இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறவில்லை :தமிழக கடற்படை பிராந்திய தலைமை அதிகாரி அலோக்பட்நாகர்

“இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைவதில்லை. இருப்பினும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என, தமிழக கடற்படை பிராந்திய தலைமை அதிகாரி அலோக்பட்நாகர் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி, ஐ.என்.எஸ்., பருந்து கப்பற்படை விமான தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

“உச்சிப்புளி பருந்து கப்பற்படை விமான தளம் விரிவாக்கம் செய்ய தமிழக அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். விரிவாக்க பணிகளுக்குப்பின் பெரிய விமானங்கள் வந்து செல்ல முடியும்.

சர்வதேச கடல் பகுதியில் நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்காகவும், அகதிகள் ஊடுருவலை தடுக்கவும், 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்திய கடற்பரப்பில் இலங்கை ஊடுருவலை கண்காணிக்க நம்மிடம் வசதி உள்ளது.

இலங்கை இராணுவம் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதில்லை. இலங்கை நமது நட்பு நாடு. பாதுகாப்பு குறித்து இரு நாடுகளும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஆலோசனை நடத்தி வருகிறோம்” என குறிப்பிட்டார்.

முன்னதாக, இராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை முகாமில் மீனவர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசுகையில்,

“தடை காலம் முடிந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இலங்கை எல்லைக்குள் நுழைய வேண்டாம்.

நடுக்கடலில் சந்தேகத்திற்குரிய நபர்கள், அன்னியர்கள் ஊடுருவல் தெரிந்தால், உடனே இலவச அழைப்பு எண், 1554 மற்றும் படகில் உள்ள வாக்கி டாக்கி மூலம், 16 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.

About Thinappuyal News