யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது.
இச் சம்வமானது வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது.
அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல், கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தியதுடன் அலுவலகத்திலிருந்த மடிக்கணணி, கைத்தொலைபேசி என்பனவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
மேலும் அலுவலகத்துக்கு முன்பாக நின்ற முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திய கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை கொக்குவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு வீட்டில் தரித்திருந்த வாகனத்தினை அடித்து நொறுக்கி தீ வைத்ததுடன் வீட்டில் உள்ள பெறுமதியான உபகரணங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சுமார் 8 பேர் கொண்ட குழு குறித்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் ஜன்னல்கள் பெறுமதியான உபகரணங்க ளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச் சம்பவம் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.