எண்ணெயும் உலகசக்தியும்

79

 

  

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மண் போன்ற மற்ற படிமங்களோடு புதையுண்ட பாசியினங்கள், நுண்ணுயிர்கள் வேதிமாற்றங்களுக்கு உட்பட்டு வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக எண்ணையாகவும், எரிவாயுவாகவும் மாற்றமடைகிறது. இது புவிபரப்பிற்கு 3000 முதல் 16,000 அடிகளுக்கு கீழே காணப்படும். இன்றைய நாகரிக வாழ்க்கை இந்த எரிசக்தியை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. இதுவே இன்றைய உலக அரசியலுக்கு காரணமும்.

பெட்ரோல் விலை ஏற்றம் இரண்டு ருபாய் கூடும் குறையும் எது சொன்னாலும் நாம் வண்டியில் சர்ரென்று ஆபிஸ் போறது நிற்காது. தாமதமாக கிளம்பி சீக்கிரமாக இடம் சேரவேண்டும் என்ற மனப்பாங்கும் கூட. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை எகிறி விட்டது!! டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சறுக்கி விட்டது…” என்று பழைய பல்லவிகளைப் பாடி, மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டாலும்  மாசுபடுத்தல், சரேல் என்று சரிந்து விழுந்து ஆக்சிடென்ட் செய்யும் சேட்டைகள், அமெரிக்கா அரசியல் ஏதும் மாறப்போவதில்லை. சலிப்புக்கு பஞ்சமில்லை.

எல்லா நாடுகளையும் கையில் வைத்து மிரட்டி கொண்டு தான் இருக்கிறது இந்த எண்ணெய் அரசியல். உலக பொருளாதார ஆய்வில் அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியாவும் சீனாவும் கச்சா எண்ணெய் நுகர்வில் முதலிடமாக இருக்க போகிறதாம். இருக்காதா பின்ன ஒரு மினிஸ்டர்க்கு பத்து கார் தேவைப்படுது. ஆகத் தானே செய்யும். தொண்ணுறுகளில் உபயோகத்தில் இருந்து இன்றைய உபோயகத்தில் பதினாறு விழுக்காடு கூடியிருக்கிறது இந்தியா. சவுதி தன் எண்ணெய் கிடங்குகளை நிறுத்து வைக்கிறது. அமெரிக்கா உலக எரிபொருள் விலையை நிர்ணயிக்கிறது. ஈரான் அதன் எண்ணெய் உற்பத்தியை வைத்து போர்களை துவக்குகிறது. எரிபொருள் எண்ணெயும் பொருளாதாரமும் பின்னி பிணைந்து இருக்கிறது. ரஷ்யா உலகளவில் முன் நிற்கமுடியாமல் தவிப்பதில் இந்த எண்ணெய் அரசியல் முதற்புள்ளி.  கச்சா எண்ணெய் விலை குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் என்ற  நிலை எந்த நாட்டிற்கும் உரித்தாகும்.

முதலாம் உலக போரில் தொடங்கி இன்று வரை உலக அரசியல் போர்களின் காரணிகளில் பெட்ரோலியம் கிடங்குகள் ஆக்கிரமிப்பும் ஒன்று. ஈரான் கைப்பற்றல். லிபியா நெருக்கடி, கல்ப் போர், எல்லாமே இந்த எண்ணெய் ஏகாதிபத்தியம் தான். அமெரிக்காவிற்கு தான் மட்டுமே ஆள வேண்டும் என்பதில் இருக்கும் வெறி 2003ல் ஈராக் போர் தொடங்கியது. பெட்ரோல் டீசல் விலை இன்றைய  ஏற்றங்களுக்கு அது ஒரு தொடக்க புள்ளியாக அமைந்தது. அங்கே தொடங்கிய ஏற்ற இறக்கம் சமன் படாமல் போய் கொண்டே இருக்கிறது போர்களை பொருளாதார சரிவை ஏற்படுத்திக்கொண்டு.

