே நபிகளார், கொடைவள்ளல் மனம் கொண்டவர். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ள விரும்பாதவர். அத்தகையவர் ரமலான் மாதத்தில் இன்னும் அதிகதிகம் தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அந்தக் கொடைத் தன்மை வேகமாக வீசும் பாலைவனப் புயல்போன்றிருக்கும் என்கிறது வரலாறு.

திருக்குர்ஆன் ரமலான் மாதத்தின் கடைசி பத்து ஒற்றைப் படை நாட்களில் அருளப்பட்டதால், கண்ணியம் மிக்க அந்த நாட்களின் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியமானது. அந்த நாட்களின் முக்கியம் குறித்து திருக்குர்ஆன் இப்படி எடுத்துரைக்கிறது:

“திண்ணமாக இந்த திருக்குர்ஆனை கண்ணியம் மிக்க ஓர் இரவில் இறக்கி வைத்தோம். கண்ணியம் மிக்க அந்த இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? மாட்சிமை மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். அதில் வானவர்களும், ஜிப்ரீயலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் நலம் பொருந்திய இரவாய் திகழ்கிறது… வைகறை வரை..!

ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் நபிகளார் அதிகம் இப்படி இறைஞ்சுபவராக இருந்தார்: “இறைவா! நீ பெரிதும் மன்னிப்பவன். மன்னிப்பதை விருப்பமாக கொண்டவன். எனவே என்னை மன்னித்தருள்வாய் இறைவா!”

சிறப்பு மிக்க இந்த கடைசி ஒற்றைப்டை இரவுகளில் மறைந்துள்ள ஆயிரம் மாதங்களைவிட சிறந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவின் பாக்கியங்களை இழப்பவன் அதன் நன்மைகள் அனைத்தையும் இழந்தவன் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

About Thinappuyal News