????????????????????????????????????

காணாமல் ஆக்கப்பட்டவர் அலுவலகத்தின் செயற்பாட்டை புரிந்து கொள்ள அவகாசம் கொடுங்கள்  

(மன்னார் நகர் நிருபர்)
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உடன் புரிந்துகொள்ள முடியாவிடினும் அவர்களுக்கு அவகாசம் கொடுத்து பார்ப்பது நலம் என இலங்கைக்கான கனடிய தூதுவர் டான்ட் மிக்கினோ இரு நாள் சுற்று பயணத்தை மேற்கொண்டு மன்னாருக்கு வருகை தந்தபொழுது கடந்த திங்கள் கிழமை (09.07.2018) மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரை சந்தித்தபொழுது இவ்வாறு தெரிவித்தார்.

கனடிய இலங்கைக்கான தூதுவர்  டான்ட் மிக்கினோ மன்னாருக்கான விஐயம் ஒன்றை மேற்கொண்ட பொழுது திங்கள் கிழமை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் இதன் ஆளுநர் சபையினரை சந்தித்தார்.
இவர்களின் உரையாடலின்போது  தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,  இலங்கையில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் விடயத்தில் கனடிய அரசாங்கமானது பெரும் ஆதரவை வழங்கி வருகின்றது.
இதனால் வடக்கு கிழக்குப் பகுதிக்குச் சென்று இவ் வாழ் மக்களின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளும் முகமாகவே நான் மன்னாருக்கு வந்துள்ளேன்.
நான் இலங்கைக்கான கனடிய தூதுவராக வந்து ஒன்பது மாதங்கள்தான். தற்பொழுது மன்னாருக்கு வந்தது எனக்கு இது முதல் தடவையாகும்.
மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவாகிய நீங்கள் என்னிடம் என்ன கேட்க விரும்புகின்றீர்கள்? என அவர் கேட்டார்.
 அப்பொழுது பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஞானப்பிரகாசம் தெரிவிக்கையில், ஞாயிற்றுக் கிழமை (08.07.2018) கனடிய தூதுவர் மன்னார்  ஆயரை மரியாதையின் நிமித்தம் சந்திக்கச் சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒரு சிலரும் சந்தித்ததை நினைவூட்டினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயமாக திறக்கப்பட்டுள்ள அலுவலகம் சம்பந்தமாக உரையாடல் இடம்பெற்ற பொழுது பிரஜைகள் குழுவினர் இந்த அலுவலகம் அரசுக்கு சாதகமாகத்தான் செயல்படும் போல் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
இதற்கு கனடிய தூதுவர் பதிலளிக்கையில், இந்த அலுவலகத்தை முன்னெடுத்துச் செல்பவர் சாலிய பீரீஸ். அவர் மிகவும் நல்லவர். இருந்தும் கொஞ்சக் காலத்துக்கு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு கொடுத்து பாருங்கள். இப்பொழுது அவர்களின் செயல்பாட்டை உடன் கனிக்க முடியாது என்றார்.
காணாமல் போனவர்களைப் பற்றி தெரிவிக்கப்படுகின்ற இதேவேளையில் காணாமல் ஆக்கியவர்களை இந்த அரசு கவனம் செலத்துவதாக தெரியவில்லையென பிரஜைகள் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கியவர்களையும் கொண்ட திட்டங்களை கொண்டே பல நிபுணர்களை உள்வாங்கி செயல்படுகின்றது.
இதற்கு கனடா அரசாங்கம் இவர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதுடன் ஊக்கத்தையும் வழங்குகின்றது. கனடாவைச் சேர்ந்த  ஒரு சில தொண்டர் பணியாளர்களும் இவர்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என்றார்.
கனடிய அரசால் வழங்கப்படும் உதவிகள் உண்மையில் பாதிப்படைந்துள்ள மக்களுக்கு போய் சேர்கின்றதா?  என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

About Thinappuyal News