தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் அந்தவாக்குகளால் எந்தவொரு சிங்களவரும் நன்மையடையக்கூடாது என்ற சிந்தனையுடன் வாக்குகளை செல்லுபடியற்றவாக்குகளாக்க வேண்டும்.

123

 

இந்தியாவில் சம்பந்தன், முடிவெடுக்க முடியாத நிலையில் கூட்டமைப்பு! இதுவா ஜனநாயகம்?(ஆசிரியர் பார்வை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் அரசியல் கட்சி வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மக்களின் ஜனநாயக அரசில் கட்சியாக, தம்மை தமிழ்மக்களின் எகப்பிரதி நிதிகள் என அறிமுகப்படுத்தக் கூடிய அளவிற்கு மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சியாக, சர்வதேசத்தில் தாயக மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தக் கூடிய கட்சியாக இன்று இலங்கையின் அரசியலில் பரிணமித்துள்ளது.

இந்த அரசியல் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து சர்வதேசத்திலும் தமிழ் மக்களுக்கு அங்கிகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர், தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தீர்க்கதரிசனத்தில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தாயகத்தில் விடுதலைப் புலிகளின் மறைவிற்குப் பின்னர் தென்கிழக்காசிய நாடுகளின் பூகோள அரசியலில் புத்துயிர்பெற்று தற்பொழுதும் தமிழ்மக்களின் ஆதரவுடன் செயற்பட்டுவருகின்றது.

anna_tnaஇலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(சுரேஷ் அணி), தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ),தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட் – தலைமை சிதார்த்தன்)அகிய கட்சிகளின் கூட்டிணைவுடன் விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் கடந்த 2010ஆம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தமது இருப்பை நிலைநாட்டியுள்ள இக்கட்சி தற்பொழுதும் தன்னை ஜனநாயக அரசியல் கட்சியாகவே அறிமுகப்படுத்தி வருகின்றது.

இதனால் இக்கட்சிக்கு சர்வதேசத்தில் தற்பொழுது செயற்பட்டுவருகின்ற புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புக்களின் உதவிகளும் கிடைத்து வருவதால் தமிழ்த் தேசிய அரசியலில் பலமான, தமிழ் மக்ளுக்கான அரசியல் கட்சியாகவும் இக்கட்சி பரிணமித்துள்ளது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் இக்கட்சியின் ஊடாக தமிழ்த் தேசிய அரசியலில் வழிப்போக்கர்களாக உட்புகுந்தவர்களின் முறையற்ற செயற்பாடுகளால் தலைமைகள் பொருத்தமான முடிவுகளை ஜனநாயக ரீதியல் எடுக்க முடியாத நிலையும் இக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. இது தற்பொழுது தமிழ் மக்களை பேரிடரான நிலைக்குத் தள்ளியுள்ளது.குறிப்பாக கட்சிக்குள் ஜனநாயகமற்ற நிலையும், முடிவுகளை எடுக்க முடியாத நிலையும் காணப்படுகின்றமை அக்கட்சியை ஜனநாயக அரசியல் கட்சியாகப் பார்க்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

IMG_5686-1இந்நிலையில், எதிர்வரும் 08ஆம் திகதி இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலில் போட்டியிடுகின்ற மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களைக் கருத்திலெடுக்காத நிலை வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது.

ஆனால், தமிழ்த் தேசியிக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கருத்திலெடுக்காது தன்னிச்சையாக முடிவெடுத்து மைத்திரியை ஆதரிக்குமாறு மறைமுகமாக அறிவித்து வருகின்றது. இவ்வாறு செய்யுமாறு அமெரிக்காவும் இந்தியாவும் தம்மிடம் வாக்குப்பெற்றுள்ளதாகவும் இக்கட்சியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இவ்வாறு செய்வதால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கப் போகின்றது?, அமெரிக்காவும் இந்தியாவும் ஏதாவது எழுத்து மூலமான உடன்படிக்கையை கூட்டமைப்புடன் செய்துள்ளதா? போன்ற விடயங்களை வெளிப்படுத்த கூட்டமைப்பின் தலைகள் தவறியுள்ளனர்.

ஆனால், இதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளதாகவும் பேசப்படுகின்றது.

இந்நிலையில், இக்கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஆனந்த சங்கரி வெளிப்படையாக மைத்திரியை ஆதரிக்குமாறு இன்று அறிவித்துள்ளார். இதேபோல் தர்மலிங்கம் சித்தாத்தன் கூட்டமைப்பின் முடிவே தனது முடிவாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். ஏனைய அரசியல் தலைவர்கள் இரகசிய சந்திப்புக்களிலும், மக்களை ஏமாற்றும் நோக்குடனான பகிரங்க சந்துப்புக்களிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இவ்வாறான ஒரு அரசியல் சூழலில் மக்களுடன் இருந்து வழிப்படுத்தி ஜனநாயக உரிமைகளை பெற்றுக் கொடுக்கவேண்டிய சம்பந்தன் ஐயா தற்பொழுது தனது குடம்பத்துடன் இந்தியாவில் தங்கியிருக்கின்றார். இவர் ஏதோவொரு வைத்தியக் காரணத்திற்காக இந்தியாவில் தங்கியுள்ளதைப் போன்ற தோற்றப்பாட்டையும் சிலர் காண்பிக்க முற்படுகின்றனர். இது எமது தமிழ் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் செய்கின்ற அப்பட்டமான துரோகமாகும்.

அரசியல் கட்சிகள் தம்மைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்களைச் சரியாக வழிப்படுத்த வேண்டும். அனால் தமிழ் அரசியல் கட்சிகள் உரியகாலத்தில் அதனைச் செய்யத் தவறியதால் தாயகத்தில் தமிழ்மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தற்பொழுது செய்துவருகின்றனர்.

r.shampanthanநாளைக் காலை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்னமும் கூட்டமைப்பினர் உத்தியோக பூர்வமாக தமிழ் என்ன செய்யவேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் போன்ற விடயங்களைத் தெரிவிக்கத் தவறியுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாட்டிற்கு திரும்பிவந்த பின்னரே இதுதொடர்பாக அறிவிப்போம் என கூறிவருகின்றமை இக்கட்சிக்குள் காணப்படுகின்ற ஜனநாயக மறுப்பை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே தமிழ்மக்கள் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டு தங்களுடைய வாக்குரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் அந்தவாக்குகளால் எந்தவொரு சிங்களவரும் நன்மையடையக்கூடாது என்ற சிந்தனையுடன் வாக்குகளை செல்லுபடியற்றவாக்குகளாக்க வேண்டும்.

இதேவேளை எதிர்காலத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படத் தவறுகின்ற அரசியல் தலைமைகளை தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கவேண்டியதும் தமிழ் மக்களின் கடமையாகும்.

-இராவணன்-

SHARE