கோலி–தவான் விவகாரம்: இந்திய அணியில் மோதல் இல்லை-கிரிக்கெட் வாரியம் மறுப்பு

105

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித்தொடரில் இதுவரை 2 டெஸ்ட் முடிந்துள்ளது. இந்த இரண்டு டெஸ்டிலும் இந்திய அணி தோற்றது.

2–வது டெஸ்ட் போட்டியின் 4–வது நாள் ஆட்டத்தின் போது வீரர்களின் அறையில் துணை கேப்டன் வீராட் கோலியும், தொடக்க வீரர் ஷிகார் தவானும் மோதிக்கொண்ட பரபரப்பான தகவல் வெளியாகி இருந்தது.

தவானுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முன்னதாக களம் இறங்கியதால் தன்னால் சோபிக்க முடியவில்லை என்று வீராட்கோலி கோபப்பட்டார். ஆட்டம் இழந்த பிறகு அவர் இது தொடர்பாக தவானிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டார்.

பதிலுக்கு தவானும் வாக்குவாதம் செய்ததால் வீரர்களின் அறையில் அமைதியின்மை காணப்பட்டு பரபரப்பு நிலவியது. இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இதற்கிடையே வீராட் கோலி–தவான் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) மறுத்து உள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் செயலாளர் சஞ்சய் பட்டேல் கூறியதாவது:–

இந்திய அணிக்குள் எந்த மோதலும் இல்லை. அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியை நான் தினசரி தொடர்பு கொண்டு வருகிறேன். அங்குள்ள நிலவரத்தை கேட்டு வருகிறேன். நேற்றும் அவருடன் பேசினேன். வீரர்களுக்குள் மோதல் எதுவும் நிகழ்ந்து இருந்தால் அவர் என்னிடம் தெரிவித்து இருப்பார். அவர் என்னிடம் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

இதனால் வீரர்களின் அறையில் வீரர்களுக்குள் எந்தவிதமான மோதலும் நடைபெறவில்லை என்று உங்களிடம் தெரிவிக்கிறேன்.

நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையில் (டி.ஆர்.எஸ்) கிரிக்கெட் வாரியம் அதே நிலையில் நீடிக்கிறது. தற்போது இருக்கும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்க இயலாது.

காயம் அடைந்த ரவிந்திர ஜடேஜா உலககோப்பை போட்டிக்கு உடல் தகுதி பெறுவார். ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் பிப்ரவரி 2–வது வாரம் நடைபெறும். ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவில் இது பற்றி முடிவு செய்யப்பட்டது

SHARE