ஹக்கீமின் முயற்சியினால் கல்முனையில் கழிவகற்றல் தொகுதி அமைக்க கனடா 33665 மில்லியன் ஒதுக்கீடு

108
(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனைப் பிராந்திய மக்களின் நீண்ட கால பிரச்சினையாகவும் கல்முனை மாநகர சபையானது திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் எதிர்நோக்கும் பாரிய சவாலாகவும் இருந்து வருகின்ற மலசலகூடக் கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வாக பொது கழிவகற்றல் தொகுதியை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் பெரும் முயற்சியினால் கனடா அரசாங்கம் 33665 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான ஆரம்பக் கலந்துரையாடல் அரச தொழில் முயற்சி, கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று வியாழக்கிழமை (26) கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது. இதில் நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்களான ஏ.சுதர்ஷன், பி.அனோஜன், எம்.எம்.நசீல், ஜே.என்.கரீம், கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் திட்ட வடிவமைப்பு குறித்து பொறியியலாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் காணி ஒதுக்கீடு மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் ஏனைய திணைக்களங்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில்;
“மிகவும் சன நெரிசல் மிக்க கல்முனைப் பிராந்தியத்தில் கழிவகற்றல் பிரச்சினை என்பது பாரிய சவாலாக இருந்து வருகின்றது. நிலத்தட்டுப்பாட்டினால் குடியிருப்புகள் நெரிசலாக இருப்பதனால் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டுள்ள மலசல கழிவுக்குழிகள் காரணமாக நிலத்தடி நீர் மாசடைவதுடன் சுற்றாடல் பாதிப்புகளும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதுடன் மக்கள் மத்தியில் நோய்கள் பரவும் ஆபத்தும் காணப்படுகிறது.
இது மாத்திரமல்லாமல் கழிவுக்குழிகள் அடிக்கடி நிரம்பி, தடங்கல்கள் ஏற்படுவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் ரூபாவுக்கு மேல் கட்டணம் செலுத்தி அதனை சீர்செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறான பிரச்சனைகளை கருத்தில் கொண்டே எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சி காரணமாக கல்முனையில் பொதுவான கழிவகற்றல் தொகுதியை அமைப்பதற்கு இப்பெருந்தொகை நிதி கிடைக்கப் பெற்றுள்ளது.
இதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோருக்கும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கும் கல்முனை வாழ் மக்களின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கின்றேன்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு எமது மாநகர சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், சம்மந்தப்பட்ட தரப்புகள் அனைவருடனும் விரைவில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும்” என்றும் முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.
SHARE