பசிலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையுத்தரவை நீதிமன்றம் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளது

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிப்பதை தடுத்து நிறுத்தி வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான இரண்டு கோடியே 94 லட்சம் பணத்தை செலவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படத்துடன் கூடிய 50 லட்சம் நாட் காட்டிகளை அச்சிட்டு விநியோகித்ததாக பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நடத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் தடையுத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.

சில் துணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளதாக பசில் ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்.

இதன் மூலம் நீதிபதி கிஹான் குலதுங்கவின் பக்கசார்பு புலப்பட்டுள்ளதால், கடந்த அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் தனக்கு எதிராக வழக்கு கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டால், நீதியை எதிர்பார்க்க முடியாது எனவும் பசில் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனால், தனக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கை கிஹான் குலதுங்கவுக்கு பதிலாக வேறு ஒரு நீதிபதியின் கீழ் விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் பசில் தனது மனுவில் கோரியுள்ளார்.

About Thinappuyal News