இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் விளங்குவதனை இல்லாமல் செய்வதற்கான முன் ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு ஏற்ப சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை ஆளுந் தரப்பினர் தயார்படுத்தி வைத்துள்ளார்கள். ஆளுந் தரப்பினரின் இந்த செயற் திட்டத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றவர்களாக முஸ்லிம் சமூகம் இருக்கப் போகின்றது.
இதனை முஸ்லிம் அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளின் மூலமாகவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களின் மூலமாகவும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இத்தருணத்தில் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும், பொது மக்களும் விழித்துக் கொள்ள வேண்டும்.
இல்லாதுவிடின் முஸ்லிம்கள் தமது விகிதாசாரத்திற்கு குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசியல் பலமற்றதொரு சமூகமாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுவதனை தவிர்க்க முடியாது. முஸ்லிம்கள் இந்த ஆபத்தை அலட்சியம் செய்துகொள்ள முடியாது.
கடந்த காலங்களைப் போன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி இனியும் இருப்பார்களாயின் தமது எதிர்கால சந்தியினருக்கு செய்கின்ற மிகப்பெரிய வரலாற்றுத் துரோகமாகவே இருக்கும்.
1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்த்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிலுள்ள தேர்தல் முறையையும், நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் ஒழித்து மாற்று திட்டங்களை முன் வைக்கவுள்ளார்கள்.
இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண சம்மதம் தெரிவித்துள்ளது. அக்கட்சி தமிழர்களுக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று அறுதியாக கூறியுள்ளதுடன், தமது யோசனைத் திட்டத்தையும் முன் வைத்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸும் அரசியல் மாற்றத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
ஆனால், இக்கட்சி இன்னும் முஸ்லிம்கள் சார்பான அரசியல் தீர்வு திட்டத்தை முன் வைக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு தாங்கள் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதற்கு தயார் என்று மாத்திரம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஏனைய முஸ்லிம் கட்சிகளும் அரசியல் யாப்பு மாற்றத்திற்கு ஆதரவாகவே உள்ளது.
1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய காங்கிரஸும் தெரிவித்துள்ளது. இக்கட்சிகள் வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் விகிதாசார தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
வடக்கும், கிழக்கும் இணைய வேண்டுமா அல்லது பிரிய வேண்டுமா என்பதில் தெளிவற்ற போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. இக்கட்சி அரசியல் யாப்பு மாற்றத்தில் கூட தமது வழமையான நழுவல் போக்கையே கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் சமூகத்தின் அரசியலுக்கு தலைமை வகித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியாக உள்ள முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் யாப்பு மாற்றத்திலும் நழுவல் போக்கை கடைப்பிடித்துக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூயதல்ல.
இதே வேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கும், கிழக்கும் இணைக்கப்படல் வேண்டும். இதற்கு முஸ்லிம்களும் ஆதரவு தர வேண்டும். இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும். வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஒரு முதலமைச்சருடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல என்று தெரிவித்துள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடிக்கடி தெரிவித்துக் கொண்டிருப்பதன் மூலம் அக்கட்சிக்கு புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படவுள்ள விடயதானங்கள் தெளிவாகத் தெரியும் என்று கருத முடியும்.
புதிய அரசியல் யாப்பில் எவ்வாறான அதிகாரங்கள் சிறுபான்மையினருக்கு வழங்கப்படவுள்ளன என்று இன்னும் பகிரங்கமாக தெரியாது. புதிய அரசியல் யாப்பு இவ்வாறுதான் அமையவுள்ளதென்று அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. இந்நிலையில் வடக்கும், கிழக்கும் இணையும் போது முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று எவ்வாறு இரா.சம்பந்தனால் உறுதி கூற முடியும்?
