நல்லூரில் வியாபார நிலையங்களுக்கு கட்டுப்பாடு

23

யாழ்.நல்லூர் ஆலய திருவிழா கால வியாபார நிலையங்களுக்கு இம்முறை கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என யாழ்.மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு நேற்று காலை நடைபெற்றது. இதன் போது நல்லூர் ஆலய திருவிழா காலங்களில் வியாபார நிலையங்களுக்கு அனுமதி வழங்குது தொடர்பில் பேசப்பட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.நல்லூர் ஆலய சுற்றாடலில் மொத்தமாக வியாபார நிலையங்கள் அமைப்பதற்கான அனுமதிகள் கேள்வி கோரல் ஊடாக வழங்கப்படவுள்ளன. ஒரு பகுதி கேள்விகோரல் முடிந்துள்ள நிலையில் மறு கேள்வி கோரலுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலய நிர்வாகத்தினர் இவ்வியாபார நிலையங்கள் தொடர்பில் ஒரு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். குறிப்பாக ஆலய நிர்வாகத்தினால் ஆலய வெளி வீதியில் ஆலயத்தின் புனித தன்மையினை கருத்தில் கொண்டு அங்கு கட்டப்படும் சிவப்பு வெள்ளை துணிகளின் எல்லைக்கு அப்பால் வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.

அக் கோரிக்கையினை ஏற்றே இம்முறை வியாபார நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்படும்.

மேலும் கடந்த காலங்களில் வியாபார நிலையங்களுக்கான கேள்வி கோரலின் போது, வியாபார நிலையங்களின் உரித்தை பெறுகின்றவர்கள், பின்னர் மாநகர சபையிக்கு செலுத்திய பணத்தினை விட பன்மடங்கு பணத்திற்கு அந்த உரிமத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனால் இம்முறை கேள்வி கோரலின் போது அவ்வியாபார நிலையத்தை பெற்றுக் கொள்பவரே ஆலய திருவிழா முடியும்வரை அவ்வியாபார நிலையத்தை நடத்த முடியும்.

வேறு யாரும் அவ்வியாபார நிலையத்தை நடத்துவது, அல்லது வேறு யாருக்கும் உரிமத்தை விற்பனை செய்வது தொடர்பில் கண்டறியப்பட்டால் உடனடியாக அவரின் வியாபார உரிமம் ரத்துச் செய்யப்படும் என்றார்.

SHARE