சர்வதேச அளவில் நியூயார்க்கிலும், லண்டனிலும் தான் கச்சா எண்ணெய் விற்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் மதிப்பு எப்பொழுதுமே அமெரிக்க டாலர் மதிப்பில் தான் குறிப்பிடப்படுகிறது. (கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உலகெங்கும் கச்சா எண்ணெய் வாங்குபவர்கள் பதிலுக்கு அமெரிக்க டாலர்களையே கொடுக்கிறார்கள். இதனால் டாலரின் மதிப்பு உயர்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் கச்சா எண்ணெய் விலை நியூயார்க்கில் உள்ள வால் ஸ்டிரீட்டில் நிர்ணயிக்கப்படுகிறது. யூக வணிகம் செய்யும் நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயிக்கின்றன.

“பசுமைப்புரட்சி கண்ட இந்தியா” என்று பீற்றிக் கொண்ட நாட்டில் தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது. மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான ஏழைகள் ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக்கூட காசில்லை.

அணுவுலைகள், மீத்தேன், கெயில் திட்டம் இவற்றினைத் தொடர்ந்து இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டம், மாறிவரும் சூழ்நிலையில் இந்தியா தன் வளர்ச்சியை மேம்படுத்த செய்ய வேண்டியன என்ன? செய்வது என்ன? உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக?. அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் இந்தியா தொடர்ந்து இப்படித்தான் செயல்படுமா?

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குளுகுளு ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதி ஒருபுறம். “நாங்களும் இருக்கோம்ல” என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய் கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் கட்சி ஒருபுறம்.

முப்பத்தி ஐந்து ரூபாய் பெட்ரோல் எழுபத்தி இரண்டு ரூபாய்க்கு நம் கைக்கு கிடைக்கிறதென்றால் இதன் பின்னே இருக்கும் கணக்கீடு பற்றி சொல்லியே ஆக வேண்டும். சர்வதேச கச்சா எண்ணெய் மேட்டருக்கும், நமது பெட்ரோல் விலை உயர்வுக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு பேரல் என்பது 158.76 லிட்டர். ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலையில், சுத்திகரிப்புச் செலவு, போக்குவரத்துச் செலவு, முகவர் கழிவு என்று எல்லாம் சேர்த்துப் பார்த்தாலும், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை அதிகப்பட்சம் 50 ரூபாயைத் தாண்டாது.

ஒரு எண்ணெய்  கம்பெனி ரிபைனரியில் இருந்து பத்தொன்பது ரூபாய்க்கு கச்சா எண்ணெய் வாங்கியது என்றால் டீலர்களுக்கு இருபத்திமூன்று ருபாய் முதல் இருபத்தைந்து ருபாய் வரை விற்கும். கச்சா எண்ணெய் விலை உலகளவில் எல்லா நாடுகளுக்கும் ஒன்றாகவே இருக்கும். கடல் வரி சேர்ந்து நாட்டிற்கு நாடு விலை மாறுபடும்.  இதனுடன்  போக்குவரத்து செலவு, ஆயில் மார்க்கெட் மார்ஜின் விலை மற்றும் பெட்ரோலுக்கான டியூட்டி சேர்ந்து  பெட்ரோல் விலை ஐம்பத்தி ஏழு ரூபாயாகும். இதுவே டீசல் என்றால் நாப்பத்தி ஏழு ரூபாய் ஆகும். எக்ஸ்சைஸ் டியூட்டி டீசலிற்கு கம்மி.  டீலர் கமிஷன் என்று இரண்டு முதல் மூன்று ரூபாய் சேரும். பெட்ரோல் பம்ப் டீலர் கமிஷன் என்று இன்னும் நான்கு ரூபாய் வரை சேரும். ஸ்டேட்ற்க்கு தகுந்து வாட் வரி சேர்ந்து வண்டியில் ஊற்றும் போது பெட்ரோல் லிட்டர்  எழுபது ருபாய் ஆகும். டீசல் என்றால் மாசு வரியும் சேரும்.

