இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று தோன்றவுள்ளது. போயா தினமான இன்று இரவு முதல் நாளை 28 ஆம் திகதி அதிகாலை வரை 6 மணி நேரமும் 14 நிமிடங்களும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பார்க்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார்.
இதன்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி பயணிப்பதுடன், பூமியின் மிக இருண்ட நிழலுக்குள் சந்திரன் வருவதாகவும் அதனால் சுமார் ஒரு மணி நேரமும் 43 நிமிடங்களும் சந்திரன் முழுமையாக இருண்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் நீடிக்கும் பூரண சந்திர கிரகண நேரத்தில் சூரியனின் சிவப்பு ஒளி அலைகள் சந்திரன் மீது படுவதால், சந்திரன் செந்நிறமாக பூமியில் உள்ளவர்களுக்கு தோன்றும் எனவும் இது இரத்த நிலவு அல்லது ‘ பிளட் மூன்’ என அழைக்கப்படுவதாகவும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன சுட்டிக்காட்டினார்.
21 ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணமாக இந்த சந்திர கிரகணம் அமைந்துள்ளதாகவும், இந்த சந்திரகணமானது ஏனைய சந்திர கிரகணங்களை விட 40 வீதம் நீண்டதாக இருக்கும் எனவும் சுட்டிக்கடடிய பேராசிரியர் சந்தன ஜயரத்ன, 2025 வரை பூரண சந்திர கிரகணம் ஒன்றினை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு இல்லை எனவும் இது அரிதான சந்தர்ப்பம் எனவும் கூறினார்.
அதனால் இன்றைய தினம் இரவு நேர வானை அவதானிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன, பாடசாலை மாணவர்களுக்கும் இதனை அவதானிக்க பாடசாலைகள் ஊடாகவேனும் அவதானிப்பு முகாம்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இந்த அரிதான மிக நீண்ட சந்திர கிரகணம் தொடர்பில் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்ததாவது,
கடந்த 100 வருடங்களில் மிக நீண்ட சந்திர கிரகணம் இதுவாகும். பூரண சந்திர கிரகணம் சில சமயங்களில் இரத்த நிலவு அல்லது ‘ பிளட் மூன்’ என அழைக்கப்படும். அதற்கு காரணம் உள்ளது. சூரியனின் கதிர்கள் எமது வளிமண்டலம் ஊடாக பயணிக்கும் போது சில
நிற கதிர்கள் வளிமண்டலத்தில் பட்டு தெறிப்படையும். இதில் செங்கதிர்கள் குறைந்த பாதிப்பையே எதிர்நோக்கும். பூரண சந்திர கிரகணம் எற்படும் போது, இந்த செந்நிற ஒளி அலைகள் சந்திரனின் மேற்பரப்பில் படும்போது சந்திரன் செந்நிறமாக காட்சியளிக்கும். இதுவே இரத்த நிலவு அல்லது பிளட் மூன் என கூறப்படுகிறது. இன்று காட்சியளிக்கும் பூரண சந்திர கிரகணமும் இரத்த நிலவு எனப்படும் வகையைச் சேர்ந்ததேயாகும்.
இந்த கிரகணம் இலங்கை நேரப்படி இன்று 27 ஆம் திகதி இரவு 10.45 இற்கு நிகழும். அந்நேரத்தில் பூமியின் அரைவாசி இருண்ட நிழலுக்குள் சந்திரன் வரும். இந் நிலைமையானது இன்று இரவு 11.54 ஆகும் போது பாதி சந்திர கிரகணமாக மாற்றமடையும். இதனை நாம் அவதானிக்கலாம்.
பூரண சந்திர கிரகணமானது, நாளை 28 ஆம் திகதி அதிகாலை 1.00 மணி முதல் அதிகாலை 2.43 மணி வரையிலான காலப்பகுதியிலேயே எமக்கு காட்சியளிப்பதுடன் கிரகணத்தின் மைய நேரமாக அதிகாலை 1.51 இருக்கும்.
அதன் பின்னர், நாளை அதிகாலை 2.43 முதல் அதிகாலை 3.49 வரை பாதி சந்திர கிரகணமாக இந்த கிரகணம் காட்சியளிப்பதுடன், படிப்படியாக சந்திரன் அதன் பின்னர் நிழலை விட்டு நீங்கிச் செல்லும் நிலையில் சந்திர கிரகணத்தின் முடிவு நாளை அதிகாலை 4.58 மணிக்கு பதிவாகும்.
இந்த கிரகண நிகழ்வு பகுதி பகுதியாக உலகின் பல நாடுகளுக்கும் காட்சியளிக்கும். எனினும் குறிப்பாக முழு கிரகரணமும் கிழக்கு ஆபிரிக்க நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், மத்தியக கிழக்கு நாடுகளுக்கு மிகத் தெளிவாக தெரியும். இதனை வெற்றுக் கண்ணால் பார்ப்பதில் எந்த சிக்கலும் இல்லை. இந்த சந்திரக் கிரகணம் நீண்ட சந்திர கிரகணமாக இருப்பதற்குக் காரணம், சந்திரன் புவியை சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றும் நீள் வட்டப் பாதையில் நீண்ட தூரத்தில் இருப்பதாகும் என்றார்.