இணைந்த வடக்கு, கிழக்கை வேண்டியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன் வைத்துள்ள அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் அபிலாசைகள் குறித்து முன் வைத்துள்ள யோசனைகள் யாவை என்று தெரிவிக்காத நிலையிலும், முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகள் எந்தவொரு அரசியல் தீர்வு யோசனையையும் முன் வைக்காது இருக்கின்ற நிலையிலும் முஸ்லிம்களினால் இணைந்த வடக்கு, கிழக்கிற்கு மாத்திரமன்றி புதிய அரசியல் யாப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வடக்கும், கிழக்கும் இணைவதாக இருந்தாலும், இவ்விரு மாகாணங்களும் தனித்தனியாக செயற்படுவதாக இருந்தாலும், புதிய அரசியல் யாப்பு என்று ஒன்று வர வேண்டுமாயின் அதில் என்ன இருக்கின்றதென்று தெரிந்து கொள்ளாமல் ஆதரிக்க முடியாது. எதுவுமே தெரியாத நிலையில் முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு அளிக்குமாயின் அச்செயல் அடிமைத் தனத்திற்கு சமமாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு, கிழக்கு வேண்டுமென்று பகிரங்கமாக உரத்த குரலில் கேட்டுக் கொண்டிருக்கையில் முஸ்லிம் காங்கிரஸும் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் மௌனமாக அரசாங்கம் தருவதையோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அதிஉச்ச வேண்டுகோள்களை நிறைவேற்றும் வகையிலோ அமையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.
தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டைய அரசியல் யாப்புக்கு மாற்றமாக முஸ்லிம் கட்சிகள் புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பு மூலமாக முஸ்லிம்கள் இன்று பெற்றுக் கொண்டிருக்கும் பயன்களை விடவும் கூடுதல் பயன்கள் கிடைக்க வேண்டும். அதனை அறிந்து கொள்ள வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பில் உள்ளவைகள் தெரிய வேண்டும்.
1978 ஆம் ஆண்டின் பின்னர்தான் 20 இற்கும் குறையாத முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அது மாத்திரமின்றி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதில் முஸ்லிம்களின் வாக்குகள் மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தி வந்துள்ளன.
இதனால், முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு எந்தவொரு ஜனாதிபதியாலும் செயற்பட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பௌத்த இனவாதிகளின் அடக்கு முறைகளை கண்டு கொள்ளாதிருந்தமையால் அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார். அவருக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்து தமது வாக்குப் பலத்தை காட்டினார்கள்.
இன்று மஹிந்தராஜபக்ஷ தான் முஸ்லிம்களின் விடயங்களில் பிழையாக வழி நடத்தப்பட்டதாக வருத்தம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம்களின் ஆதரவை மீண்டும் கோருகின்றார். இந்நிலை புதிய அரசியல் யாப்பில் ஏற்படுவதற்கு எந்த அறிகுறிகளுமில்லை.
ஆகவே, முஸ்லிம்களை பொறுத்த வரை 1978 ஆம் ஆண்டை விடவும் சிறப்பானதொரு அரசியல் யாப்பு வருமா என்பது சந்தேகமாகும். இதனை விடவும் சிறப்பானதொரு அரசியல் யாப்பையே முஸ்லிம்களினால் ஆதரிக்க முடியும். ஆனால், இன்று முஸ்லிம் கட்சிகள் புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்களின் நலன்களை கருத்திற் கொள்ளாது, அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களின் எதிர்காலத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு சமமாகும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு பாதிப்பு ஏற்படாதென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
முஸ்லிம்களையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணங் கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அக்கட்சியுடன் நெருக்கமான உறவகளை பேணிக் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து புதிய அரசியல் யாப்பில் சிறுபான்மையினரின் அபிலாசைகளை உள்ளடக்கிய ஆலோசனைகளை முன் வைக்க முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கும், முஸ்லிம் காங்கிரஸிற்கும் தெரியாமல் தமது அரசியல் ஆலோசனைகளை அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும் முன் வைத்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமது கோரிக்கைகளுக்கு முஸ்லிம்களின் ஆதரவையும் கோரிக் கொண்டிருப்பதும், அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மௌனமாக இருப்பதும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றன.
புதிய அரசியல் யாப்பை வேண்டி நிற்கும் முஸ்லிம் கட்சிகளிடம் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற அந்தஸ்த்து இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று சொல்ல வேண்டும். மாவட்ட முறையில் 05 வீத வெட்டுப் புள்ளியின் அடிப்டையில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய இந்த முறை இருக்க வேண்டுமா, தேவையில்லையா என்று சொல்ல வேண்டும். 1978 ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம்கள் பேரம் பேசும் சக்தியாக உள்ளார்கள். இந்த சக்தி இருக்க வேண்டுமா, இல்லையா என்று சொல்ல வேண்டும்.