நாம் செலுத்துவது எல்லாம் மத்திய, மாநில அரசாங்கங்கள் விதிக்கிற வரி. மத்திய அரசு கஸ்டம்ஸ், எக்சைஸ் வரிகளும், மாநில அரசுகள் விற்பனை, நுழைவு வரிகளும் போட்டுத் தாக்குகின்றன. பெட்ரோலுக்கு விதிக்கிற வரி மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் கிடைக்கிற வருவாய் கொஞ்ச நஞ்மல்ல.

பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி, பங்குத்தொகை, காப்புரிமை தொகை என 2002-03ல் 64, 595 கோடி அரசுக்கு வருமானம். இது 2004-05ல் 77, 692 கோடியாக உயர்ந்து 2009-10 ஆண்டில் 1, 00, 000 (ஒரு லட்சம்) கோடியாக உயர்ந்துள்ளது. இந்திய அரசின் ஒட்டு மொத்த வரிவசூலில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிவசூல் மட்டும் ஐந்தில் இரண்டு மடங்காகும்.

பெட்ரோல் மீதான விலை உயர்வு என்பது ஒரு சங்கிலித் தொடரைப் போல விலைவாசியை அப்படியே பாதிக்கும். சரக்கு கட்டண உயர்வு என்ற பெயரில் சாமான்யர்கள் வாங்கும் குண்டூசி துவங்கி உணவுப்பொருட்கள் வரை தாக்கும், தெரிந்தே அரசு அரசியல் செய்கிறது. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடினாலும், குறைந்தாலும் இங்கே எண்ணெய் எடுத்து, விற்றுக் கொண்டிருக்கிற தனியார் நிறுவனங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இவர்கள் தோண்டி எடுப்பதற்கு நேற்று என்ன செலவானதோ, அதே தான் இன்றும் ஆகப்போகிறது.

எரிபொருள் எண்ணெய் தயாரிப்பில் முதல் இடமும் அமெரிக்கா தான் நுகர்வில் முதல் இடமும் அமெரிக்கா தான். ஆனாலும் அமெரிக்காவில் பெட்ரோல் விலை நாப்பது நாலு ரூபாய் தான். அது ஏன்? அவங்க நாட்டில் தான் நிறைய ரெபினேரி இருக்கே என்பது மட்டும் பதில் ஆகாது. ஒபாமாவின் காலத்தில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் மற்றும் பொருளாதார கொள்கை(fuel -economy standard )யும் தான். அவர்கள் தயாரிக்கும் கார்களின் எஞ்சின் திறன்களை கூட்டுதல், சராசரியாக லிட்டர்க்கு முப்பத்தைந்து மைல் கொடுக்கும் எஞ்சினை காரில் பயன்படுத்த வேண்டும். மற்றும் போர் கப்பல்களில் உயிரி எரிபொருள்கள் பயன்பாடு என்று பொருளாதார சமன்பாடை நிறுவுகின்றனர். அதாவது என்ன விலை ஏற்றம் என்று வந்தாலும் என் நாட்டு மக்களுக்கு பாதிப்பு கம்மியாக இருக்கனும். என்னதான் எல்லாமே கையில் இருந்தாலும் அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் பாதுகாப்பில் தொலைநோக்கு பார்வையில் செயல்படுகிறது அந்த நாட்டு அரசு.

