வீதியை புனரமைக்க கோரி வீதிக்கு இறங்கிய நபர்

வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பொது மக்களின் நெருக்கமான குடியிருப்பினை கொண்ட கிராமத்து வீதியின் நிலைமைகள் சீரின்மை காரணமாக பல்வேறு கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதியானது குன்றும் குழியுமாக பல வருடங்களாக காணப்பட்டு வரும் நிலையில் இதனை யாரும் கவனத்தில் கொள்ளாமையால் குறித்த பகுதி பொது மகன் ஒருவர் வீதியில் அமர்ந்த நிலையில் வியாழக்கிழமை காலை போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட லயன்ஸ் கழக வீதி மற்றும் கோராவெளி வீதி, யூனியன்கொலனி வீதி என்பன மழை காலங்களில் நீர் நிரம்புவதனால் அப்பகுதி வாழ் மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு இடையூறுகள் விளைவிப்பதாகவும், அப்பகுதி மக்களும், பாடசாலை செல்லும் மாணவர்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் பிரமுகர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே தங்களை நாடி வருவதாகவும், வீதிகள் புனரமைப்பு செய்வது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு முன்வருவதில்லை எனவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றர்கள்.

எனவே இவ்விடயம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர், வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்குழு இணைத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வீதியில் அமர்ந்து போராட்டம் நடாத்தும் யூனியன்கொலனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

அரசியர்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் எனது போராட்டம் பாரிய அளவில் இடம்பெறும் எனவும், பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல் உரிய மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Dilan Maha)

About Thinappuyal News