கனடாவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு; 2 பேர் சாவு

26
கனடாவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு; 2 பேர் சாவு
சாலையில் நடந்து சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர். தாக்குதல் நடத்தியவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கனடாவில் டொரண்டோவுக்கு அருகே கிரீக்டவுன் என்கிற நகரம் உள்ளது. கனடாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான இங்கு ஓட்டல்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இதனால் இந்த பகுதியில் தினமும் இரவு நேரத்தில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிரீக்டவுனில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு அங்குள்ள வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்களை மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார்.

இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறி அடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த நபர் தன் கண்ணில்பட்டவர்களையெல்லாம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே இருந்தார். இதில் ஒரு இளம்பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் ஒரு சிறுமி உள்பட 13 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மர்ம நபரை சுற்றிவளைத்தனர். அப்போது அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

படுகாயம் அடைந்த 13 பேரையும் போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒரு சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SHARE