மூன்றாம் உலக நாடுகள் உற்பத்தி செய்யும் எந்தப் பொருளின் விலை உயர்ந்தாலும், உடனடியாக வளர்ந்த நாடுகள் அதை செயற்கை முறையில் தயாரிக்கத் தொடங்கி விடுகின்றன. ரப்பர் விலை உயர்ந்தபோது, செயற்கை ரப்பர் தயாரிக்கப்பட்டது. அந்த வகையில்தான் மூன்றாம் உலக நாடுகளின் கையில் உள்ள கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிபொருள் தயாரிப்பில் கவனம் திருப்பப்பட்டது. அமெரிக்காவில் 20 சதவிகித மக்காச்சோளம், பிரேசிலில் 50 சதவிகித கரும்பு உற்பத்தி, ஐரோப்பாவில் தாவர எண்ணெய் போன்றவை உயிரி எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

மெக்ஸிகோ உலகளவில் ஏழாவது இடம் பெட்ரோல் தயாரிப்பில். முப்பதுகளில் மெக்ஸிகோவில் இருந்த ரெபினெரி எல்லாமே வெளிநாட்டினது. 1940களில் மெக்ஸிகோ அரசு ஏற்று நடத்த ஆரம்பித்தும் இன்றைய நிலையில் பத்து விழுக்காடு தயாரிப்பு குறைந்தாலும் அதே ஏழாவது இடத்தில் இருக்கிறது, காரணம் அவர்கள் பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தான்.

வெனிசுலா நாடு அதன் எரிபொருள் எண்ணெய் இருப்பு உலகளவில் அதிகமாக இருப்பதை அறிந்து எழுபதுகளிலே பெட்ரோல் உற்பத்தியை தேசியமயமாகி இன்று அதன் மொத்த லாபமும் நாட்டின் பொருளாதாரமாக மாற்றியிருக்கிறது. பின் தொண்ணூறுகளில் ஆட்சிக்கு வந்த சாவேஸ் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார்.  எண்ணெய் வளத்தை சுரண்டும் அமெரிக்காவிடம் பிடுங்கி எண்ணெய் வர்த்தகத்தில் இப்போது கோலோச்சியிருக்கிறது. பெட்ரோகேரிபே எனும் அமைப்பில் இனைந்து சில நாடுகளிற்கு ஏற்றுமதியை விலை நிர்ணயித்து வர்த்தகம் செய்கிறது. ஏகாதிபத்திய அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது.

சிரியா எண்ணெய் வளம் மிக்க நாடு மற்றும் துறைமுகங்கள் மிகுந்த நாடு. சவுதி அரேபிய எண்ணெய்யை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல சிரியா துறைமுகங்கள் உதவும் அறிந்த அமெரிக்க ஏகாதிபத்திய அரசு  ராணுவ தளபதியை ஆட்சியில் அமர்த்தி தனக்கு சாதகமாக சவுதி அரேபிய எண்ணெய்யை மத்திய தரைக்கடல் துறைமுகங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவாக டிரானஸ்-அரேபியன் பைப்லைன் திட்டத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டது. இப்படி அமெரிக்கா பல நாடுகளை பொம்மையாக பயன்படுத்தியே கோலோச்சுகிறது என்பது யாரும் மறுக்க முடியாதா உண்மை.

சீனா அணு ஆயுதம் வைத்திருந்தால் ஏன் அமெரிக்காவிற்கு வலிக்கிறது? இரான், சிரியா அணு ஆயுதங்களை வைத்திருந்தாலோ, அல்லது ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவிற்கு என்ன பிரச்சினை? இந்தியா-பாக்கிஸ்தான் மோதிக்கொண்டால் அமெரிக்காவிற்கு என்ன கவலை? இந்த கேள்விகளுக்கு அமெரிக்காவால் பதில் சொல்ல இயலாது.

