மாகாண சபைத்தேர்தல்கள் எதிர்வரும் டிசம்பர்23 அல்லது ஜனவரி5 நடத்துவதற்கு சபாநாயகர், கட்சித்தலைவர்கள் தீர்மாணம்.

38

மாகாண சபைகளுக்குரிய தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை எப்போது நடத்துவது? எந்த முறைமையின் கீழ் நடத்துவது? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியிலுள்ள குழு அறை 03இல் கட்சித் தலைவர்கள் கூட்டம்  நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஈ.பி.டி.பியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உட்பட மேலும் சில அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

துறைசார் அமைச்சரான பைசர் முஸ்தபா, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர், எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் ஆகியோரும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது எல்லை நிர்ணய அறிக்கையிலுள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹக்கீம், பழைய முறைமையில் (விகிதாசார) தேர்தலை நடத்துவதே சிறந்த தேர்வாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். எனினும், புதிய முறைமையில் (கலப்பு) தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக இருக்கின்றது என்று சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், விருப்பு வாக்கு முறைமை பொருத்தமற்றது என்றும், அது வன்முறைக்கு வழிவகுக்கும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லை நிர்ணய அறிக்கையில் பிரச்சினை இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியும் தெரிவித்துள்ளது.

இதனால், எந்த முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவது என்பதில் இறுதி முடிவை எட்டமுடியாமல்போனது. எனினும், எந்த முறைமையாக இருந்தாலும் டிசம்பர் 23ஆம் திகதி அல்லது ஜனவரி 5ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்களில் ஏதேனுமொரு நாளில் தேர்தல் கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்ற முடிவை கட்சித் தலைவர்கள் ஏகமனதாக எடுத்தனர் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

அது எந்த முறைமை என்பது குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்குரிய தடையை ஒக்டோபர் மாதம் முடிவதற்குள் நாடாளுமன்றம் நீக்கித் தருமானால் அடுத்த வருடம் ஜனவரி 5ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல் ஆணைக்குழுவால் முடியுமாக இருக்கும் என்று ஆணைக்குழுவின் தலைவரான மஹிந்த தேசப்பிரியவும் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் என்பது விடுமுறை மாதம் என்பதாலேயே மாற்றுத் தேர்வாக ஜனவரி 5ஆம் திகதி முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தக் கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்கும், சட்ட ஏற்பாடுகளைக் கையாள்வதற்கும் சபாநாயகரால் 6 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் ஆகியோர் அடங்குகின்றனர். 2012ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று சபைகளினதும் பதவிக்காலம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் நிறைவுக்கு வந்தது.

அதேவேளை, 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தேர்தல் நடைபெற்ற வடக்கு, மத்திய, வடமேல் ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்றது.

மேற்படி 6 சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தென், மேல், ஊவா ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் 2019ஆம் ஆண்டு நிறைவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

SHARE