மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்படைந்து ஏழு இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களின் இடர்நிலைமையை நேரில் சென்று அவதானித்த ஆனந்தன் எம்.பி

118

 

நாடு பூராகவும் பெய்து வரும் கனமழையையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வவுனியா மன்னார் மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், தேவாலயங்கள், பொதுநோக்கு மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், தலைமன்னார் மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் கடுமையாகப்பாதிக்கப்பட்டு ஏழு இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டு இடர்நிலைமைகளை அவதானித்த பின்னர், அத்தியாவசிய பொருள்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கியதுடன், அம்மக்களின் தேவைகள், உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
தலைமன்னார் புனித யாகப்பர் கோவிலில் 25 குடும்பங்களும் (65பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 08, 70 வயதுக்கு மேல்பட்டோர் 10),
கட்டுக்காரன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 25 குடும்பங்களும் (76பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 09),
பூரண சுவிசே~சாலையில் 24 குடும்பங்களும் (94பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 04),
பிரதேசசபை வாசிகசாலையில் 28 குடும்பங்களும் 25 குடும்பங்களும் (103பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 04),
தலைமன்னார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 08 குடும்பங்களும் (30பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 02),
அம்பாள்நகர் அறநெறிப்பாடசாலையில் 42 குடும்பங்களும் (164பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 15),
நானாட்டான் மகாவித்தியாலயத்தில் 403 குடும்பங்களும் (1500க்கும் மேல்பட்டோர்) தஞ்சமடைந்துள்ளன.
நேற்று (22.12.) இந்த முகாம்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் அனர்த்த நிலைமைகளை அவதானித்த பின்னர் அத்தியாவசிய பொருள்களுக்கு தேவையான நிதியுதவியை வழங்கிய ஆனந்தன் எம்.பியிடம் குழந்தைகளுக்கான பால்மா வகைகள், நுளம்பு வலைகள், பாய்கள், போர்வைகள் போன்ற பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பொருள்கள் தேவைப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாய வயல் நிலங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கிராமங்களுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போரின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலசல கூடங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் நிரம்பி வழிவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயநிலைமையும் காணப்படுகின்றது.
ஆனந்தன் எம்.பியுடன் மன்னார் நகரசபை உபதவிசாளர் ஜேம்ஸ், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், நானாட்டான் பிரதேசசபை உபதவிசாளர் மரியதாஸ் றீகன் ஆகியோரும் சென்று அம்மக்களின் தேவைகள், உதவிகள் குறித்து கேட்டறிந்துள்ளனர்.
unnamed unnamed (15) unnamed (14) unnamed (13) unnamed (12) unnamed (11) unnamed (10) unnamed (9) unnamed (8) unnamed (7) unnamed (6) unnamed (5) unnamed (4) unnamed (3)
TPN NEWS
SHARE