புதிய யாப்பு மாற்றத்தின் பின்னர் முஸ்லிம்களுக்கு இந்த அரசியல் சக்திகள் இருக்குமா என்று சொல்ல வேண்டும்.
கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசையாக உள்ள எங்களை நாங்களே ஆளும் தனி அலகு இருக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும். ஒளித்து நாடகமாடக் கூடாது.
முஸ்லிம் காங்கிரஸ், அகில மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும். நமக்கு எல்லாமே 1978 ஆம் ஆண்டில் இருக்கின்றது. வேறு எந்த யாப்பும் முஸ்லிம்களுக்கு இது போன்று இருக்காது. அதுதான் இணக்க அரசியல் யாப்பை தந்தது. அதுதான் முஸ்லிம்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றியது. அதுதான் 17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க.வின் ஆட்சியை மாற்றியது எனக் கேட்டுள்ளார். இவரின் இக்கேள்விகளுக்குரிய நியாயமான பதில் மூலம்தான் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் ஒரு தனி நபரின் அபிலாசைகளுக்கும், சிலரின் பதவி மோகங்களை மையப்படுத்தியுமே முடிவுகளை எடுத்துச் செயற்பட்டு வந்துள்ளன. அவ்வாறுதான் புதிய அரசியல் யாப்பு விடயத்திலும் முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகள் அமையவுள்ளன. தாங்கள் வெற்றி பெறுவதற்குரிய தேர்தல் தொகுதியை பெற்றுக் கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் வீதியில் நிறுத்துவதற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்லாம் மார்க்கம் கூட எழுத்து மூலம் உடன்படிக்கைகளை வைத்துக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருக்கையில் குர்ஆன், ஹதீஸ் என்று கட்சியின் யாப்பை வைத்துக் கொண்டு புதிய அரசியல் யாப்பு எதனைத் தரப்போகின்றதென்று தெரியாமல் அல்லது தெரிந்தும் மக்களுக்கு அதனை தெரிவிக்காமல் தங்களின் தனிப்பட்ட அபிலாசைகளுக்காக சமூகத்தின் எதிர்கால சந்ததியினரை சந்தியில் நிறுத்த முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு முஸ்லிம் அரசியல் தலைமைகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதனை முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வெளிப்படையாக சுட்டிக் காட்ட வேண்டும். முஸ்லிம்களின் அபிலாசைகள் இவைதான் என்று அடையாளப்படுத்தி அவற்றை அடைந்து கொள்வதற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும். முஸ்லிம்களின் எதிர்காலத்தை முஸ்லிம் கட்சிகளிடமோ, அரசாங்கத்திடமோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமோ ஒப்படைக்க முடியாது.
எங்களின் தலைவிதியை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இதனை ஒளித்து வைத்து நாடகமாடி, நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொண்டு, விட்டுக் கொடுப்புக்கு தயார் என்று எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு, அரசாங்கத்தின் அமைச்சர் பதவிகளுக்கு வாய் பிளந்து கொண்டு, கொந்தராத்துக்களுக்காக சேவகம் செய்து கொண்டு, தமது கடந்த கால குற்றங்களை மறைப்பதற்காக எல்லாவற்றிற்கும் தலையசைத்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளிடமும், அவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை ஒப்படைக்க முடியாது.
16 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற அந்நியர் ஆட்சிக்கு இலங்கைத்தீவு உட்பட்டிருந்தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது. இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாக விடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து 1833இல் பிரித்தானியரால் கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நாட்டின் அரசியலமைப்பு துறையில் அடித்தளத்தினை வேரூன்ற ஏதுவாக அமைந்தது. அதனையடுத்து 1912இல் குறு மக்கலம் சீர்திருத்தங்கள் 1922இல் மனிங் சீர்திருத்தங்கள், 1924இல் மனிங் டிவன்சயர் சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்குப்பின்னரான காலகட்டத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் 1944 இல் பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அமைச்சர்களால் வரையப்பட்ட யாப்பில் காணப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பின்படி இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கொண்டு முதலாவது குடியரசு யாப்பொன்று 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி கலந்துரையாடும் தீர்மானம் அனைத்து அரசியல் தலைவர்களினாலும் முன்வைக்கப்பட்டது. முதலாவது குடியரசு யாப்பின் திருத்தமாக அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகத்தோடு 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு முறை கொண்டு வரப்பட்டு அதுவே இரண்டாவது குடியரசு யாப்பாக கொள்ளப்பட்டது.
