தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்த பாபுவின் 6 வயது மகள், 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு, செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குதண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின், மேல்முறையீடு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தஷ்வந்த்தின் மேல்முறையீட்டை நிராகரித்து, தூக்குத்தண்டனையை உறுதிசெய்துள்ளனர்.

முன்னதாக, நேற்றைய தினம் டெல்லி நிர்பயா கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.