சதாமை உலகிலிருந்தே அகற்றுவதில் வெற்றி பெற்றுவிட்ட அமெரிக்காவின் அடுத்த கவனம் ஈராக்கின் எண்ணெய் வளத்தின் மீது அசைக்க முடியாத கட்டுப்பாட்டைக் கொண்டு வருவது. ஈராக்கின் எண்ணெய் வளத்தை விட அதிகமான ரத்தம் அம்மண்ணில் சிந்தப்பட்டு விட்டது. அமெரிக்கா சதி செய்து உருவாக்கியுள்ள ஈராக் அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அது உத்தரவாதமாகும். நாடுகளுக்கிடையே மட்டுமின்றி மக்களுக்கிடையேயும் இருக்கும் வேறுபாடுகளைக் (இன, மத, பிரதேச அடிப்படையிலான) கிளறி விடுவதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களை தடம் புரளச் செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோட்பாடு பழைய பிரித்தாளும் சூழச்சியின் புதிய வடிவமே அன்றி வேறில்லை. ஈராக்கை சன்னி பிரிவு நாடு, ஷியா பிரிவு நாடு, குர்திஸ்தான் என்று மூன்றாக வெட்டிக் கூறு போட நினைக்கிறது.

பாக். ராணுவத்திற்கு ஆயுதங்களும் அமெரிக்க அரவணைப்பும் கிடைத்தது. ஆனால் அங்கு ஜனநாயகம் புதை குழிக்குப் போனது. கொடுமை என்னவென்றால் இன்று  அமெரிக்க ‘எந்திரன்’ இயக்கும் ராணுவ விமானங்களின் தாக்குதலுக்கு இரையாகுமிடமாக பாகிஸ்தான் ஆகிவிட்டது.

ஸ்வீடன் 2020ல் மொத்தமாக கச்சா எண்ணெய் பயன்பாட்டை நிறுத்துவதில் தீவிரமாக உள்ளது. 2002 முதல் ஆரம்பித்து 2015ல் கிட்டத்தட்ட ஐம்பது விழுக்காடு பயன்பாட்டை குறைத்துள்ளனர்  பயோ எனர்ஜி, சோலார் எனர்ஜி, பாட்டெரிக்கள் என்றும் பெட்ரோலுடன் எத்தனால் கலைந்து உபயோகித்தால், அப்படி உபயோகிக்கும் வண்டிகளுக்கு மானியம் வழங்குதல் என்று நிறுவி எண்ணெயினால் வரும் உலக அரசியலில் இருந்து தன்னை விடுவித்து கொள்ள முயற்சிக்கின்றது ஸ்வீடன்.

எகிப்தில்  எண்ணெய் ரெபினெரிகள் இருந்தாலும் அங்கே உள்நாட்டு பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஏற்றுமதி குறைவாகவே உள்ளது. காண்டாகி இருக்கும் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு எகிப்து நாட்டு அரசு எரிபொருள் பயன்பாட்டை குறைக்க மக்களை ஊக்குவிக்கிறேன் என்றுள்ளதாம். கடன் நிறைய இருப்பதால் வெளிநாட்டு கம்பெனிகளை வெளியே தள்ள முடியாத காரணத்தால். இனி ஆரம்பித்து குறைத்து அதற்குள் இந்த இயற்கை தாய் வெப்பத்தில் விரிசல் விட்டுவிடுவாள்.

இப்போது இருக்கும் எண்ணெய் தாகம் எங்கெல்லாம் எரிபொருள் எண்ணெய் கிடைக்கும் என்று ஆய்வுகள் வருகிறதோ அங்கெல்லாம் இந்த தனியார் நிறுவனங்கள் ஓடி ஓடி அக்ரீமெண்ட் போட்டுக்கொள்கின்றனர். அப்படியான ஒரு பேராசையில் தான் இந்த ஹைட்ரோகார்பன் திட்டம் முயற்சி எல்லாம். ஜப்பானில் எரிபொருள் எண்ணெய் கிடைக்கும். அண்டார்டிக் கடலில் எண்ணெய் எடுக்கலாம் ஓடு அங்கே, என்று புதையல் தேடும் விளையாட்டாகி போனது.

