உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் தான் அதீதமாக காயம் அடைந்ததைப் போல் நடித்ததாக, பிரேசில் அணி வீரர் நெய்மர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ரஷ்யாவில் 21வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் நடந்து முடிந்து. இதில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி பல்வேறு விமர்சனங்களை சந்தித்தது.
மெக்சிகோ-பிரேசில் இடையேயான போட்டியின் போது பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் பந்தை விரட்டிக்கொண்டிருந்தார். அப்போது மெக்சிகோ வீரர் மிக்கல்லாயுன் உடன் நெய்மருக்கு மோதல் ஏற்பட்டது.
இதில் கீழே விழுந்த நெய்மர், உருண்டு ஓடி வலியில் துடித்தார். அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால், ஆட்டம் 4 நிமிடங்கள் பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மெக்சிகோ பயிற்சியாளர் ஒசாரியோ, இது கால்பந்தாட்டத்திற்கு வெட்கக் கேடானது. ஒரே ஒரு விளையாட்டு வீரரால் நாம் நிறைய நேரத்தை இழந்துவிட்டோம். இது போன்ற செயலை நாம் அடிக்கடி தடுத்து நிறுத்தினோம்.
கால்பந்தாட்ட உலகிற்கு இது மிகவும் மோசமான எடுத்துக்காட்டாகும் என நெய்மர் வலியால் துடித்தது போல் நடித்ததாக கண்டனம் தெரிவித்தார்.
அதன் பின்னர், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் நெய்மரை கடுமையாக கிண்டல் செய்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நெய்மர் கூறுகையில்,
‘ஆம் நான் மைதானத்தில் அதீதமாக காயம் அடைந்தது போல் நடித்தேன். தோல்வியின் விரக்தியில் இருந்ததால் அவ்வாறு மிகையாக நடந்து கொண்டேன். விரைவில் நான் மிகச் சிறப்பாக விளையாடி பிரேசிலுக்கு பெருமை சேர்ப்பேன்’ என தெரிவித்துள்ளார்.