அடிப்படை உரிமைகள், நீதித்துறை எனப் பலவற்றை உள்ளடக்கிய விரிவான முறையில் இவ்வரசியல் யாப்பு தற்போது வரையில் 19 தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாவது, பதின்மூன்றாவது, பதினேழாவது, பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாவது திருத்தங்கள் அரசியல் முக்கியத்துவத்தினை பெற்று நிற்கின்றன.
2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை பாராளுமன்றில் வரைபாக முன்வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாது தோல்வியைக் கண்டது. இந்நிலையில் 1972, 1978ஆகிய குடியரசு யாப்புக்களில் தமிழ் மற்றும் தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தன.
2015 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை புதிய அரசியலமைப்பு ஒன்றினை இயற்றும் பணிகள் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏகமனதாக நிறைவேறிய பிரேரணை
அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான பிரேரணையொன்று ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணையில் இலங்கைக்கு அரசியலமைப்பொன்றை வகுத்தல் அவசியமென இலங்கை மக்கள் மத்தியில் பரந்தளவில் இணக்கப்பாடு காணப்படுகின்றது என்பது குறிப்பிடப்பட்டு 23வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாம், இரண்டாம் வாசகங்களில், இலங்கையின் அரசியலமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்களையும் ஆலோசனை களையும் பெற்று அவற்றைப் பற்றிக் கலந்தாராய்ந்து அரசியலமைப்பின் 75ஆவது உறுப்புரையின் கீழ் பாராளுமன்றத்தின் தத்துவங்களைப் பிரயோகிப்பதில் அதன் பரிசீலனைக்காக அரசியலமைப்பு சட்டமூலத்தின் வரைபைத் தயாரிக்கும் நோக்கத்துக்காக இதன் பின்னர் அரசியலமைப்புச் சபை என அழைக்கப்படும். எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இந்தச் சபை தீர்மானிக்கின்றது. பாராளுமன்றத்தின் சபாநாயகர் அரசியலமைப்பு சபையின் தவிசாளராக இருப்பார். அரசியலமைப்பு சபை ஏழு பிரதித் தவிசாளர்களைக் கொண்டதாக இருக்கும் என்பதுடன் அவர்கள் அரசியலமைப்பு சபையினால் தெரிவு செய்யப்படவேண்டும். சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில், சபைக்கூட்டங்களின் அமர்வுக்குத் தலைமை வகிப்பதற்கு அரசியலமைப்பு சபையின் பிரதித் தவிசாளர்களுக்கிடையே ஒருவரைத் தெரிவு செய்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக 5ஆவது வாசகத்தில், அரசியலமைப்பு சபை பின்வரும் உப குழுக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(அ) அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படுகின்ற இருபத்தொரு பேரை விஞ்சாத எண்ணிக்கையாகக் கொண்டதும் அவர்களில் ஒருவர் தவிசாளராகவும் கொண்டதொரு வழிப்படுத்தும் குழு.
வழிப்படுத்தும் குழு அரசியலமைப்பு சபையின் அலுவல்கள் மற்றும் இலங்கையின் அரசியலமைப்பை வரையும் பணி ஆகியவற்றுக்கான பொறுப்புக்களை கொண்டிருத்தல் வேண்டும்.
(ஆ) அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படக்கூடிய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களைக் கொண்ட அத்தகைய ஏனைய உபகுழுக்கள்.
ஆயின், ஒவ்வொரு உப குழுவும் பதினொரு பேரை விஞ்சாதவாறு உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு உப குழுவினதும் தவிசாளர் வழிப்படுத்தும் குழுவினால் நியமிக்கப்படுதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த தீர்மானத்தில் அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் முறைமை மற்றும் உருவாக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படுதல் தொடர்பிலும் 20ஆம் 21ஆம் 22ஆம் 23ஆம் வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆவது வாசகத்தில், அரசியலமைப்பு சபையினால் சாதாரண பெரும்பான்மையினால் மாத்திரம் அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள் அங்கீகரிக்கப்படுமிடத்து.
பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்பதுடன் அறிக்கையையும் அரசியலமைப்பு சட்டமூலத்தையும் ஒரு மாதத்திற்குள் சமுகமளிக்காத உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக முழுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுமிடத்து. அரசியலமைப்பு சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்பதுடன் இதற்குப் பின்னர் இதன் 21 ஆவது பிரிவின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகும் என்பதுடன் அரசியலமைப்பு சபை மற்றும் பிரேர ணையை முன்வைத்த குழு கலைந்ததாக கருதுதல் வேண்டும்.
21 ஆவது வாசகத்தில், அரசியலமைப்புச் சபை அரசியலமைப்பு வரைபு பற்றிய தீர்மானத்தை மூன்றில்இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்குமிடத்து அறிக்கை மற்றும்அரசியலமைப்பு வரைவும் வழிப்படுத்தும் குழுவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையும் உப குழுக்களும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படல் வேண்டும்.
22ஆவது வாசகத்தில், அரசியலமைப்புச் சபை மற்றும் 5ஆம் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உபகுழுக்கள் மற்றும் இந்த தீர்மானத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர் மற்றும் ஆலோசகர்களுக்கான செலவினங்கள் திரட்டு நிதியத்தில் இருந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன் அரசியலமைப்பி 150ஆவது உறுப்புரையின் பிரகாரம் அவ்விடயம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளைப் பாராளுமன்றம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
இறுதியாக 23ஆவது வாசகத்தில், சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, சமூகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் மூன்றிரண்டு பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பின்னர் அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையில் தேவைபடுத்தப்பட்டவாறு மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுமிடத்து மாத்திரம் அரசியலமைப்பு சட்ட மூலம் சட்டமாக்கப்படுதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரேரணையானது மார்ச் மாதம் 09ஆம் திகதி வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வழிநடத்தும் குழு
அதனையடுத்து அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான கட்டமைப்பு தீர்மானத்தின் 05 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி நடைபெற்றபோது அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கான 21 அங்கத்தவர்களும் நியமிக்கப்பட்டனர்.
வழிப்படுத்தும் குழுவுக்கு தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம்,கலாநிதி.விஜேதாஸ ராஜபக் ஷ, ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக ரணவக்க, டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, ஆகியோரும் எதிர்க்கட்சித்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன், டாக்டர் திருமதி துஸிதா விஜேமான்ன, பிமல் ரத்நாயக்க, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
வழிநடத்தல் குழுவின் அடிப்படை குறிப்புக்கள்
சிலோன் அரசியலமைப்பு ஆணைக்குழு ஆணை (1946 சோல்பரி அரசியல்யாப்பு), 1972 இல் இயற்றப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு, 1978ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு, 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைபு, புதிய அரசியலமைப்பினை அடிப்படை ரீதியில் வடிவமைக்க அனைத்து கட்சி பிரதிநிதித்துவ குழுவின் பிரேரணைகள் ஆகியவற்றை அடிப்படை குறிப்பு பொருளாக வழிநடத்தல் குழு எடுத்துள்ளதோடு அடிப்படை உரிமைகள் மீதான புதிய அத்தியாயங்கள் தொடர்பான குழு அறிக்கை, மற்றும் மக்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பொது பிரதிநிதித்துவ குழு அறிக்கை ஆகியவை தொடர்பாகவும் ஆழமான கவனம் செலுத்துகின்றது.
நேரடியாக கையாளப்படும் விடயங்கள்
புதிய அரசியலமைப்பின் கணிசமான பல்வேறு அம்சங்களில், சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளல், திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றினை பரிசீலித்து திருத்தியமைத்தல், அரசியலமைப்பு பிரேரணை வரைபு செய்தல் ஆகிய பணிகளை வழிநடத்தும் குழு மேற்கொள்கின்றது.
தற்போதய அரசியல் யாப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது அத்தியாயம் தொடர்பில் கலந்துரையாடல், நாட்டின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் கட்டமைப்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடுகள், காணி ஆகிய தலைப்புக்களின் கீழான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்வதென வழிப்படுத்தல் குழுவினரால் தன்னகத்தே தீர்மானிக்கப்பட்டுள்ளது.