இன்றையத் தேவை ராணுவக் கூட்டல்ல, ஆயுத பெருக்கமல்ல, உலகளவில் புதிய சமத்துவ வர்த்தக உறவு, நாடுகளிடையே ஒத்துழைப்பு. உழைப்பிற்கு மதிப்பு, புதிய பணக்கோட்பாடு.

கடந்த நாப்பது ஆண்டுகளாய் பூமி பருவநிலை மாற்றம் கண்டு வருகிறது, மனிதர்களால் ஏற்படும் புவி வெப்பமயமாதலைத் தடுக்க வேண்டும் இல்லையென்றால் சீரழிவு நிச்சயம் என்கிறது. இயற்கையை அனைத்து நிலைகளிலும் முதலாளித்துவம் தங்களின் தொழில்துறை நலனுக்காகச் சூறையாடி மாசுபடுத்தத் தயங்கியது இல்லை. மாசுபடுத்தலின் அளவைக் குறைக்க மாற்றுவழிகள் பல இருந்தபோதும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த அரசுகள் ஒருநாளும் சரிவர செயல்படுத்தியது இல்லை.

கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைத்து வேறு விதமாக எரிசக்திகளை பெருக்கினால் மட்டுமே மாசுபடுதல் குறைத்து பொருளாதாரத்தை பெருக்க முடியும் என்பதை கோலோச்சும் அமெரிக்காவே தெரிந்து அவர்கள் பயன்பாட்டில் பதினோரு விழுக்காடு ரெனீவப்பில் அதாவது சோலார் காற்றாலை மற்றும் அலையாற்றல் என்று உபயோகிக்கிறது.

அமெரிக்கா வளர்ந்த வல்லரசு, இந்தியா வளரும் துணை வல்லரசு அவ்வளவு தான். உலகமயமாக்களின் ஒவ்வொரு நகர்வும் உழைக்கும் மக்களுக்கும், தேசிய இனங்களுக்கும் எதிரானது. அந்த வகையில் தான் அமெரிக்காவை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு என்பது இந்திய எதிர்ப்போடு இணைந்தது தான். அமெரிக்கா இந்தியாவைச் சுரண்ட வருகிறது என்பதையும் தேசிய இனங்களைச் சூறையாட வருகிறது. உழைக்கும் மக்களை கொன்றொழிக்க வருகிறது. இதை மூடி மறைக்க பயங்கரவாத, தீவிரவாத, பிரிவினைவாத எதிர்ப்பு முகமூடியை அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தே மாட்டிக் கொள்கிறது. நம்முடைய எதிரிகள் அமெரிக்க இந்தியப் பயங்கரவாதிகள் தான்.

இயற்கை வளம் என்பது, வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக் கொள்வது தான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது. அடிக்கிற வெயிலுக்கு சோலார் மின்சக்தி பயன்பாடு அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கு. யோசிக்கலாம் இந்தியா முன்னேறலாம் இந்தியா.

“உலகில் பத்து விழுக்காட்டினராக உள்ள பணக்காரர்கள் உலகின் செல்வவளத்தில் 89 விழுக்காட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கு நிலையை ஒழிக்காத வரையில் மானுட சமத்துவம் ஏற்படாது” சொன்னவர் ஃபிடல் காஸ்ட்ரோ. ஏகாதிபத்திய எதிர்ப்பின் குறியீடாக, புரட்சியின் சின்னமாக அறுபது ஆண்டுகளுக்கு மேல் திகழ்ந்த ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தும் விட்டார். மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களை அணி திரட்டிப் போராடுவதே புரட்சியாளனின் கடமை என்னும் காஸ்ட்ரோவின் படிப்பினையை ஏற்று இந்த உலகை மாற்றியமைப்போம். நெஞ்சம் நிமிரட்டும், சுரண்டல் முடியட்டும். வருங்காலம் ஏகாதிபத்தியமில்லா சமதர்ம சமூகமாக இருக்கட்டும்.

SHARE