மைத்திரியால் புனித தளமாக பிரகடனப்படுத்தப்படும் தமிழர் தாயகப் பகுதி

36

மன்னார் மாவட்டத்தில் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் புனித பூமியாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

குறித்த பகுதியை புனித பூமியாக்கி அதனை அபிவிருத்தி செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேற்றையதினம் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ மக்களின் புனித வணக்கத்தலமான மடு தேவாலயம், பௌத்த மற்றும் இந்து மக்களினதும் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது.

வருடாந்த மடு திருவிழாவின்போது மட்டுமன்றி வருடம் முழுவதும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளும் மடு தேவாலயத்திற்கு வருகை தருகின்றனர்.

யுத்த காலத்தில் ஏற்பட்ட பாரிய சேதங்களினாலும் நீண்டகாலமாக பராமரிப்பு பணிகளோ அல்லது புனரமைப்பு பணிகளோ மேற்கொள்ளப்படாதமையினாலும் மடு தேவாலயத்தை சுற்றியுள்ள பிரதேசம் பின்தங்கிய, வசதி குறைந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அப்பிரதேசத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள், சுகாதார வசதிகள், நீர் விநியோகம் முதலிய வசதிகளை மேம்படுத்துவதற்கும் இளைப்பாறும் இடங்கள் உள்ளிட்ட தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதற்கும் ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

SHARE