மரணப்படுக்கையில் இருப்பவர்களின் சில கடைசி ஆசைகள்… மருத்துவர்கள் கூறும் உண்மைகள்

மரணம், பிறக்கும் போதே ஊர்ஜிதமாகும் முதல் விஷயம். ஒருவர் பிறக்கும் போதே என்ன ஆவார், எந்த நிலைக்கு செல்வார், எவ்வளவு சம்பாதிப்பார், எத்தனை திருமணங்கள் செய்வார், பிள்ளைகள் எண்ணிக்கை, பிரபலமாவார, தோல்வி அடைவாரா என்று எதையும் கூற முடியாது. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் அடித்து கூறலாம். நிச்சயம் ஒரு நாள் மரணிக்க தான் போகிறார்.

நிச்சயமான மரணத்தை தோளில் ஏந்திக் கொண்டு தான் நாம் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து வருகிறோம். மரணம் எப்போது நிகழும் என்று யாராலும் கூறிட முடியாது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் நம் நாட்டில் திருமணமான சில நிமிடத்தில் புதுமணப்பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார். திருமண விழா பூண்டிருந்தது வீடே, சோகமயமானது.

ஆனால், சில சமயங்களில் மரணம் நம் கண்முன்னே நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்.. எப்போது நம்மை அழைத்து செல்லும் என்றே தெரியாது. அந்த மரண படுக்கை காலமானது மிகவும் கொடுமையானது. இப்படியாக மரண படுக்கையில் இருக்கும் நோயாளிகள் வெளிப்படுத்தும் ஆசைகள் குறித்து மருத்துவர்கள் கூறியவற்றை இந்த தொகுப்பில் காணலாம்…

துக்கம்!

பெரும்பாலும் ஏதேனும் நோய் காரணமாக நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் நபர்கள் எப்போது மரணம் தங்களை அழைத்து செல்லும் என்ற எண்ணத்தோடு தான் இருப்பார்கள். ஆனால், மரணம் அவர்களை நெருங்கப் போகிறது என்ற சூழல் வரும் வேளையில் இன்னும் ஒரு நாள் வாழ வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம் தான் நாள்தோறும் அவர்கள் மனதில் எழும். மதில் பூனை என்பது போல வலி தாங்கவும் முடியாமல், பிரியமானவர்களை பிரியவும் முடியாமல் துக்கத்தில் இருப்பார்கள்.

உண்மைகள்!

தங்கள் வாழ்வில் செய்த பெரும் தவறுகள், அதுநாள் வரை மறைத்து வைத்திருந்த உண்மைகள், நண்பர்கள், உறவினர்கள் சார்ந்து அவர்கள் வைத்திருந்த அபிப்பிராயம், மற்றவர் பற்றி அவர்கள் பரப்பி இருந்த பொய்யான தகவல்கள் பற்றி எல்லாம் கூட வெளிப்படையாக கூறிவிடுவார்கள். இறக்கும் போதாவது மனதில் ரணம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கருதுவார்கள். பெரும்பாலும் இறக்கும் போது அவர்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் முற்றிலும் உண்மையானதாகவும், மிகுந்த மதிப்புள்ளதாகவும் இருக்கும்.

ஆன்மீகம்!

சிலர் மிகுந்த ஆன்மீகத்தில் ஆழ்ந்திருப்பார்கள். கடவுள் தன்னை சொர்கத்திற்கு அழைத்துக் கொள்வார், தனது குடும்பத்தாரை நன்கு பார்த்துக் கொள்வார் என்று வேண்டுவார்கள். தியானம் செய்வார்கள், யாரிடமும் பேசாமல் நெடுநேரம் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இப்படியானவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிகபட்சம் பலரும் தனக்கு இருக்கும் அந்த கடைசி நேரத்தில் முடிந்த வரை தனது உறவுகளுடன் பேசிட வேண்டும் என்றே நினைப்பார்கள்.

தண்ணீர்!

இன்னும் சில நேரத்தில் அவர் மரணித்து விடுவார் என்று நாங்கள் மட்டுமே அறிவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால், அவர் எங்களை அழைத்து மரணிக்கும் முன் நான் கொஞ்சம் நீர் அருந்திக் கொள்ளலாமா என்று கேட்டார். கடைசி பல நாட்களாக அவர் நீர், உணவு இன்றி மருந்துகள் மூலமாவே வாழ்ந்து வந்தார்.

அவரது அந்த ஒரு கிளாஸ் நீர் என்ற விருப்பமானது எங்களை திகைக்க வைத்தது. மனம் வருந்த வைத்தது. அவரை காப்பற்ற முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் பல நாட்கள் தொண்டை குழியில் வருத்தமாக ஸ்தம்பித்து நின்றது.

தன் படுக்கையில்…

மரண படுக்கையில் இருந்தது என் அம்மா… நீண்ட நாட்களாக உடல்நல குறைப்பாடு காரணமாக மருத்துவமனையில் வைத்து பார்த்து வந்தேன். அவர் இறந்துவிடுவார் என்று முடிவாகிவிட்டது. எங்கள் முக வாட்டத்தை வைத்து அவரும் அதை அறிந்துக் கொண்டார்.

நான் இறந்துவிடுவேன் என்பது உறுதியாகிவிட்டால், தயவு செய்து என்னை வீட்டுக்கு அழைத்து சென்றுவிடு. நான் எனது படுக்கையில் மரணிக்கவே விரும்புகிறேன் என்று கேட்டுக் கொண்டார். அவர் விருப்பத்தின் படியே வீட்டுக்கு அழைத்து சென்றேன். வீட்டுக்கு அழைத்து சென்ற மூன்றாவது நாளில் அம்மா இறந்துவிட்டார்.

விருப்பமானவை!

சிலர் தங்களுக்கு விருப்பமான உடை, நகை, வாட்ச் போன்றவற்றை கடைசியாக ஒருமுறை அணிந்து பார்த்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பார்கள். புதியதாக எதுவும் கேட்க மாட்டார்கள். நெடுங்காலமாக அவர்கள் மனதுக்கு மிக நெருக்கமானவையாக அவை இருக்கும்.

குழந்தை போல அதை வாங்கி மாட்டிக் கொண்டு கண்ணாடி முன் தன்னை தானே அவர்கள் அழகு பார்த்துக் கொள்ளும் போது, சிலமுறை கண்களில் நீர் நம்மை அறியாமல் வந்துவிடும்.

நல்லது!

இவர்களை எல்லாம் பார்க்கும் போது மனதில் ஒரே ஒரு எண்ணம் தான் எழும், முடிந்த வரை நல்லது செய்வோம், நல்லவராக வாழ்வோம், நல்லதே நினைப்போம், கடவுளிடம் அனைவருக்கும் நல்ல வாழ்க்கை மற்றும் எண்ணத்தை அளிக்க வேண்டுவோம். இங்கே எதுவும் நிலையானது அல்ல.

மரணிக்கும் போது நாம் சுமந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆசையும் பெரும் சுமையாக இருக்கும். அவற்றை சுமக்கவும் முடியாது, வேண்டாம் என்று இறக்கி வைக்கவும் முடியாது.

About Thinappuyal News