செல்வம் குவியும் இடமாக மன்னார் பிரதேசம்-அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு.

116

துபாய் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தை விட செல்வம் குவியும் இடமாக மாற்றக்கூடிய இரண்டு வஸ்துக்கள் மறைந்து காணப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் நகரில் நவீன சந்தைத் தொகுதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,மன்னார் பிரதேசமென்பது பின்தங்கிய பிரதேசமாக கூறப்பட்டாலும் கூட இலங்கை வரலாற்றில் ஒரு வர்த்தக கேந்திர நிலையமாக இருந்ததை நான் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கொச்சின் துறைமுகமும், மாதோட்டத் துறைமுகமும் ஒரே இணைப்பில் சந்திக்கும் துறையாகக் காணப்பட்டது.

வரலாற்று ஆய்வாளர் லெனால்ட்வூல்ப் என்பவர் இந்தப் பிரதேசங்களில் வந்து ஆராய்ச்சி நடத்திய போது 4000 பேர் முத்துக் குளித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த முத்துக்கள் வெளிநாடுகளின் அரச இராஜதானிகளில் இன்றும் அலங்கரிக்கப்பட்டுள்ளமை நமக்கு மகிழ்ச்சி தருகின்றது.பிரித்தானியரின் காலத்தில் தான் நமது முத்துக்கள் அரிதாகின. அவ்வாறான முத்து வளத்தை விட மேலும் இரண்டு வஸ்துக்கள் இங்கு மறைந்து காணப்படுகின்றன.

2011 செப்டெம்பர் மன்னாரில் இருந்து 32 கிலோமீட்டர் கடல் மைல் தொலைவில் எரிபொருளையும், எரிவாயுவையும் கண்டுபிடித்தோம். பேசாலை பகுதியில் அவை இருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு வளங்களையும் நாம் விருத்தி செய்தால் துபாய் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தை விட செல்வம் குவியும் இடமாக இந்த பிரதேசத்தை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE