ஏறாவூரில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 537 அதிகரிப்பு

24

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் தற்போதைய கடும் வறட்சியான காலநிலைக்கு மத்தியிலும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளதென பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு நோய் கட்டுப்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் சம்பந்தமாக விபரம் வெளிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய சூழலைக் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்  ஜுலை மாத முடிவு வரை சுமார் 152 பேருக்கெதிரான வழக்குகள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஏறாவூர் நகரத்திலே டெங்கு நுளம்புகளின் தாக்கம் குறைந்திருந்தாலும் புறநகர்ப் பகுதிகளிலே குறிப்பாக ஐயன்கேணிப் பிரதேசத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி நிருவாகப் பிரிவில் இதுவரை மொத்தமாக 537 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

4 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவிலிருந்தும் இவர்கள் இவ்விதம் டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள்.

ஏறாவூர் 1 பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் 109 நோயாளிகளும், பிரிவு 2இல் 131 நோயாளிகளும், பிரிவு 3இல் 150 நோயாளிகளும், மிச்நகர் மற்றும் மீராகேணி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலே 139 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

இவற்றிலே மிச்நகர் கிராமத்திலே ஒரு மரணம் சம்பவித்துள்ளது.

தற்காலிகமாக மக்களின் பாவனையினால் வீசப்படுகின்ற பொருட்களின் துணையோடு உற்பத்தியான டெங்கு நுளம்புகளின் வீதமே அதிகரித்திருக்கின்றது என்பது ஆய்விலும் அவதானிப்பிலும் தெரியவந்த விடயங்களாகும்.  இது ஒட்டு மொத்த டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய சாத்தியங்களில் 25 சத வீத இடத்தைப் பிடித்திருக்கின்றது.

கிணறுகள், குழாய்க் கிணறுகள், மூலமாக 16 சதவீதமும், வீட்டின் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் மூலமாக 11 சதவீதமும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாவதாக பூச்சியியலாளர்கள் தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

அதேவேளை, சுகாதாரப் பகுதியினர் நடவடிக்கை எடுத்து எவ்வளவுதான் வழக்குத் தாக்கல் செய்தாலும் பொதுமக்கள விழிப்படையாதவரை டெங்கு நோயின் தாக்கத்தை இந்தப் பிராந்தியத்திலிருந்தே ஒழிப்பதென்பது கேள்விக்குட்பட்டதாகவே இருந்து கொண்டிருக்கும்.

டெங்கு நுளம்புகளை ஒழிப்பதில் பல்வேறு சவால்களை சுகாதாரத் துறையினர் எதிர்நோக்கி வருகின்றனர்.

நகரத்தை கிரமமாகத் துப்புர செய்வதில் சம்பந்தப்பட்ட சாராரின் குறைந்தளவான ஆதரவு, தொடங்கப்பட்டு அரைகுறையாக கைவிடப்பட்டுள்ள நிருமாண வேலைகள், கவனிப்பாரின்றி கிடக்கும் அரச மற்றும் தனியார் தரிசு நிலங்கள், டெங்குக் குடம்பிகளை உண்ணும் மீன்களுக்கான பற்றாக்குறை, பருவ காலத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றங்கள், விழிப்புணர்வுகளுக்கான கூட்டங்களுக்கு கல்வித் திணைக்களம் உட்பட ஏனைய பொறுப்புவாய்ந்த நிவனங்களின் குறைந்தளவான ஆதரவு, சுகாதாரத்துறை அலுவலர்களின் நடவடிக்கைகளுக்கு காட்டப்படும் எதிர்ப்புகள் இவ்வாறான காரணிகளும் டெங்குத் தாக்கத்தை ஒழிப்பதில் சவாலுக்குரியதாக அமைந்து விடுகின்றன” என்றார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் பாடசாலை மாணவர்களிடையே டெங்கு விழிப்புணர்வுப் போட்டிகள் இடம்பெறுவதாகவும் வெற்றி பெறுவோர்  பாராட்டி பணப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

SHARE